மறைந்த நடிகரும் திரைப்பட விமர்சகருமான சத்யேந்திராவின் மறைவு குறித்து இயக்குநர், கவிஞர் பிருந்தா சாரதி இப்படி எழுதி இருக்கிறார்:
‘ஈடு செய்ய முடியாத இழப்பு’ என்ற வாசகத்தை பெரிய தலைவர்களுக்கும், புகழ்பெற்றவர்களுக்கும் மட்டுமே அஞ்சலி எழுதுகையில் பயன்படுத்த வேண்டுமா என்ன?
நேற்று மறைந்த நடிகர் சத்தியேந்திராவின் இழப்பும் ஈடு செய்ய முடியாத இழப்புதான்…
அவரை அறிந்தவர்கள் இந்த வாசகத்தை உணர்வார்கள்.
உலக சினிமா எங்கே திரையிட்டாலும், நல்ல இலக்கிய கூட்டங்கள் எங்கே நிகழ்ந்தாலும், ஓவிய சிற்பக் கண்காட்சிகள் நிகழ்ந்தாலும் அங்கே சத்யேந்திரா இருப்பார்.
ஃபிலிம் சேம்பர், ஆனந்த் தியேட்டர், சத்தியம் தியேட்டர், நாரத காண சபா, மியூசிக் அகாடமி, அலையன்ஸ் பிரான்சிஸ் ஒன்று எத்தனையோ இடங்களில் அவரை சந்தித்து இருக்கிறேன்.
கொஞ்சம் அழுக்காக , கலைந்த தாடி மீசையுடன், பார்ப்பதற்கு வறுமை தாக்கிய தோற்றத்தில், ஜோல்னா பையோடு நிற்கும் அந்த கலைஞனை நெருங்குவதற்கு சாதாரண கண்களும், கால்களும் தயங்கும்.
ஆனால் அவரைப் பார்த்தால் ஒரு ஐந்து நிமிடம் நின்று பேசிவிட்டுதான் வருவேன். நடிகர் நாசர் அவர்களோடு பணியாற்றியதால் இந்தப் பழக்கம். வெற்றி தோல்விகளை தாண்டி கலைஞர்களை மதிக்க வேண்டும் என்பதை நாசர் அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டேன்.
நடிகர், மொழிபெயர்ப்பாளர் , உதவி இயக்குனர், கலை விமர்சகர் என்ற பல முகங்கள் அவருக்கு உண்டு.
பல்லாண்டுகளுக்கு முன்பு ஒரு நாள்…. ஒரு படம் இயக்கி விட்டு வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த காலம்…
ஒருமுறை பிலிம் சேம்பர் வாசலில் இருக்கும் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். ‘டிவிஎஸ் சாம்ப்’பை ஸ்டார்ட் செய்தவன் அப்படியே ஆப் செய்துவிட்டு அவரிடம் சென்று பேசி டீ குடித்துவிட்டு வந்து வண்டியை எடுத்தேன்.
ஒரு இயக்குனர் நண்பர் என்னோடு வந்தவர் அவரும் உலக சினிமா ரசிகர்தான். கேட்டார்… “அவரிடம் போய் பேசுகிறீர்களே?” ஏதாவது காரணமா?” என்று. வழக்கமாக வாய்ப்பு தேடும் நடிகர்கள்தான் இயக்குனர்களைத் தேடி வந்து தங்களை அறிமுகப்படுத்திக் கொள்வது வழக்கம். சத்தியேந்திர ஓரளவு அறியப்பட்ட நடிகர் என்றாலும் கடைசிவரை வாய்ப்பு தேடும் நடிகராகவே இருந்தார்.
நான் சொன்னேன் : “வாழ்க்கையில் வெற்றி பெறுகிறவர்களுக்கு எப்படி அதற்கான காரணங்கள் இருக்குமோ, அதைப்போலவே தோல்வி அடைந்தவர்களுக்கும் மறைமுகமான பல காரணங்கள் இருக்கும். ஒன்றன்பின் ஒன்றாக நல்ல வாய்ப்புகள் வருவதைப் போலவே ஒன்றன்பின் ஒன்றாக துரதிர்ஷ்டங்களும் தேடி வரும். விதியின் சூறைக்காற்றில் சிக்கிக் கொண்டவர்கள் அவர்கள்.
அதை அறிந்து கொண்டால் அவர்கள் வாழ்க்கையின் பின்னால் இருக்கும் ஓர் இதிகாசமே இருப்பது புலப்படும்,” என்று. தொடர்ந்து
“தோல்வி அடைந்தவர்களை பார்த்தால் நின்று பேசக்கூட கூச்சப்படும் இந்த உலகம். அவர்களுக்குள் மறைந்திருக்கும் திறமைகள் வெளிப்படுவதற்கு சந்தர்ப்பங்கள் அமைந்திருக்காது அதற்கும் பல காரணங்கள் இருக்கும்…” என்று தொடர்ந்து பேசிக்கொண்டே வந்தேன்.
