‘அனோமி ‘ திரைப்பட விமர்சனம்

பாவனா ,ரஹ்மான் ,ஷெபின் பென்சன் ,விஷ்ணு அகஸ்தியா ,பினு பப்பு,அர்ஜுன் லால் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தை ரியாஸ் மராத் எழுதி இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவாளர்: சுஜித்சாரங் ,இசை : ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் ,ரீ ரெகார்டிங் : ஃபசல் ஏ பேக்கர்,படத்தொகுப்பு: கிரியன் தாஸ்.

தயாரிப்பாளர் : குமார் மங்கட் பதக் , அபிஷேக் பதக் , பிளிட்ஸ்க்ரி ஏஜி பிலிம்ஸ் , பாவனா & ஆதித் பிரசனாகுமார்.
படைப்புத் தயாரிப்பாளர் : அபினவ் மெஹரோட்ரா.

அனோமி என்றால் என்ன?

அனோமி , சமூகங்கள் அல்லது தனிநபர்களில், தரநிலைகள் மற்றும் மதிப்புகளின் முறிவின் விளைவாக அல்லது நோக்கம் அல்லது இலட்சியங்களின் பற்றாக்குறையின் விளைவாக ஏற்படும் நிலையற்ற தன்மை . இந்த வார்த்தையை பிரெஞ்சு சமூகவியலாளர் எமில் டர்கெய்ம் அறிமுகப்படுத்தி,  தனது ஆய்வில்தற்கொலை . நடத்தையை ஒழுங்குபடுத்துவதற்குத் தேவையான சமூகத் தரநிலைகளின் முறிவின் விளைவாக ஒரு வகையான தற்கொலை (அனோமிக்) ஏற்படுகிறது என்று அவர் நம்பினார் .ஆக விரக்தியின் வழிபட்ட தற்கொலை எண்ணம் சார்ந்ததாய் இதைப் புரிந்துகொள்ள முடியும்.அப்படித்தான் இந்தப் படத்தின் கதையும் உருவாகி இருக்கிறது.

எதிர்பாராத விதத்தில் பெற்றோரை இழந்த 23 வயது வாலிபன் ஜீயோன் மன அழுத்தத்தில் இருக்கிறான். பெற்றோரை இழந்ததால் அந்த வலியும் ஏக்கமும் அவனை அடிக்கடி தற்கொலை எண்ணத்திற்குத் தள்ளுகிறது.மருத்துவ ஆலோசனையைப் பெற்று வருகிறான்.அம்மாவின் குரல் காதில் ஒலிப்பதாகவும் அம்மா அழைக்கிறாள் அழைக்கிறாள் என்று தவிக்கிறான்.இதை உணர்ந்து அவனது அக்கா சாராவும் அவனைப் பரிவுடன் கவனித்துக் கொள்கிறாள். இப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் காணாமல் போகிறான். தேடிய போது ஒரு இடத்தில் இறந்து கிடக்கிறான்.அவன் அருகே மயக்கவியலில் பயன்படுத்தப்படும் மருந்து பாட்டில் கிடைக்கிறது.போலீஸ் அது தற்கொலை என்று சுவாரஸ்யமின்றி வழக்கை முடிக்கப் பார்க்கிறது. ஆனால் சாரா விடவில்லை .இதே போல் தொடர்ந்து இதேமுறையில் நீரஜ் என்ற வாலிபனும் ஷாஹினா என்ற பெண்ணும் இறக்கவே,இதன் தொடர்ச்சியை மோப்பம் பிடித்த சாரா இது தற்கொலை அல்ல கொலை என்று முடிவு செய்து துப்பறிய ஆரம்பிக்கிறாள். போலீசும் ஒருபக்கம் தேடவே, இப்படித் தற்கொலை எண்ணம் கொண்டவர்களைக் குறி வைத்து அவர்களை வேறொரு தீய சக்தி தொடர்ந்து கொலை செய்து வருவது தெரிகிறது. தொடர்ந்த தேடலில்   ஒருவனைக் கண்டுபிடிக்கிறார்கள்.அவன் இது கொலை அல்ல என்றும் இது ஒரு ஆராய்ச்சி என்றும் கூறுகிறான். ஏனென்று கேட்கிற போது அவன் கூறும் சொற்கள் அதிர்ச்சி ஊட்டுகின்றன. இப்படிப்பட்ட கதையின்  முடிவு என்ன என்பதுதான் 151.54 நிமிடங்கள் கொண்ட ‘அனோமி’ படத்தின் மீதிக் கதை.  சற்று இடைவெளிக்குப் பின் பாவனா இதில் சாரா பாத்திரத்தில் நடித்துள்ளார். படம் முழுக்க ஒரு பொறுப்பான அக்காவாகவும் தடயவியல் ஆய்வாளராகவும் தனது தோற்றம் உடல் மொழி,முகபாவனை என நடிப்பில் கச்சிதமாக வெளிப்பட்டுள்ளார்.
இவ்வளவு பரிவாக அன்பாக நடந்து கொண்டும் தன் தம்பி இறந்துவிட்டான் என்பதை,தற்கொலை செய்து கொண்டு விட்டான் என்பதை உணர்கிறபோது, அவனைத் தான் சரியாகக் கவனிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சியில் மறுகும் போதும்,
காவல்துறை அஜாக்கிரதையாக இருப்பது கண்டு பொங்கும்போதும் நடிப்பில் மிளிர்கிறார்.அவர் ஒரு பொறுப்புள்ள அக்காவாகவும், தடயவியலில் தீவிரமாகத் துப்பு துலக்கும்போது ஒரு அதிகாரியாகவும் தனது பாத்திரத்தை முழுமை செய்திருக்கின்றார்.

