கலையரசன், தீபா பாலு, பால சரவணன், கஜராஜ் ,விஜய் சத்யா, ஆதவ் சந்திரா, அகரன் வெங்கட், விஜயலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை நடித்துள்ளனர்.
வி ஆர் துதி வாணன் இயக்கி உள்ளார் .சாந்தன் இசையமைத்துள்ளார்.ஆர்பி பிலிம் சார்பில் ஆர்பி பாலா கௌசல்யா பாலா தயாரித்துள்ளனர்.
கலையரசன் குடும்பத்தினர்,கலையரசன் மனைவி தீபா பாலு நிறைமாத கர்ப்பமாக இருப்பதை முன்னிட்டு, அவர்கள் வழக்கப்படி மலைப்பகுதியில் இருக்கும் நிறைசூலி என்கிற சிறு தெய்வம் உள்ள கோவிலுக்கு கோழி வெட்டி சாமி கும்பிடப் புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறார்கள்.குடும்ப வினை உறுப்பினர்கள் முன்னே சென்று கொண்டிருக்க கலையரசனும் தீபா பாலுவும் தாமதமாகப் புறப்பட்டு செல்கிறார்கள்.புறப்பட்டதிலிருந்தே தீபாவுக்கு தீபாவின் மனதிற்குள் ஓர் பதற்றம் நிலவுகிறது.அதை தவிர்த்து விட வேண்டும் என்று அவரது உள்ளுணர்வு சொல்கிறது. ஆனாலும் கலையரசன் அவரை அழைத்துச் செல்கிறார்.அவர்கள் காதல் திருமணம் செய்து கொண்டவர்கள் . வெளியூரில் இருந்தவர்கள் சாமிக்கு பொங்கல் வைத்து பூஜை செய்வதை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்திருக்கிறார்கள்.கோயிலுக்குச் செல்லும் போது கலையரசன் – தீபா பாலு இருவருக்கும் எதிர்பாராத வகையில் ஒரு பிரச்சினை வருகிறது. அது என்ன? அதில் இருந்து அவர்கள் மீண்டார்களா என்பதைச் சொல்வதுதான் ‘கொலைச் சேவல்’ படத்தின் மீதிக் கதை.
கதாநாயகனாக நடித்திருக்கும் கலையரசன்,சற்று எடை கூடி இருந்தாலும் அந்தப் பாத்திரத்தில் அழகாகப் பொருந்துகிறார் .இயல்பான நடிப்பையும் வெளிப்படுத்தியுள்ளார்.
கதாநாயகியாக நடித்திருக்கும் தீபா பாலு, அறிமுக நடிகையாக இருந்தாலும் பார்த்தவுடன் பிடித்துப் போகும் குடும்பப் பாங்கான முகம் பாந்தமான தோற்றம் என்று வருகிறார். நடிப்பிலும் குறை வைக்கவில்லை.படத்தின் உச்சகட்ட காட்சியில் அவர் பார்ப்பவர்களைக் கலங்க வைக்கிறார்.
நாயகனின் நண்பராக நடித்திருக்கும் பால சரவணன், நகைச்சுவை நடிப்பிலிருந்து குணச்சித்திரத்தை நோக்கிப் பயணப்பட்டுள்ளார்.
குரூரத்தையும் வன்மத்தையும் மறைத்துக்கொண்டு வசனமே இல்லாமல் வந்து கலங்க வைக்கிறார் கஜராஜ்.
விஜய் சத்யா, ஆதவ் சந்திரன், அகரன் வெங்கட், விஜலட்சுமி, ஜெயலட்சுமி, ராஜாமணி, தனலட்சுமி, மஞ்சுளா, கயல், மணிமேகலை ஆகியோர் மண்ணின் மைந்தர்ளாக பயணித்திருக்கிறார்கள்.
பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவு கிராமத்து அழகையும், அங்குள்ள மக்களின் மனதில் உள்ள வன்மத்தையும் அழகாகப் படம் பிடித்துள்ளது.
முதல் பாதியில் படம் குறைந்த வேகத்தில் பயணிப்பது ஒரு பின்னடைவு. வன்முறைக் காட்சிகளை நீளமாகக் காட்டுவதும் ஓர் உறுத்தல்.
சாந்தன் இசையில் பாடல்களும் பின்னணி செய்யும் கதாபாத்திர உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளன.
காதலுக்கு எதிரான வன்முறையைச் சொல்ல வந்த இயக்குநர் ,படம் தொடங்கியவுடன் அதைக் கூறாமல் மெல்ல மெல்ல அதை உணர வைத்து இருக்கிறார் இயக்குநர் வி.ஆர்.துதிவாணன்.
பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லாமல் ,கதாபாத்திரங்களுக்கு நியாயம் செய்யாமல் சோகத்துடன் முடித்து இருப்பது சற்றே நெருடுகிறது.
அதிகம் பிரபலமாகாத நடிகர்களை வைத்துக்கொண்டு ஒரு அழுத்தமான கதையைக் கொடுத்துள்ள இயக்குநர் வி.ஆர்.துதிவாணனை முதிர்ச்சியான பட உருவாக்கத்திற்காகப் பாராட்டலாம்.
மொத்தத்தில், ‘கொலைச்சேவல்’ ரத்தக்களரி.


