‘TN 2026 தங்க நட்சத்திரம்’ திரைப்பட விமர்சனம்

நட்டி நட்ராஜ், சிருத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த் ,எம். எஸ். பாஸ்கர், இளவரசு, தம்பி ராமையா, ரெடின் கிங்ஸ்லி, லொள்ளு சபா மாறன், பிக்பாஸ் முத்துக்குமரன், ஆதித்யா கதிர், சித்ரா லட்சுமணன், தலைவாசல் விஜய், வையாபுரி, விஜி சந்திரசேகர், ஸ்ரீஜா ரவி, இந்திரஜா ரோபோ சங்கர் ஆகியோர் நடித்துள்ளனர்.
உமாபதி எஸ்.ராமையா இயக்கியுள்ளார். கதை திரைக்கதை தம்பி ராமையா, ஒளிப்பதிவு :பி.ஜி.முத்தையா,இசை: தர்புகா சிவா,எடிட்டிங்:  ஆரல் ஆர். தங்ம். தயாரிப்பு: கண்ணன் ரவி குழுமத்தின் சார்பில் கண்ணன் ரவி.

நட்டி குல்கந்த் குமார் என்ற பெயரில் மெல்ல மெல்ல வளர்ந்து பெரிய நட்சத்திரம் ஆகிறார்.
பொள்ளாச்சியில் செல்வாக்குள்ள பெரிய  ஜமீன்தாராக இருக்கும் சிவலிங்கம் ஆகிய தம்பி ராமையாவுக்கு  அவரைப் பிடித்துப் போனதால் நட்புக் கொண்டு அவரை வளர்ந்து வரும் நிலையில் அவரை ஊக்கப்படுத்தி கோல்டன் ஸ்டார் என்று பட்டம் எல்லாம் கொடுத்து பெரிய ஆளாக்குகிறார். அடுத்த எம் ஜி ஆர் குல்கந்த் குமார் என்று நம்புகிறார். அதற்காக தனது செல்வத்தை எல்லாம் இழக்கிறார். நட்டி வளர்ந்ததும் தம்பி ராமையாவை மதிக்காமல் அவமரியாதை செய்கிறார்.ஆனாலும் பொறுத்துக் கொண்டு அவரை பெரிய அரசியல்வாதி ஆக்குவது என்று கட்சி தொடங்க வைக்கிறார் தம்பி ராமையா.
குல்கந்த் குமாரை ஆத்திக நாத்திக முன்னேற்ற கழகம் என்கிற பெயரில் கட்சி தொடங்க வைக்கிறார்கள். ஒரு நடிகராக மக்களிடையே பிரபலமாகி இருக்கும் அவருக்கு தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிக்கும் ஆசையைத் தூண்டுகிறார்கள். ஏகப்பட்ட புள்ளி விவரங்கள் கொடுத்து வியூகம் அமைக்கிறார்கள். அப்படிப்பட்ட குல்கந்த் குமார் திரை நடிகராக இருந்து அரசியல்வாதியாகும் போது பல்வேறு சிக்கல்களையும் துரோகங்களையும் சந்திக்கிறார். கடைசியில் அவர் என்ன முடிவு எடுக்கிறார் ? அவர் தேர்தலில் வெற்றி பெற்றாரா ? என்பதை
அதிரடி நகைச்சுவைகள் கலந்து 138.28 நிமிடங்களில் சொல்வதே ‘TN 2026 தங்க நட்சத்திரம் ‘ திரைப்படம்.  

