நட்சத்திரங்கள் நடித்த படங்களுக்கு ஒரு வணிக மதிப்பு இருப்பது போல் அனிமேஷன் திரைப்படங்களுக்கும் உலகளாவிய வணிக மதிப்பு உள்ளது.பெரும்பாலும் குழந்தைகளைக் குறிவைத்து எடுக்கப்பட்ட அனிமேஷன் திரைப்படங்கள் இப்போது அனைவருக்குமான அனிமேஷன் திரைப்படங்களாக அதன் வியாபாரம் எல்லை விரிவடைந்து இருக்கிறது.
அதை உணர்ந்து கொண்டுதான் ஹாலிவுட்டில் ஏராளமான அனிமேஷன் திரைப்படங்கள் உருவாக்கப்பட்டு வெளி வருகின்றன. அந்த வரிசையில் வந்துள்ள படம்தான் ‘பூனி பியர்ஸ்: தி ஹிட்டன் புரொடெக்டர்’
இப்படம் வழக்கமான காடு, மரம் வெட்டும் விக் மற்றும் கரடிகளின் சண்டை என்ற எல்லையைத் தாண்டி, மாயாஜாலமும் புராணங்களும் கலந்த புதிய உலகத்திற்குப் பார்வையாளர்களை அழைத்துச் செல்கிறது.
பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஆகியோர் மர்மங்கள் நிறைந்த ஈவ் சிட்டி எனும் மறைக்கப்பட்ட மாய நகரத்திற்குச் செல்லும் சூழல் உருவாகிறது. அங்கு சீன புராணங்களில் வரும் சக்திவாய்ந்த நியான் என்னும் மாய உயிரினத்துடன் இவர்களுக்கு எதிர்பாராத சந்திப்பு ஏற்படுகிறது. ஒரு விபத்தால் நியானின் அதிசய சக்திகள் மூவரிடமும் பகிரப்பட்டு விடுகின்றன. இதன் மூலம் நிலம்,இடி, மின்னல்,தீ உள்ளிட்ட பல்வேறு மந்திர சக்திகளைப் பெறுகின்றனர். ஆனால் இந்த சக்திகள் வரமாக மட்டுமல்லாமல் சோதனையாகவும் மாறுகின்றன. குறிப்பாக, எப்போதும் தம்பியைக் காப்பாற்றும் பெரிய சகோதரனாக இருந்த பிரையர், தன்னை மற்றவர்களை விட பலவீனமாக உணரத் தொடங்குகிறார். “நான் உண்மையில் யார்?” என்ற கேள்வியுடன் அவரை உளவியல் ரீதியாக போராட வைக்கிறது. இதற்கிடையில் மனித உலகத்தையும் மாய உலகத்தையும் அழிவின் விளிம்பிற்கு கொண்டு செல்லும் ஒரு கொடிய சதி வெளிப்படுகிறது. இரண்டு உலகங்களையும் காப்பாற்ற பிரையர், பிராம்பிள் மற்றும் விக் ஒன்றிணைந்து போராடுகிறார்கள்.இந்தப் போராட்டத்தில் வெற்றி பெற்றார்களா என்பதே மீதிக்கதை.
பிரதான பாத்திரங்களான பிரையர், பிராம்பிள் மற்றும் விக் தவிர துணைக் கதாபாத்திரங்கள் என்று கூறும் வகையில்
நியான் படத்தின் முக்கிய திருப்புமுனை கதாபாத்திரம் எனலாம்.
ஈவ் சிட்டியில் வரும் பல புதிய கதாபாத்திரங்கள் படத்தின் உலகத்தை மேலும் மெருகேற்றி இருக்கின்றன. சில கதாபாத்திரங்கள் குறுகிய நேரமே வந்தாலும், திரைக்கதை நகர்வுக்கு சிறப்பாக உதவியுள்ளன.இந்தப் படத்தில் மிகப்பெரும் பலமாக அனிமேஷன் மற்றும் விஎஃப்எக்ஸ் தொழில்நுட்பம் உதவி உள்ளன.தீ மற்றும் பனியின் மோதல் காட்சிகள், மந்திர சக்திகளின் வெடிப்புகள், வான்வழி சண்டைகள், மாபெரும் ஆக்ஷன் காட்சிகள் என அனைத்தும் உலகத் தரத்தில் அற்புதமாக உருவாக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு ஃப்ரேமிலும் தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு துல்லியமாகத் தெரிகிறது.3டி காட்சிகள் கண்முன் நிகழும் அனுபவத்தைத் தருகின்றன.மாய உலகத்தின் பிரம்மாண்டத்தை இசை சிறப்பாக வெளிப்படுத்துகிறது.
பாசம், அடையாளத் தேடல், தன்னம்பிக்கை, தியாகம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
குடும்பப் பாங்கான உணர்வுகளையும், மாய உலக சாகசத்தையும் தொய்வு இல்லாமல் நகர்த்தி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இயக்கியுள்ளார் இயக்குநர்.
மொத்தத்தில் பூனி பியர்ஸ்: தி ஹிடன் ப்ரொடக்டர் – குழந்தைகளுக்கான வண்ணமயமான விருந்து. குடும்பத்துடன் கண்டுகளிக்க ஏற்ற தரமான மாய உலகத்தின் சாகசப்படைப்பு.