டிவிஎஸ் சாம்பின் பின்னால் அமர்ந்திருந்து கேட்டுக் கொண்டே இருந்தவர் அமைதியாக வந்தார்.
அந்த அமைதிக்கு பின்னால் ஒரு திரைக்கதையின் விதை விழுந்தது.
வாழ்க்கை எத்தனையோ மனிதர்களை கோபுரத்தில் வைக்கிறது. எத்தனையோ மனிதர்களைக் குப்பை தொட்டியில் வீசுகிறது. இரண்டுக்கும் காரணம் யாருக்கும் தெரியாது. வீசும் காற்றில் எது எங்கே போய் உட்காரும் என்பது விதியின் பகடையாட்டம்.
மனிதர்களை மதிப்பிடாமல் அவர்களை மதிப்பதுதான் வாழும் போது அவர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. கலைஞர்களுக்கு இந்த ஆறுதல் ரொம்ப ரொம்ப அவசியம். அதை நான் பலருக்கும் செய்திருக்கிறேன். சத்தியேந்திராவுக்கும் அதையே செய்தேன்.
இன்று அவர் மறைந்து விட்டார் என்ற செய்தி வந்த போது மாபெரும் மௌனம் கவிகிறது. அதோடு ஒரு சிறிய ஆறுதலையும் அடைகிறேன்..
கடைசியாக டிஸ்கவரி புக் பேலஸ் பிரபஞ்சன் அரங்கில் நிகழ்ந்த ஜெயகாந்தன் நினைவு நாளில் நடந்த கூட்டத்தில் அவரைப் பார்த்தேன். எப்போதும் போல் சோர்வாகவே இருந்தார். அவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது கூட அப்போது எனக்குப் புலப்படவில்லை. கண்கள் மட்டும் வழக்கம் போல் ஒரு குழந்தையின் ஆர்வத்தோடு மின்னிக் கொண்டிருந்தன.
இந்த முறை ஒரு மாறுதல்…
அவராக என்னிடம் வந்து சிறிது நேரம் பேசி விட்டு சென்றார்.
“அடுத்த ப்ராஜெக்ட் ஏதாவது பண்றீங்களா? லிங்குசாமி சார் படம் எப்போ ஆரம்பிக்குது ?” என்றெல்லாம் கேட்டார். அவர் வழக்கமான விசாரிப்பாக அல்லாமல் உண்மையாகவே கேட்டு இருக்கலாம்.
ஆனால் நான், “விரைவில் தொடங்க இருக்கிறது ,” என்று எல்லோருக்கும் சொல்லும் டெம்ப்ளேட் பதிலையே சொன்னேன்.
இயக்குனர் லிங்குசாமியின் ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். அதனால் லிங்குசாமி படத்தையும் அவர் விசாரிப்பது வழக்கம்.
சத்யந்திரா… நெருங்கிப் பழகாத நண்பரே… இந்த உலகத்தின் போலிப் பெருமைகளில் சிக்கி நானும் உங்களை நெருங்கவில்லை.
தள்ளி நின்றே பழகி விட்டேன்.
உங்கள் மனதுக்குள் நீங்கள் என்னென்ன கனவுகள் வைத்திருந்தீர்களோ ?தெரியாது. மரணம் எல்லாவற்றுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டது. ஆனால் விதைத்த விதைகள் எங்காவது முளைக்கும் என்பது ஒரு ரகசிய நியதி. உங்கள் விதைகளும் துளிர்க்கும் …செழிக்கும் ….மலரும்… என்றே நான் நம்புகிறேன். இது நம்பிக்கையா? மூடநம்பிக்கையா? என்பது தெரியவில்லை… எப்படி இருந்தாலும் அந்த வார்த்தைகள் எனக்கு இப்போது தேவையாக இருக்கிறது. உங்கள் வாழ்க்கைக்கும் மரணத்திற்கும் அர்த்தம் சொல்ல வேறு ஒரு சொல் இப்போது இல்லை.
சென்று வாருங்கள்… கலைஞன் ஒரு ஷாட்டில் கூட உயிர் வாழ முடியும். #நாக்அவுட் திரைப்படத்தின் மூலம் உலக சினிமாவின் உயரத்தில் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பீர்கள்.
“சாவுக்கு உருவம் கொடுத்தவன் சத்யந்திரா” என்பதை யாராலும் மறுக்க முடியாது’.
*
பிருந்தா சாரதி