வட இந்தியா மத்தியப் பிரதேசத்தில் இருந்து இங்கு வந்து அறிமுகமாகி வளரும் நடிகராக குல்கந்து குமாராக நட்டி நடித்துள்ளார். ஆரம்பத்தில் வட இந்திய தமிழில் பேசுவது போல் கொஞ்சி கொஞ்சிப் பேசி அந்த பாத்திரமாக நமக்குள் ஊடுருவுகிறார். பிறகு மெல்ல மெல்ல தமிழ் கற்றுக்கொண்டு பெரிய நடிகராக வளர்கிற பாதையில் நட்டி நன்றாக பயணப்பட்டுள்ளார்.
திரையுலகில் யாரும் சுலபத்தில் வர முடியாது. வளர முடியாதுஅவமானங்களையும் வலிகளையும் தாங்கித்தான் மேலே வர முடியும் என்பதைக் காட்சிகள் ஆக்கியிருக்கிறார்கள். அப்படி முதலில் படப்பிடிப்புக்கு அவர் சைக்கிளில் வருவது முதல் உச்சமாக வளர்வது வரை காட்சிகள் உள்ளன.அனைத்து வளர்ச்சி சந்தர்ப்பங்களிலும் ஒரு மனிதனுக்குள் நடக்கும் மன மாற்றங்களை நட்டி பாத்திரத்தின் மூலம் வெளிப்படுத்தி உள்ளார் இயக்குநர். இப்படி ஒரு சாதாரண நபர் நடிகராகி உயர்ந்து வளரும் பயணம் சொல்லப்படுகிறது.இந்தப் பயணத்தில் அந்த நடிகராகச் சரியாகப் பொருந்தி  நடை உடை பாவனைகளில் அநாயாசமாகத் தன்னை வெளிப்படுத்தி உள்ளார் நட்டி நடராஜ்.
அதே நேரம் ஒரு நடிகர் மீது ஈர்ப்பு கொண்டு அவரை வளர்த்து உருவாக்கும் ஜமீன்தார்  சிவலிங்கம் மன்றாடியார் பாத்திரத்தில் தம்பி ராமையா வருகிறார் . உப்புசப்பு இல்லாத பாத்திரங்களில் , பேசும் வசனங்களைக் கூட தம்பி ராமையா தனது பங்களிப்பால் உயர்த்திப் பிடிப்பவர்.
அவரே கதை திரைக்கதை வசனம் எழுதி உருவாக்கியதால் அதற்கான இடங்களை அவரே உருவாக்கிக் கொண்டு நடித்துள்ளார் .ஒவ்வொரு சின்ன அசைவிலும் சரியாகவும் அவர் நடித்துள்ளார்.வெறும் நக்கல் நையாண்டி என்று நகைச்சுவை மட்டும் அல்லாமல் அவமானம் துரோகம்  ஏமாற்றம் வீழ்ச்சி வலிகள் நெகிழ்ச்சி போன்ற அனைத்தையும் வெளிப்படுத்தும்படியான வாய்ப்புகளை ஏற்படுத்தி அதில் களமாடி இருக்கிறார்.

குல்கந்த் குமாருக்கு உதவும்  அவரது கட்சியைச் சேர்ந்தவராக இன்னொரு அரசியல்வாதியாக எம் எஸ் பாஸ்கர் வருகிறார் .அவர் தெற்கத்தி மொழி பேசிக்கொண்டு அந்தப் பாத்திரத்தில் புகுந்து விளையாடி உள்ளார். இன்னொரு சகாவாக வரும் இளவரசு இதில் முடிந்த அளவிற்கு தன்னை வெளிப்படுத்தியுள்ளார்.தம்பி ராமையா எம் எஸ் பாஸ்கர் இளவரசு போன்றவர்கள் சண்டைக் காட்சிகளில் நடிப்பதாகக் கற்பனை செய்ய முடியுமா? இதில் அதைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.
நட்டியின் காதலியாக சிருத்தா ராவ்,இன்னொரு நாயகியாக சாந்தினி தமிழரசன் படத்தில் வருகிறார்கள்.

ஒரு நடிகன் உருவாகும் விதத்தை படிப்படியாகவும் அவன் கடந்து வரும் பாதையையும் படத்தில் அழகாகவும் நகைச்சுவையாகவும் சித்தரித்துள்ளார்கள். அவன் அரசியலுக்கு வரும்போது அத்தனை நாள் ரசித்தவர்கள் கைதட்டியவர்கள் எல்லாம் எப்படி எதிரிகளாக மாறுகிறார்கள் என்பதையும் ,ஒரு ஹீரோ கட்சி ஆரம்பிக்கும் வரை எல்லாருக்கும் கொண்டாடுவார்கள் . ஆரம்பித்த பிறகு எல்லாரும் துண்டாடுவார்கள் என்பதையும் காட்டியுள்ளார்கள். நேற்றுவரை ஆராதித்த மனிதர்கள் எப்படி நிறம் மாறுகிறார்கள் என்பதையும் காட்டுகிறார்கள்.
அவனை பல்வேறு சந்தர்ப்பங்கள் எப்படி ஆளாக்குகிறது இவற்றையெல்லாம் சந்தித்து கடந்து மேல வர வேண்டும் என்பதற்கான காட்சிகளையும் வைத்துள்ளார்கள்.
சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒவ்வொன்றும் அதிரடி சரவெடியாக சிரிப்பு வெடியாக இருக்கிறது. சமகால அரசியலை நினைவூட்டும் வகையிலும் வேறு யாரையும் பொருத்திப் பார்க்கும் வகையிலும் இருக்கிறதே தவிர குறிப்பிட்ட எவரையும் வைத்து பொருத்திப் பார்க்க முடியாது . ஒவ்வொரு காட்சியும்ஏதோ ஒரு வரலாற்றை நமக்கு நினைவு படுத்துகிறது. ஆனால் யார் என்று ஒரு தனிப்பட்ட நபரையும் இந்த படத்தில் சுட்டிக்காட்டவில்லை. அந்த எச்சரிக்கை உணர்வோடு தான் கதை எழுதப்பட்டுள்ளது.அந்த வகையில் இந்த படத்திற்கான திரைக்கதையை அமைத்து ஒரு கலகலப்பான படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

