’29 ‘திரைப்பட விமர்சனம்

விது,ப்ரீத்தி அஸ்ராணி, அவினாஷ், மாஸ்டர் மகேந்திரன் ,சிந்து ஷியாம், பிரேம்குமார், ஆதிரா பாண்டிய லட்சுமி, ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா ,எஸ்ஏ சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப் ,அனுஸ்ரீவேலன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

எழுதி இயக்கியுள்ளார் ரத்னகுமார்.ஒளிப்பதிவு மாதேஷ் மாணிக்கம், படத் தொகுப்பு ஆர்எஸ் சதீஷ்குமார், கலை சண்முகராஜ், இசை ஷான்ரோல்டன், பாடல்கள் உமாதேவி, பாக்கியம் சங்கர், மோகன் ராஜா, ரத்னகுமார், ஷான் ரோல்டன்.

ஸ்டோன் பென்ச் ஸ்டுடியோ மற்றும் ஜி ஸ்குவாட் நிறுவனங்கள் சார்பில்
கார்த்திகேயன் எஸ் மற்றும் லோகேஷ் கனகராஜ்
தயாரித்துள்ளனர்.  வெளியீடு ஒயிட் கார்பட் பிலிம்ஸ்.

தமிழ்த் திரைப்படங்களை ஃபிலிம் இல்லாமல் எடுக்கக்கூடிய காலம் வந்துவிட்டது. ஆனால் காதல் இல்லாமல் எடுக்க முடியாது. அந்த அளவிற்குத் திரைப்படங்களில் தவிர்க்க முடியாத கச்சாப் பொருளாக காதல் ஆகிவிட்டது.எதிர்ப்பாலின ஈர்ப்பையும் பருவக் கவர்ச்சியையும் காதல் என்று திரைப்படங்களில் காட்டப்படுகின்றன .

யுத்தத்திலும் காதலிலும் எதுவும் சரி என்று ஒரு பேச்சு புழங்குகிறது.அது கற்பிதமாக மாறிவிட்டது. ஒரு பெண்ணை அடைவது தான் வாழ்க்கையின் லட்சியம் என்று வலியுறுத்தும் வகையில்தான் பெரும்பாலான திரைப்படங்கள் வருகின்றன.ஆனால் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் அடைவது மட்டுமே வாழ்க்கை அல்ல, அதைத் தாண்டி இலட்சியங்களும் நோக்கங்களும் கனவுகளும் வாழ்க்கையில் உள்ளன என்று சொல்வதற்கு ஒரு தெளிவு வேண்டும்.அப்படி ஒரு கருத்தை வைத்து வந்திருக்கும் திரைப்படம் தான் ’29’

29 வயது வாலிபன் சத்யா.சேலத்தில் இருந்து வந்து சென்னையில் வேலை பார்க்கிறான்.அந்த வயது 29 என்பது வீடு குடும்பம் என்று உழைத்துவிட்டு காலத்தைக் கடந்து விட்டு திருமணம் தடைபட்டு தள்ளிப்போய் நிற்கிற ஒரு வாலிபனின் வயது.
கல்யாண வயது தாண்டி விட்டாலே அந்த இளைஞன் கேள்விக்கும் கேலிக்கும் ஆளாகிறான். அப்படி தோல்விகளின் நிழலில் வாழும் ஒருவனான சத்யா சென்னையில் நண்பனுடன் இருக்கிறான் .நண்பனும் சினிமா ஆசையில் சென்னை வந்து காதல் தோல்வி அடைந்தவன். தாடி வைத்துக் கொண்டு திரிகிறான். இப்படிப்பட்டவன் வாழ்வில் பாலைவனச் சோலை போல வருகிறாள் விஜி .அவள் மிகவும் வெளிப்படையானவள். ஐஏஎஸ் ஆக வேண்டும் என்பது கனவாக இருக்கிறது. அப்படிப்பட்டவளிடம் நட்பாகி காதலாகிறது.தான் யார் என்று அடையாளச் சிக்கலில் தவிக்கும் சத்யா ஒரு கட்டத்தில்  விஜியின் காதலன் என்பதை ஒரு அடையாளமாக நினைத்து மகிழ்கிறான்.சத்யா அவளைச் சுற்றி வளைய வருகிறானே தவிர அவனுக்கு பெரிதாக லட்சியமும் கனவும் இல்லாமல் இருக்கிறது. என்னை ஈர்ப்பதற்காக பல்வேறு திட்டங்களையும் தந்திரங்களையும் செய்கிறாயே தவிர உனக்கு நீண்ட லட்சியம் என்ன இருக்கிறது? என்னைக்கவர வேண்டும் என்பதற்காகவே உங்னது அறிவையும் ஆற்றலையும் செலவழிக்கிறாய் உனக்கான தனித்தன்மை என்ன? என்று கேட்கிறாள். அது மட்டும் அல்ல என்னை உடல் ரீதியாக அடைவது தான் உன் லட்சியமாக இருக்கிறது என்று அந்த அடைவுக்கு ஏற்பளிக்கிறாள். அதற்கு பிறகு என்ன? என்று கேள்வி கேட்கிறாள். அவனுக்குப் பதில் இல்லை. பிரிந்து விடுவோம் என்று பிரிகிறார்கள்.இப்படிச் செல்கிற கதை எதை நோக்கிச் செல்கிறது? அதன் முடிவு என்ன? என்பதுதான் என்பதுதான் 149.29 நிமிடங்கள் கொண்ட’29’ படத்தின் மீதிக் கதை.

