‘சாத்தான்- தி டார்க்’ திரைப்பட விமர்சனம்

FJ என்கிற ஃப்ரெட்ரிக் ஜான்,  ஐரா பாலக் , சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி நடித்துள்ளனர் . மணிகண்டன் ராமலிங்கம் இயக்கியுள்ளார்.  அஸ்வின் கிருஷ்ணா இசையமைத்துள்ளார்.கலை இயக்கம் சுரேந்திரன் செல்வராஜ்.ஈபி எப் பிக்சர்ஸ் சார்பில் எட்வர்ட் ராஜன் தயாரித்துள்ளார்.

ஒரு முன்னெச்சரிக்கை:இது வயது வந்தோருக்கான ஏ சான்றிதழ் பெற்ற படம். 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பார்க்க வேண்டும்.இந்த ஏ சான்றிதழ் ஆபாசத்திற்கானது அல்ல. குரூரம், வன்முறை போன்றவற்றிற்கானது

இந்தப் படத்தின் முன் கதையாக 1600களில் கிழக்கு இந்தியக் கம்பெனி இந்தியாவிற்கு வந்ததிலிருந்து பூர்வீக வரலாறு சொல்லப்படுகிறது. பிறகு 1800 கள் என்று தொடங்கி ஏறக்குறைய சமகாலம் வரை வந்து நிற்கிறது கதை.அதாவது ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வியாபாரம் செய்ய வந்த போது தங்களது கிறிஸ்துவ மதத்தை மட்டும் அல்ல சாத்தான் பற்றிய நம்பிக்கைகளையும் பரப்பினார்கள் என்கிறது கதை.

படத்தின் கதை தான் என்ன என்று பார்த்தால், கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சிக் காலத்தில்,இந்தியாவில் கிறிஸ்தவ மதத்தை பரப்பிய போது அதன் தாக்கத்தைப் பெற்றார்கள்.மதத்தைப் போலவே அவர்களிடமிருந்து நம் நாட்டு மக்கள் வேறொன்றையும் கற்றுக் கொண்டார்கள்.ஆங்கிலேயர்கள் இறைவனுக்கு எதிராக உள்ள சாத்தான் வழிபாட்டையும் இங்கே பரவ விட்டார்கள் .அப்படி அஸ்தினாபுரம் என்கிற ஊரில் இறைவனை விட்டு விட்டு சாத்தானை வழிபடும் ஒரு கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது .அதனால் பிற ஊர்களில் இருந்து அவர்கள் துண்டிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.அங்கு இறைவழிபாட்டை விட எதிர்மறைத் தெய்வமான சாத்தானையே வழிபட்டார்கள். அதற்கானதாக குரூரமான முறையில் வழிபாடுகள் சடங்குகள் உயிர்ப்பலிகள் என்று தொடர்ந்து கொண்டிருந்தன.பல்வேறு உயிர்கள் பலியிடப்பட்டன. நரபலியும் அதில் அடக்கம்.அப்படிப்பட்ட அந்த அஸ்தினாபுரத்தில் நடந்த ஒரு தோல்வியுற்ற மாந்திரீகச் சடங்கு, தலைமுறை தலைமுறையாக அந்தக் கிராமத்தை வாட்டி வதைக்கும் கொடும் சாபமாக மாறி நிற்கிறது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு இளைஞன் தான் காதலிக்கும் பெண்ணை அதன் கொடிய பிடியிலிருந்து காப்பாற்ற, இந்தப் பயங்கரமான கடந்த காலத்தை எதிர்கொள்ள வேண்டிய சூழலில் தள்ளப்படுகிறான் .அவன் அந்த இருண்ட காலத்தை எப்படி எதிர்கொண்டு கடந்தான்? அவனது காதல் என்னவானது? என்பதே 144.28 நிமிடங்கள் கொண்ட இந்த சாத்தான் படத்தின் மீதிக் கதை.படம் தொடங்கியதுமே சாத்தான் பற்றிய தொல் கதைகள் பற்றிய விவரங்கள் வருகின்றன.
அப்படி இருக்கும்போது,அந்த ஊரில் உள்ள மெர்சிலின் என்ற பெண்மணிக்கு இரண்டு மகள்கள் இருக்கிறார்கள் .இருவரும் பள்ளி செல்லும் பிராயத்தில் இருக்கிறார்கள். இரண்டாவது மகள் சிறுமி ஊமை.தங்கள் தாய்க்கு ஏதோ அசாதாரணமான உணர்வு உள்ளதையும் அதில் அவள் சிக்கிக் கொண்டிருப்பதையும் மகள்கள் உணர்கிறார்கள்.ஒரு வித பயத்தோடும் கலக்கத்தோடும் சகித்துக் கொண்டு அப்படியே வாழ்கிறார்கள். மூத்த மகள் அலிஷாவைத் தான் நாயகன் சாகர் காதலிக்கிறான். அப்படி இருக்கும் போது அந்த மெர்சிலின் எனப்படும் தாய்க்குள் ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி புகுந்து ஆட்டி வைக்கிறது .அதனால் பல கொடூரங்களைச் செய்கிறாள். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தொடர்ந்து அந்த ஊரில் பல மரணங்கள் நிகழ்கின்றன.அதில் ஓர் ஒற்றுமை இருக்கிறது.சில மரணங்களுக்கு காரணமே அறிய முடியவில்லை.மர்மம் நீடிக்கிற இந்தச் சூழலில் இந்த மரணங்களுக்குப் பின்னே உள்ள உண்மையை அறிய போலீஸ் முயல்கிறது. அதற்கு இந்தச் சூழலில் சிக்கிக் கொண்ட நாயகனும் உண்மையை கண்டறிய உதவுகிறான். முடிவு என்ன என்பது தான் இந்த சாத்தான் படத்தின் கதை செல்லும் பாதை.

