‘நீ ஃபார் எவர்’ ( Nee Forever திரைப்பட விமர்சனம்

சுதர்சன் கோவிந்த், அர்ச்சனா ரவி, பிராது , நோபல் ஜேம்ஸ், வித்யா, ஓய்.ஜி. மகேந்திரன், நிழல்கள் ரவி, எம்.ஜே. ஸ்ரீராம், ரித்திகா ஸ்ரீநிவாஸ் நடித்துள்ளனர்.

அசோக் குமார் கலைவாணி எழுதி இயக்கியுள்ளார் .இசை அஸ்வின் ஹேமநாத், ராஜா பட்டாச்சார்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். நாகார்ஜுன் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் :வர்ணாலயா ஜெகதீசன், ஜென் ஸ்டுடியோஸ் சார்பில் புகழ் மற்றும் ஈடன் தயாரித்துள்ளனர்.

கதாநாயகன் அஜய்யின் அம்மா பெற்றோரை மீறிக் காதல் திருமணம் செய்து கொண்டு காதல் கணவரைப் பிரிந்து கைக்குழந்தையுடன் தந்தை வீட்டுக்கு வருகிறார். அதற்குப் பிறகு தாத்தாவின் முழுக் கட்டுப்பாட்டில் அம்மா நாயகன் அக்கா என்று வளர்கிறது குடும்பம். இந்த நிலையில் ஒரு கட்டுக்குள் இருந்த நாயகன் சுதந்திரம் இல்லாமல் தவிக்கிறார். அவர் வளர்ந்து ஆளாகி, ‘நீ ஃபார் எவர்’ என்ற பெயரில் ஒரு சாட்டிங் ஆப் உருவாக்குகிறார். அதில் வரும் ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படுகிறது .அது காதலாக மாறுகிறது இடையில் பிரிவு வருகிறது. ஏன் பிரிந்தார்? என்று குழப்பம் வருகிறது முடிவு என்ன என்பதுதான் 133.19 நிமிடங்கள் கொண்ட இந்த ‘நீ ஃபார் எவர்’  படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் சுதர்சன் கோவிந்த் ஆஜானுபாகுவான தோற்றம், துறு துறுப்பான உடல் மொழி மன இறுக்கத்தால் வளர்ந்த தாழ்வுணர்ச்சி கொண்ட குணச்சித்திரம் என்று அந்தக் கதாபாத்திரத்தில் பொருந்தியுள்ளார். காதலில் விழும்போதும் பிரிவில் தவிக்கும் போதும் குடும்பத்தினரிடம் பாசத்தில் உருகுகும் போதும் என்று தனக்கான நடிப்பு வாய்ப்புகளை ஓரளவுக்கு பயன்படுத்தி உள்ளார் என்றே சொல்ல வேண்டும். நாயகியாக அர்ச்சனா ரவி,  இயக்குநர் வாய்ப்பு தேடும் மதி என்கிற பாத்திரத்தில் வருகிறார். பொலிவான தோற்றம் எதையும் இயல்பாக எடுத்துக் கொள்ளும் குணச்சித்திரம் என்று சமகாலப் பெண்களைப் பிரதிபலிக்கிறார். நாயகனுக்கு ஏற்ற நாயகியாகப் பொருந்தி உள்ளார். நாயகனின் நண்பர்களாக வரும் பிராது,நோபல் ஜேம்ஸ் இருவரும் தங்களால் முடிந்த அளவிற்குச் சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார்கள் .சில இடங்களில் சிரிக்கவும் வைக்கிறார்கள். கதாநாயகனின் தாத்தாவாக வரும் ஒய்.ஜி. மகேந்திரன் அலட்டிக்கொள்ளாமலேயே அந்த பிடிவாதக்கார தாத்தா ஆறுமுகம் பாத்திரத்தில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். கதாநாயகனின் தாயாக நடித்திருக்கும் நடிகை,கதாநாயகனின் பிரிந்து போன தந்தையாக வரும் நிழல்கள் ரவி ஆகியோர் ஏற்று இருக்கும் பாத்திரங்கள் மனதில் பதிபவை.

காதலை இந்தக்காலத்  தலைமுறை இளைஞர்கள் எப்படிப் புரிந்து கொள்கிறார்கள். அதில் வரும் குழப்பங்கள் புரிதலற்ற தருணங்கள் போன்றவற்றை திரைக்காட்சிகளாக்கி திரைக்கதை அமைத்துள்ளார் இயக்குநர் .திரும்பத் திரும்ப வரும் சில காட்சிகளும் சற்று நீளமான காட்சிகளும் படத்திற்குள் சில குறைகள் என்று கூறலாம் .

வண்ணமயமான ஒளிப்பதிவு ஆங்காங்கே பாடல்கள் எனப் படத்தை ஓர் இளமைக் கொண்டாட்டமாக மாற்ற முயற்சி செய்துள்ளார் இயக்குநர் அசோக் குமார் கலைவாணி . அவர் கேட்ட வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ராஜா பட்டாச்சார்ஜா, இளமையின் மணம் கமழும் பாடல்களை ஆங்காங்கே சிதறவிட்டுள்ளார் இசையமைப்பாளர் அஸ்வின் ஹேமநாத் .பின்னணி இசையிலும் அவர் குறைவைக்கவில்லை. கண்களை உறுத்தாத ஒளிப்பதிவு ஆங்காங்கே குறையில்லாத பாடல்கள், இசை என்று இருந்தாலும் ஏதோ ஒரு போதாமையை உணர முடிகிறது .மேலும் சில அழுத்தமான காட்சிகளை உருவாக்கியிருந்தால் இந்தப் படம் மேலும் அடர்த்தி உள்ளதாக மாறியிருக்கும். மொத்தத்தில் ’நீ ஃபார் எவர்’ இளைஞர்களைக் குறி வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் என்று கூறலாம்.