ரோபோ சங்கர்,சிபி புவனச்சந்திரன், கீர்த்தனா,கவிதா ரமேஷ், சப்பானி முரளி, சேரன்ராஜ், லதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கியுள்ளார் கணேசன் நாச்சிமுத்து. ரெய்மன் ராட்ரிக்ஸ் இசையமைத்துள்ளார்.அஸ்ருதா ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் சுதா ஜி தயாரித்துள்ளார்.
கொங்கு மண்டலத்தில் ஒரு கிராமத்தில் இந்தக் கதை நடக்கிறது.
ஏழைக் குடும்பத்தில் பிறந்த அறிவு, தன் தாயின் அரவணைப்பில் வளர்கிறான். அவனைப் பெரிய அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்பது தாயின் கனவாக இருக்கிறது.அம்மாவின் கனவை நனவாக்க அவன் சிரமப்பட்டுப் படிக்கிறான்.சைக்கிளில் செல்ல மகனுக்கு சிரமப்பட்டு ஒரு யமஹா பைக் கடனில் வாங்கிட உதவுகிறாள் தாய்.ஆனால் அந்த பைக் அவனை விட்டு கைநழுவிப் போகிறது.அவன் ஒரு காதலில் விழுகிறான்.அவன் மிகவும் நம்பிக்கை வைத்து மதிக்கும் அவனது பள்ளி ஆசிரியர் அவனது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்.அவன் நம்ப முடியாத அளவிற்கு அவரது மீதுள்ள நம்பிக்கை உடைந்து சிதறுகிறது.அதனால் அவன் பெரிய மன நெருக்கடிக்கு உள்ளாகிறான்.ஒரு கட்டத்தில் இது இருவர் இடையே பெரிய மோதலாக மாறுகிறது. அவனை அவமானப்படுத்துகிறார் ஆசிரியர்.அறிவு தனது உழைப்பால் உயர்நிலை அடைகிறான்.இறுதியில் வென்றது ஆசிரியரா ? மாணவனா ? என்பதை கிராமிய பின்னணியில் 117.48 நிமிடங்களில் சொல்லும் திரைப்படமே ‘ஈகோ ராமன்’.
இந்தப் படத்தில் ரோபோ சங்கர் தான் ஈகோ ராமன் என்கிற டைட்டில் ரோலில் நடித்துள்ளார்.ஈ கோவிந்த ராமன் என்பதன் சுருக்கமே ஈகோ ராமன் என்பது. அது மட்டுமல்லாமல் ஈகோ என்பது ஆணவத்தைக் குறிக்கும் .ஆணவம் கொண்டவராகவும் அவர் வருகிறார்.முரட்டுத்தனமும் பிடிவாதமும் பல்லைக்கடித்து நாக்கைச் சுழற்றி சற்றே குழம்பிய பாவனை காட்டும் உடல் மொழியும் என்று அந்த பாத்திரத்தில் அவர் குறை இல்லாமல் நடித்துள்ளார்.
அறிவு கதாபாத்திரத்தில் வரும் கதாநாயகன் பிக்பாக்ஸ் பிரபலம் நடிகர் சிபி புவன சந்திரன் எதார்த்தமான தோற்றம் நடிப்பு என்று படத்தில் வருகிறார். நடிப்பை வெளிப்படுத்தும் வகையில் ஆழமான காட்சிகள் உருவாக்கி இருக்கலாம்.
நாயகியாக ரேவதி பாத்திரத்தில் நடித்துள்ளகீர்த்தனா சுமாரான முகம் அதற்கேற்ற நடிப்பு என்று வருகிறார்.அறிவு நண்பன் பிரகாஷ் கதாபாத்திரத்தில் வரும் நடிகரும் நல்ல தேர்வு தான்.
அம்மா பாத்திரங்களில் நாயகனின் அம்மாவாக வருபவர் தான் மனதில் பதிகிறார். நாயகியின் அம்மாவாக வருபவருக்குப் பெரிதாக நடிக்க வாய்ப்பு இல்லை.படத்தில் கதாநாயகன் அறிவின் வளர்ப்பு நாயாக வரும் வெள்ளை நாய் தோற்றத்தாலும் நடிப்பாலும் அனுதாபத்தை அள்ளுகிறது.
இது பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் தான் என்றாலும் ஒவ்வொரு காட்சியிலும் பட்ஜெட் படத்தில் தெரிவது என்பது ஒரு பலவீனம்.
படத்தின் ஒளிப்பதிவும் இசையும் படத்தை பட்ஜெட்டை மீறி உயர்த்திப் பிடித்துக் காட்டுகின்றன.
வெளிப்புற காட்சிகளில் அலைந்து அலைந்து படம் ஆக்கி இருக்கிறார்கள்.எனவே நாமும் அங்கே அலைந்து திரிகிற உணர்வு பெறுகிறோம்.
பாடல்களை விட பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார் இசையமைப்பாளர் ரெய்மன் ராட்ரிக்ஸ்.
மித வேகத்தில் நகரும் காட்சிகள் சில இடங்களில் பலவீனமாகத் தெரிகின்றன.
இன்னும் சுவாரஸ்யம் கொண்ட காட்சிகளை அமைத்திருந்தால் மனித ஆழ்மனதில் படிந்துள்ள அழுக்கான உணர்வுகளைப் படம் பிடித்துக் காட்டிய ஒரு படமாக மாறி இருக்கும்.
மொத்தத்தில் தயாரிப்பாளரின் பட்ஜெட்டுக்குள் அடங்கிய பலமாக எடுக்க முயன்றதால் ஒரு கட்டுப் பெட்டிக்குள் ஒடுங்கி விடுகிறது இந்தப் படம்.
குறைகளைப் புறந்தள்ளி விட்டு சினிமாத்தனம் இல்லாமல் முதல் முயற்சியிலேயே முடிந்தவரை எதார்த்தமாக எடுக்க முயன்றுள்ளதைப் பாராட்டலாம்.


