‘காக்கி சர்க்கஸ்’ இணையத்தொடர் விமர்சனம்

முனீஷ்காந்த் , சுபாஷ் செல்வம் ,ராஜேஷ் மாதவன், கௌதமி ,வின்சு ரேச்சல் ஷாம், சாவித்திரி ,அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உஷர்,விக்னேஷ்வர், அருண்குமார்,சித்திரசேனன் நடித்துள்ளனர்.நீரஜ் ரெவி ஒளிப்பதிவு செய்துள்ளார். விபின் பாஸ்கர் மற்றும் சேவியர் இசையமைத்துள்ளனர்.ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரித்துள்ளார்.

சீரியஸ் போலீஸ்  சில்லறை திருடன் என்கிற தலைப்பிலான கதையாக சொல்லப்படும் வகையில் வந்திருக்கும் இந்த ‘காக்கி சர்க்கஸ்’ இணையத் தொடரின் கதை என்ன?
இது ஒரு திருடன் போலீஸ் கதை என்றாலும் திருடன் போலீஸ் ஆகியோரின் மன அசைவுகளை ஆணவ மோதல்களை வெளிப்படுத்தும் கதையாகவும் அமைந்துள்ளது.

அந்த சிறைச்சாலையின் ஜெயிலராக இருப்பவர் முனீஷ்காந்த், அடிப்படையில் ஓர் எழுத்தாளர். குற்றவாளிகளின் மீது கடுமை காட்டாமல் மிதமான பார்வை கொண்டவர். சிறைச்சாலையில் ஒரு நூலகம்  வைத்திருக்கிறார். கைதிகளிடம் தான் எழுதிய புத்தகங்களைக் கொடுத்து படிக்க வைத்து மன மாற்றம் நிகழும் என்று நம்புகிறார்.அது மட்டுமல்ல தனது படைப்புகளின் மூலம் குற்றங்களின் தீர்வுகளையும் கண்டுபிடிக்க முயற்சி செய்கிறார் .அவரிடம் சுபாஷ் செல்வம் காவலராக பணியாற்றுகிறார். அந்தச் சிறைச்சாலையின் வளாகத்தில் ஒரு சிறிய கோவில் இருக்கிறது. அங்குள்ள உண்டியலில் உள்ள பணம் காணாமல் போய்விடுகிறது. அதைத் திருடியவன் யார் என்று கண்டுபிடிக்க ஜெயிலரும் காவலர்களும் களத்தில் இறங்குகிறார்கள்.அவருடன் பணியாற்றும் சுபாஷ் செல்வமும் களத்தில் இறங்குகிறார். ஒரு கட்டத்தில் திருடன் யார் என்று தெரிகிறது. சிறைச்சாலை உண்டியல் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அம்பலமாவதற்குள் அந்த இடத்தில் பணத்தை வைத்து சரிக்கட்டுகிறார்கள்.இதனால் தனிப்பட்ட முறையில் சுபாஷ் செல்வம் கடனாகிறார்.குற்றவாளி யார் என்று மோப்பம் பிடித்து சுபாஷ் செல்வம் கண்டுபிடிக்கிறார். இருந்தாலும் முனீஷ் காந்தின் அலட்சியமான போக்கால் குற்றவாளி தப்பித்து ஓடி விடுகிறான்.ஒரு கட்டத்தில் குற்றவாளி இணையத்தொடர் பார்க்கும் ரசிகர்களுக்குத் தெரிந்து விட்டாலும் தப்பித்து ஓடும் அவன் எப்படிப் பிடிபடுகிறான் என்பதுதான் தொடரின் உச்சகட்ட காட்சி.