ஏசிபி ஜிப்ரானாக ரகுமான் நடித்துள்ளார்.வழக்குகளை அலட்சியமாக அவர் கையாளும் திமிர் பிடித்த அதிகாரியாக வருகிறார். அவரது ஆணவம் சீண்டப்படும் போது அவர் களத்தில் குதிக்கிறார். அந்தப் பாத்திரத்தில் அவர் சிறப்பாகவே நடித்துள்ளார்.
பாவனாவின் தம்பி ஜீயோனாக வரும் ஷெப்பின் பென்சன் மன அழுத்தம் கொண்ட வாலிபனாகத் தனது பாத்திரத்தைச் சரியாக வெளிப்படுத்தியுள்ளார். கொலையாளி பிரசாத் ஈஸ்வராக வரும் விஷ்ணு அகஸ்தியா தோற்றத்தால் மிரட்டி நடிப்பாலும் ஈர்க்கிறார். யாரும் எதிர்பாராத பாத்திரத்தில்  டாக்டர் அல்பீயாக வரும் அர்ஜுன்லால் அதிர்ச்சிகரமான பாத்திரத்தில் வெளிப்பட்டு பார்ப்பவர்களைத் திகில் கொள்ள வைக்கிறார்.

பொதுவாகத் திரைப்படங்களில் புலனாய்வு விசாரணை என்பது ஒரு டெம்ப்ளேட் ரகமாக இருக்கும்.இந்தப் படத்தில் விசாரணைக் காட்சிகளைத் துல்லியமாக உருவாக்கி இருக்கிறார்கள். அதில் உள்ள படிநிலைகளைக் காட்டும் வகையில் இதில் அழகாகக் காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.புலனாய்வுப் பயணத்தில், வெவ்வேறு இடங்களில் நடக்கும் வெவ்வேறு கொலைகளை எப்படி ஒப்பிட்டு ஒரே புள்ளியில் இணைக்கிறார்கள் என்பதையும் காட்டியுள்ளார்கள்

மயக்கவியல் மருந்தாகப் பயன்படும் அனஸ்தடிக் ட்ரக்ஸ் பற்றியும் அதன் கூறாக இருக்கும் Propofol பற்றியும் பேசப்படுகிறது.படத்தில் மரணத்தைப் பற்றிய தேடுதல், மரணம் பற்றி ஆராய்ச்சி, மரணத்தின் ருசியை ரசிப்பது போன்ற மனவியல் கோளாறுகள் பேசப்பட்டுள்ளன. தற்கொலை எண்ணத்தில் ஆழ்ந்த சில மனப்பிறழ்வு கொண்டவர்களையும் இதில் காட்டியுள்ளார்கள்.

படத்தில் மனநிலை மருத்துவர்கள், புலனாய்வுப் பணிகள், தடயவியல் துறையினரின் பல்வேறு நுணுக்கங்கள், போலீஸ் விசாரணையின் போக்குகள் மனப்பிறழ்வு நோயாளிகளின் நடத்தைகள் போன்றவை பற்றிக் காட்சிகள் வருகின்றன அவை எதார்த்தமாக இருக்கின்றன.

படத்தின் காட்சிகளில் தரமேம்பாட்டுக்கு உதவி இருக்கிறது ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங்கின் ஒளிப்பதிவு.ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இனிமையான பாடல்களைக் கொடுத்துள்ளார் .பின்னணி இசை பசல் ஏ பேக்கர்.வழக்கமான வாத்திய ஒலி இல்லாமலும் புதுமையாகவும் பின்னணி இசை அமைக்கப்பட்டுள்ளது.

படத்தொகுப்பாளர் கிரியன் தாஸ் படத்தில் சிறு தொய்வு கூட ஏற்படாமல் தடதடவென விரையும் வகையில் படத்தொகுப்பு செய்துள்ளார் .

மொத்தத்தில் ஒரு புலனாய்வுக் கதையைச் சிறப்பான வெளிப்பாடுகள் மூலம் ஒரு திரையரங்க அனுபவமாக மாற்றி இருக்கிறார் இயக்குநர் ரியாஸ் மராத் .

மொத்தத்தில்  இது திரைப்படம் பார்ப்பவர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்