படத்தில் சத்யாவாக விது நடித்திருக்கிறார். அந்த திருமண வயதைக் கடந்த தோற்றத்திற்கும் முகத்தில் இனம் புரியாது படிந்துள்ள தாழ்வுணர்ச்சிக்கும் சோகத்திற்கும் ஏற்ற மாதிரி அவருக்கு தோற்றமும் உடல் மொழியும் நடிப்பும் அமைந்து இருக்கின்றன . ஆனால் தனது இயலாமையை மறைக்கக் கோபப்படும் போதும் பிறகுவருந்தி மன்னிப்பு கேட்கும் போதும் வறுமையையும் குடும்ப அழுத்தத்தையும் சந்திக்கும் போதும் என்று பல்வேறு தருணங்களில் அவர் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.

படத்தில் விஜயலட்சுமி என்கிற விஜியாக நடித்துள்ள நடிகை ப்ரீத்தி அஸ்ராணி தோற்றத்திலும் வெடுக்கென்று எதையும் வெளிப்படையாகப் பேசும் விதத்திலும் அந்தந்த சூழலுக்கு ஏற்ற வகையில் சரியான நடிப்பை வழங்கி உள்ளார்.சமகால பெண்களின் பிரதிநிதியாக வருகிற அந்தப் பாத்திரம் படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது .மற்றபடி சத்யாவின் நண்பனாக வரும் அவினாஷ் இயல்பாக நடித்து பார்ப்பவர்களிடம் பதிகிறார்.சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் மாஸ்டர் மகேந்திரன், நாயகனின் அம்மாவாக  வரும் ஆதிரா பாண்டியலக்‌ஷ்மி, நாயகியின் அம்மாவாக  வரும் சிந்து ஷியாம் ஆகியோர் கதாபாத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக பயணித்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.மேலும்  துணைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ள பிரேம்குமார், ஆறுமுகவேல் , ஷெனஸ் பாத்திமா ,எஸ்ஏ சதீஷ்குமார், ஷாலினி, பிரியங்கா ராய், பிரதீப் ,அனுஸ்ரீவேலன் போன்ற நடிப்புக் கலைஞர்கள் அனைவருமே குறை இல்லாத பங்களிப்பை ஆற்றி உள்ளார்கள்.

29 வயதுக்கார சற்றே முதிர் கண்ணன்களின் உலகத்தைக் காட்டியுள்ளார் இயக்குநர்.பட்ஜெட்டுக்கும் இயக்குநரின் விருப்பத்திற்கும் ஏற்றபடியான ஒளிப்பதிவைச் செய்துள்ளார் மாதேஷ் மாணிக்கம். படத்தை உயர்த்திப் பிடிக்கும் முதன்மைக் காரணியாக அமைந்துள்ளது ஷான் ரோல்டனின் இசை. அவரது இசையில் பாடல்களும் வரிகளும் கவனிக்க வைக்கின்றன. வானம் பொழிந்தது,, சீலே சீலே, வாடினேன் மலரே, பொல்லாத ஆசைகள் நெஞ்சோடு பாடல்கள் கவனிக்க வைக்கின்றன.படத்தில் இருந்து பாடல் காட்சிகள் தனித்தரத்தில் தெரிகின்றன. அந்தத் தரம் படத்தில் பராமரிக்கப்படவில்லை.

துண்டு துண்டான சில காட்சிகள் மேம்பட்டும் சில பலவீனமாகவும் உள்ளன.
காட்சிகளுக்கு கதாபாத்திரங்களின் குணச்சித்திரங்களுக்கு ஏற்ற  தொடர்பான யோசிக்க வைக்கும் வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. காட்சிகளில் சில நாடகீயத் தருணங்களும் இருக்கவே செய்கின்றன. முதல் பாதியில் காட்சிகள் மித வேகத்தில் நகர்ந்தாலும் இரண்டாவது பாதியில் வேகம் அதிகரித்து அதை ஈடு செய்கிறது.

காதலைப் பற்றிய சரியான புரிதல் வேண்டும் என்பதை கூறியுள்ளது இந்தப் படம்.இதற்கு ஏற்ற வகையில் எதார்த்தத்தை பேசி உள்ளது.
இளைஞர்கள் மட்டுமல்ல பெரியவர்களையும் கவரும் வகையில் இந்தப் படம் உருவாகி உள்ளது

இத் திரைப்படம் பெரிய நட்சத்திரக் கலைஞர்களுக்கான வகையில் கதை எழுதப்பட்டிருந்தால் பெரிதாக சென்று சேர உதவியாக இருந்திருக்கும். ஆனாலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு ஒரு புதிய அனுபவத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ரத்னகுமார்.
மொத்தத்தில் ’29’ காதலுக்கு ஒரு புதுக்கோணம் காட்டுகிறது என்று கூறலாம்.