ஆரி அர்ஜுனன்,பவித்ரா, ,தீப்ஷிகா,சுப்பிரமணிய சிவா, தலைவாசல் விஜய்,ஆதித்யா கதிர் மற்றும் பலர் நடித்துள்ளனர். எல்.ஆர்.சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு- லட்சுமணன்.தரண்குமார் இசையமைத்துள்ளார். ராம் சுதர்சன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் சுரேஷ் கல்லேரி..மனோ கிரியேஷன் சார்பில் ஏ .ராஜா தயாரித்துள்ளார்.7த் ஸ்டுடியோ கண்ணன் வெளியிடுகிறார்.
ரணதீரன் என்கிற ஆரி அர்ஜுனன் மும்பையில் இருக்கிறார். அவரது காதலி அனுபமா என்கிற அனு அவசரமாகச் சென்னைக்கு அழைக்கிறார் . செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கிருஷ்ணமூர்த்தி என்பவரைப் பார்க்கச் சொல்கிறார்.அதன்படி சென்னை வருகிறார் ஆரி. அதற்கு பிறகு அனு தொடர்பில் வராமல் போய்விடுகிறார். இந்த நிலையில் சென்னை வந்த ஆரி ராயல் டவுன் என்ற ஓர் அடுக்குமாடிக் குடியிருப்பில் நாலாவது மாடியில் சென்று தங்குகிறார் .ஆனால் அங்கே ஏதோ ஓர்அமானுஷ்யம் இருக்கிறது. பலரும் அங்கு செல்ல வேண்டாம் என்கிற போதும் இவர் எதார்த்தமாக அங்கே போய்த் தங்குகிறார் .அங்கே அவருக்குக் கெட்ட கனவுகள் வருகின்றன. அதன்படி அவரை யாரோ மாடியிலிருந்து தூக்கிப் போடுவது போலவும் பல கொலைகள் நடப்பது போலவும் கனவுகள் வருகின்றன .ஒரு கட்டத்தில் உண்மைச்சம்பவம் போலவே நடக்கின்றன. அதனை அங்கே வரும் யூடியூப் படப்பிடிப்புக் குழுவினர் படமாக எடுத்து விடுகின்றனர். இந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றி ஆரி நண்பர்களுடன் கூறியபோது யாரும் நம்பவில்லை. அந்த இடத்தில் போய்ப் பார்த்தால் எல்லாம் சாதாரணமாக இருக்கின்றன. அவரால் உண்மையா மாயையா என்று நம்ப முடியவில்லை .குழப்பமாக இருக்கிறது.ஆனால் திரும்பத் திரும்பப் பார்த்தபோது தனது அனுபவத்தை நினைத்து அவர் உறுதியாக நம்புகிறார். இப்படிப்பட்ட சூழலில் கனவு பற்றி விசாரிப்பதற்காக மருத்துவரிடம் செல்கிறார். நினைவுகளின் தொகுப்பாகவும் நடக்க வேண்டியவையாகவும் சில கற்பனையாகவும் கனவுகள் வரும் என்றும் டாக்டர் கூறுகிறார். அதன் பிறகு என்னென்ன நடக்கின்றன என்பதுதான் 134.28 நிமிடங்கள் கொண்ட ’4 த் ப்ளோர்’ படத்தின் மீதிக் கதை. 
இப்படத்தில் ரணதீரனாக ஆரி அர்ஜுனன் வருகிறார். அந்த ஐடி நிறுவன ஊழியருக்கான தோற்றம் உடல் மொழி பேச்சு என அச்சு அசலாகப் பொருந்துகிறார். நடிப்பிலும் ஒன்றும் குறைவில்லை. தனது குழப்பத்தை எண்ணி அவர் கலங்கும் போதும், எனது அன்பு காதலிக்கு பிறந்த தன் மகளை நினைத்து உருகும் போதும் தொலைந்து போன காதலியைத் தேடும் போதும் அவர் தேர்ந்த நடிப்பினை வெளிப்படுத்தி உள்ளார்.
தீரன் ஜோடியாக அனுபமா பாத்திரத்தில் வரும் நடிகை பவித்ரா சுமாரான தோற்றம் நல்ல நடிப்பு என்று வெளிப்படுத்தி உள்ளார்.ஆரியின் தோழியாக வரும் இன்னொருவர் தீப்ஷிகா நல்ல தோற்றத்தில் இருக்கிறார். அவருக்கு நடிப்பு வாய்ப்புகள் குறைவு. அவரது நண்பர்களாக வருபவர்களும் போதுமான அளவிற்கு நடிப்பை வழங்கி உள்ளனர்.
யூடியூப் காரராக வருபவர்கள் சற்று மிகை நடிப்பு காட்டிச் சிரிக்க வைக்க முயல்கிறார்கள். ஆனால் சிரிப்பு வரவில்லை.பெரும்பாலான காட்சிகள் அந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் நடக்கின்றன. இருந்தாலும் காட்சியனுபவத்தைக் கொடுக்கத் தவறவில்லை .இருந்தாலும் படத்தின் பரபரப்பையும் சரிவர பராமரித்துள்ளார்கள்.
திரைக்கதையின் வேகமான பயணத்தைப் பின்னணி இசை தூக்கி நிறுத்துகிறது .ஒரு அமானுஷ்யக் கதையில் காதல் , பிரிவு, தந்தை மகள் பாசம்,கனவு அதன் விளைவுகள் போன்றவையும் வெளிபட்டுள்ளன.
மொத்தத்தில் அமானுஷ்யம் கலந்த ஒரு கதையாக இந்த படத்தை இயக்குநர் திறமையாக எடுத்து இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும் அமானுஷ்ய ரசிகர்கள் இந்த ‘ஃபோர்த் ஃப்ளோரி’ல் பயணிக்கலாம்.