அரசியல் களம் என்பதால் எப்போதும் பின்னணியில் கூட்டம் நிறைய இருக்கும். அப்படி நட்சத்திரங்களுக்குப் பின்னணியில் ஏராளமான கூட்டத்தை வைத்துப் படத்தை எடுத்துள்ளார்கள்.அந்த வகையில் காட்சிகளில் பிரமாண்டத்தைக் காட்டியிருக்கிறார்கள்.

தேசிய விருது பெற்ற நடிகர்கள் தம்பி ராமையா, எம்.எஸ் பாஸ்கர் போன்ற இரு ராட்சசர்கள் நடுவே  அதிகம் அலட்டாமலேயே நட்டியும் தனது நடிப்பின் மூலம் ஸ்கோர் செய்துள்ளார் .
நட்டியின் முகம் நல்லவரா கெட்டவரா என்று அறிய முடியாதது. அப்படித்தான் இந்தப் படத்திலும் ஒரு பூடகமாக அவர் முகம் பயன்பட்டுள்ளது. அதில் வெற்றியும் கண்டுள்ளார்கள்.
சாதாரண ரசிகனாக வந்து பிறகு அரசியல்வாதியாக மாறும் காங்கேயம் சிங்கராஜ் பாத்திரத்தில் ரெடின் கிங்ஸ்லி விளாசியுள்ளார்.

மொத்தத்தில் உள்ளூர் மைதானத்தில் ஆடிக் கொண்டிருந்த கிரிக்கெட் வீரர்களுக்கு ஐபிஎல் வாய்ப்பு கிடைத்தால் எப்படி ஆடுவார்களோ அப்படி பெரும்பாலான நடிகர்கள் அடித்தாடி உள்ளார்கள்.

கடந்த கால நடப்பு கால அரசியல் சம்பவங்கள் அனைத்தையும் கலந்து கட்டி படம் முழுக்க பொலிட்டிக்கல் பொடிமாஸ் தூவித் தாளித்துள்ளார்கள்.தன்னா மறந்து  சிரித்து ரசிக்க வைக்கிறார்கள்.முதல் படத்தில் ஒரு கலகலப்பான அரசியல் பகடிக் காட்சிகளை உருவாக்கி ஒரு கலகலப்பான வணிக ரீதியான படத்தை வெற்றிகரமாக வழங்கிய வகையில் இயக்குநர் எஸ்.உமாபதி ராமையா வெற்றி பெற்றுள்ளார் .

படத்தின் தன்மையை வெளிப்படுத்தும் வகையில் அனைத்து காட்சிகளையும் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் பி ஜி முத்தையா.அதேபோல இயக்குநருடன் இணைகரம் கோர்த்து இசை வழங்கியுள்ளார் இசையமைப்பாளர் தர்புகா சிவா .அதற்கேற்ற வகையில் பாடல்களும் பின்னணி இசையும் அமைந்துள்ளன.

மொத்தத்தில் இந்தப் படம் கோடைக்கேற்ற காமெடி சரவெடி . ஒரு முழு நீள பொழுதுபோக்குப் படமாகவும் மகிழ்ச்சி அளிக்கும் நகைச்சுவைப் படமாகவும் இந்தப் படம் திருப்தியளிக்கும் என்றே கூறலாம்.