இந்தத் தொடரில் ஜெயிலராக முனீஸ்காந்த் நடித்துள்ளார்.ஆனால் கதையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் குற்றவாளி அருகே நெருங்கும்போதும் அவர் மீது சந்தேகப் படாமல் இருக்கிறார் . போலீஸ் யாரையும் நம்பாது அனைவரையும் சந்தேகம் கொண்டுதான் பார்ப்பர்.
ஓர் எழுத்தாளர் என்பவர் உள்ளுணர்வு ஆதிக்கம் கொண்டவர் . அவருக்கு பல்வேறு சிந்தனைகள் திறக்க வேண்டும். ஆனால் ஒரு பலவீனமான எழுத்தாளராக அவர் காட்டப்படுகிறார்.அது ஓர் உறுத்தலாக உள்ளது. எனவே அவரது பாத்திரம் ரசிகர்களை ஏமாற்றம் தருகிறது .அங்கே பணியாற்றும் காவலராக வரும் சுபாஷ் செல்வம் நடிப்பிலும் குறை இல்லாமல் செய்துள்ளார். அவர் திருடனைக் கண்டுபிடிக்கச் செய்யும் முயற்சிகளையும் அதன் வழியே அடையும் ஏமாற்றங்களையும் ரசிகர்களுக்கும் கடத்துகிறார்.
சுபாஷின் காதலியாக  வின்சு ரேச்சல் ஷாம் வருகிறார். பொலிவான தோற்றத்தில் அவர்  வருவது குறைந்த எண்ணிக்கையிலான காட்சிகள் என்றாலும் கவனிக்க வைக்கிறார்.

தொடரில் திருடனாக நடித்திருக்கும் ராஜேஷ் மாதவன் தனது தோற்றத்தாலும் உடல் மொழியாலும் அனாயாச நடிப்பாலும் கவனிக்க வைக்கிறார் .இவன் வறுமைக்காக திருடுபவன் அல்ல.

திருடுவது என்பது திரில் அனுபவமாக எண்ணித் திருடுகிற இந்தத் திருடன் மனம் உணர்வு ரசிகர்களுக்குப் புதுசு.
”நான்தான் திருடன் உன்னால் என்ன பண்ண முடியுமோ செஞ்சுக்கோ”என்று சுபாஷிடம் சவால்விடும் காட்சியில் அவர் நடிப்பில் மிரட்டுகிறார்.

சவப்பெட்டி தயாரித்து விற்பனை செய்கிறவராக வர்கீஸ் பாத்திரத்தில் அப்துல் லீ வருகிறார் .அவர் இயல்பான நடிப்பால் ஈர்க்கிறார். பாமர மொழியோடு யூடியூபராக வரும் அந்த இரண்டு நடிகைகளும் கலகலப்பாக வந்து மனதில் பதிகிறார்கள். 

சாவித்திரி ,அம்ருதா, அப்துல் லீ, மருதுபாண்டியன், ராகேஷ், உஷர்,விக்னேஷ்வர், அருண்குமார்,சித்திரசேனன்  என்று துணைப் பாத்திரங்களில் நடித்துள்ளவர்களும் கதை ஓட்டத்தில் பங்கேற்று உதவியிருக்கிறார்கள்.

நீரஜ் ரெவியின் ஒளிப்பதிவும் விபின் பாஸ்கர் மற்றும் சேவியர் இசையமைத்துள்ள இசையும்  இணைந்து தொடரை உயிர்ப்புள்ளதாக மாற்றுகின்றன.

படப்பிடிப்பிடங்களும் துரத்தல் காட்சிகளும் படக்குழுவினரின் உழைப்பைக் காட்டுகின்றன.

இணையத் தொடர் என்கிற வடிவத்துக்கான பொதுவாக வைக்கப்படும்  அத்தியாயம் ஒவ்வொன்றிற்குமான போலி சஸ்பென்ஸ் வைக்காமல் திரைப்படத்திற்கான திரைக்கதை போல் எழுதப்பட்டு ஒரு திரைப்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது இந்தத் தொடர் .

மொத்தத்தில் ’காக்கி சர்க்கஸ்’ சக்சஸ் முயற்சி என்றுதான் சொல்ல வேண்டும்.