இந்தப் படத்தில் பேய் பிசாசுகள் காட்டப்படவில்லை. ஆனாலும் ஏதோ ஒரு அமானுஷ்யமான சக்தி அல்லது மனப் பிறழ்வு கதாபாத்திரங்களை ஆட்டுவிக்கும்படி காட்சிகள் உள்ளன .சாத்தான் வழிபாட்டுக்கு உள்ளானவர்கள் மனம் செயற்படும் விதத்தைக் கொடூரமாகக் காட்டியுள்ளார்கள் .

தங்களது வழிபாட்டை நிறைவேற்றிக் கொள்ள அவர்கள் மேற்கொள்ளும் செயல்கள் அதிர வைப்பவை.சடங்குகளுக்குப் பிறகு காணிக்கையாகத் தங்கள் நாக்கை அறுத்துக் கொள்வது, கழுத்தை அறுத்துக் கொண்டு மரணத்தையே காணிக்கையாக்குவது என்று செய்யும் சமர்ப்பணம் கொடூரமாக இருக்கிறது. இந்த கதையின் பலர் கொடூரமாக இறக்கிறார்கள். அதன் பின்னணி என்ன என்பதைப் பற்றியும் கதை சொல்கிறது.

திகில் படங்களில் கொலைகாரர்கள் மன நோயாளிகள் என்று பார்த்திருக்கிறோம். இல்லாவிட்டால் பேய் பிசாசு மனிதர்களை ஆட்டிவைக்கும் ரகத்திலான படங்களை பார்த்திருக்கிறோம் .ஆனால் இது ஒரு மாறுபட்ட பாதையில் பயணம் செய்துள்ளது. இந்தக் கதை கண்மூடித்தனமான பக்தி உணர்வே வேறு வகையானதாக மாறினால் எப்படி இருக்கும் என்று சொல்கிறது. இந்தப்  படத்தில் நடித்துள்ள ஃப்ரெடரிக் ஜான், ஆர்யா பாலக் , சாந்தினி தமிழரசன், மோனா பெட்ரே, ஸ்ரீஜா ரவி போன்றவர்கள்
அந்த பாத்திரங்களாகவே மாறி நடித்துள்ளார்கள். எந்த ஒரு பிரதான பாத்திரத்தையும் முன்னிறுத்தாமல் அச்சமூட்டும் ஒரு திகில் கதையாக இந்த படம் உருவாகி உள்ளது .படத்தில் வரும் சில வழிபாடுகள் சடங்குகள் அதீதமாகத் தெரியலாம். ஆனால் பக்திக்குக் கண்ணில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

அதற்கு ஏற்ற வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பாலா ஜி ராமசாமி .கொடூரமான காட்சிகளுக்கேற்ற வகையில் நம்மை பீதிக்கு உள்ளாக்குகிறது   அஸ்வின் கிருஷ்ணாவின் பின்னணி இசை.

ஹாலிவுட்டில் இது மாதிரியான படங்கள் சகஜம். தமிழுக்கு இது புதிதாகத் தெரியலாம்.மொத்தத்தில் கொடூரங்களை ரசிக்கும் திகில்பட பிரியர்களுக்கு இந்தப் படம் பிடிக்கும்.