‘ஆழி ‘திரைப்படம் விமர்சனம்

சரத்குமார் ,இந்திரஜித் ஜெகஜித்,தேவிகா சதீஷ், வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா மற்றும் பலர் நடித்துள்ளனர்.மாதவ் ராமதாசன் இயக்கியுள்ளார்.ஜாசி கிப்ட் இசையமைத்துள்ளார். ரசூல் பூக்குட்டி ஒலியமைத்துள்ளார். 888 புரொடக்ஷன் செல்லுலாய்டு கிரியேஷன்ஸ் சார்பில் சஜித் கிருஷ்ணன் தயாரித்துள்ளார் . ஹரி உத்ரா வெளியிடுகிறார்.

சமுத்திரத்தின் ஓசை என்கிற பெயரில் இந்த ‘ஆழி’ திரைப்படம் உருவாகியுள்ளது.மூர்த்தி என்கிற பெயர் கொண்ட சரத்குமார் நாகர்கோவிலில் பல போதை மருந்துகள் போன்ற திரை மறைவு வேலைகள் செய்யவராக இருக்கிறார். எதிர்த்துக் கேட்க ஆள் இல்லாமல் அவர் கோலாச்சுகிறார். அப்படிப்பட்ட நிலையில் அவரைப் பற்றி நிகில்முருகன் ஒரு யூடியூப் பதிவராக அம்பலப்படுத்த நினைக்கிறார். அவரை அடித்து துவைத்து சாலையில் வீசுகிறார்கள். அப்படிப்பட்ட சரத்குமாரின் மகள் கல்லூரியில் படிக்கிறார்.அவரைக் கல்லூரியில் உடன்படிக்கும் மாணவனான இந்திரஜித் ஜெகஜித் காதலிக்கிறார். இதை யாரோ புகைப்படம் வீடியோ எடுத்து சரத்குமார் செல்லுக்கு அனுப்பி விடுகிறார்கள். அதைப் பார்த்தவர் கொதித்து எழுகிறார் .எழுந்தவர் இந்திரஜித் ஜெகஜித்தை தனியே வரும்போது துரத்தி அடித்து மயக்கம் அடையச் செய்து கடத்திக்கொண்டு சென்றவர் நடுக்கடலில் பெரிய மீன்பிடிப்படகில் ஐஸ் அறையில் ஒளித்து வைக்கிறார்.மயக்கம் தெளிந்து இந்திரஜித் தப்ப முயன்ற போது அவரை அடித்துத் துவைக்கிறார். இப்படிப்பட்ட நிலையில் இருவரும் மோதிக் கொள்கிறார்கள். ஒரு கட்டத்தில் சரத்குமாரின் கால் அந்த படகின் எந்திரத்து பற்சக்கரத்துக்குள் சிக்கிக் கொள்கிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதுதான் 116.44 நிமிடங்கள் கொண்ட ஆழி படத்தின் மீதிக் கதை.

சரத்குமார் ,மூர்த்தி பாத்திரத்தில் நன்றாகப் பொருந்தி இருக்கிறார். அவரது பயங்கரமான தோற்றமும் முகத்தை மறைக்கும் நீண்ட முடியும் தாடியும் அதிகம் பேசாத முரட்டுத்தன சுபாவமும் அந்தப் பாத்திரத்தை சரியாகவே வெளிப்படுத்துகின்றன. அப்படி ஒரு தோற்றமும் நடிப்பும் அவருக்கு கை கொடுத்து உள்ளது சிறப்பு. அவரது மகளாக வரும் நடிகை தேவிகா சதீஷ்அளவாக வந்து இதமாக மனதில் அமர்கிறார். சரத்தின் மகளைக் காதலிக்கும் வாலிபனாக அருள் பாத்திரத்தில் வரும் நடிகர் இந்திரஜித் ஜெகஜித் புதுமுகம் போல் தோன்றாமல் அந்தப் பாத்திரத்திற்கு உயிரூட்டியுள்ளார். படத்தில் வையாபுரி ,ஸ்ரீஜித் ரவி, பிர்லா போஸ், தாமரைச்செல்வி, சர்ஜின், மைதிலி சத்யராஜ், பினிஸ் பாபு, பிஜு மாவுங்கள் வர்கீஸ், தீனா பாட்டியா மற்றும் பலரும் துணைபாத்திரங்களில்  நடித்துள்ளனர்

சரத்குமார் மகளைக் காதலித்த காதலனை கடத்துவது படகுக்குள் அடைப்பது வரை சென்ற கதை அதற்கு பிறகு படகுக்குள்ளேயே சுற்றிச் சுழல்கிறது.இது சற்றே சலிப்பூட்டுகிறது.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் அந்த மீன்பிடிப் படகில் உள்ளறையில் நிகழ்கின்றன.  நடுக்கடலில் நிகழ்வதாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. படகையே உள்ளே வெளியே எனச் சுற்றிச்சுற்றிக் காட்டுகிறார்கள்.
மூர்த்தி, அருள் சம்பந்தப்பட்ட காட்சிகள் படகில் உள்ளேயே நிகழ்கின்றன. ஆனால் நாம் அருகில் இருந்து பார்ப்பது போல் அக்காட்சிகளை அணுக்கமாக ஒளிப்பதிவு செய்து அசத்தியிருக்கிறார்கள். ஒவ்வொரு காட்சியும் கடல் அலையில் அசையும் படகில் இருப்பதை உணர வைக்கிறது.

சரத்குமார் வளர்க்கும்  லக்கி என்கிற நாய்  ஒரு கதாபாத்திரம் போலவே படத்தில் வருகிறது.
எஜமான் மீது விசுவாசம் கொண்டு அது படகில் தவிக்கும் தவிப்பு நம்மை கலங்க வைக்கும்.

படத்தில் நல்ல அர்த்தமுள்ள வரிகளைக் கொண்ட பாடல்கள் ஒலிக்கின்றன.’அழகே உயிர் நீயடி ’நல்ல மெலடி. இப்படிப் பாடல்கள் நன்றாக இருக்கின்றன .ஆனால் இடைவேளைக்குப் பிறகு உச்சகட்டத்தை நோக்கிச் செல்லும் போது ஒலிக்கிற பாடல்கள் வேகத்தடைகளாக உணர வைக்கின்றன.
மொத்தத்தில் ’ஆழி’ படம் நடுக்கடலில் ஒரு கதையின்  பயணம் என்று கூறலாம்.