’டிரோன்ஸ்’ திரைப்பட விமர்சனம்

சித்தி இத்னாதி,அஞ்சலி நாயர் ,தேவதர்ஷினி, குரைஷி, சசி செல்வராஜ் ,டிராவிட் செல்வம் , சினிமாவாலா சதீஷ் ,ஆர் ஜே தீபக் நடித்துள்ளனர்.ராகவ் மிர்தாத் எழுதி இயக்கி உள்ளார்.சேது மாதவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.எஸ் ஆர் ஹரி இசையமைத்துள்ளார்.
சதீஷ் சூர்யா படத்தொகுப்பு செய்துள்ளார்.ஜி எம் மார்கன் தயாரித்துள்ளார்.

மினியேச்சர் பொருள்கள் செய்யக்கூடிய பெண் ஓவியர், மர்மம் நிறைந்த அவரைக் காதலிக்கும் இளைஞன்,
காதலால் சபிக்கப்பட்ட காவலர்,பழங்காலத்து சூனியக்காரி, ஒரு பொம்மை வீட்டில் சிறைப்பட்டுள்ள ஆத்மாக்கள் இவர்களையெல்லாம் ஒரே நேர்கோட்டில் யாரும் கற்பனைக் கூட செய்ய முடியாது ஆனால் இவர்களை இணைத்து ஒரு கதையைச் செய்திருக்கிறார்கள்.அவர்களுடைய விதி விளையாட்டு அதில் ஒளிந்துள்ள மர்மம் போன்றவற்றை அமானுஷ்யம் கொண்ட யாரும் கற்பனை செய்ய முடியாத பாதையில் பயணிக்க வைத்து உருவாகி இருக்கும் படம் இந்த ’டிரோன்ஸ்’.

கல்லூரியில் படிக்கும் டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர் மற்றும் ஆர்.ஜே.தீபக் பிளாக் ஹோல் என்று சொல்லக்கூடிய அறிவியல் ஆய்வுக் கூடத்தில் தங்க நேரிடுகிறது.இது அவர்கள் வீட்டுக்குத் தெரியாது.உள்ளே சென்றால் வெளியே வர முடியாத சூழலில் இருக்கிறார்கள்.அப்போது டிரோன் ஒன்றின் மூலம் வெளி உலகத்தைப் பார்க்கிறார்கள். அப்போது அங்கே இருக்கும் அழகி சித்தி இத்னானியைப் பார்க்கிறார்கள். அவர் மீது டிராவிட் செல்வத்திற்கு காதல் மலர்கிறது.அங்கே சூனியக்காரக் கிழவி தேவதர்ஷினி இருப்பது அப்போது தெரியவில்லை. பிறகு தெரிகிறது.கிழவியோ அந்தக் காதலுக்கு குறுக்கே நிற்கிறார்.
மறுபக்கம், மாயமான கல்லூரி மாணவர்களைத் தேடி போலீஸ் அதிகாரி சினிமா வாலா சதீஷ் உள்ளிட்ட சிலர் அந்த வீட்டுக்குள் வருகிறார்கள்.சதீஷ்-க்கு ஆறாண்டுகளாக திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது,அவர்  அந்த அழகியைக் காதலிக்கிறார்.ஆனால் அந்த அழகிக்குள் ஒரு மர்மமும் ஒளிந்துள்ளது .அதாவது அந்த சூனியக்காரியும் அவருக்குள்ளே ஒளிந்து ஆட்டம் காட்டுகிறார். அதன் விளைவு என்ன? இந்த இளைஞர்களின் கதி என்ன? என்பதுதான் ட்ரோன்ஸ் படத்தின் மீதிக்கதை.இதை நகைச்சுவையாகக் கூறினாலும் படத்தின் இறுதியில் பெண்ணின் உள்ளத்தைத் திறந்து காட்டும் பெண்ணின் கண்ணீரும் கவலையும் துயரமும் கொண்ட ஒரு அழுத்தமான அத்தியாயமும் உள்ளது.

முதலில் இது ஒரு பாட்டி கதையோ என்று உணர வைக்கும் அளவிற்கு எளிமையாகத் தொடங்குகிறது படம்.இந்தக் கதையில்
பறக்கும் தட்டு அமானுஷ்யம், சூனியக்காரி,அறிவியல் ஆராய்ச்சி சமூக சிந்தனை,நகைச்சுவை போன்றவற்றையும் இணைத்துக் கலந்து இயக்குநர் ஆர்.ராகவ் மிர்தாத் கதை எழுதிக் காட்சிகள் ஆக்கி இந்தப் படத்தை எடுத்துள்ளார்.

கதாநாயகியாக நடித்திருக்கும் சித்தி இத்னானி, தோற்றத்தில் ஒரு தேவதையைப் போல வந்து வினாடிக்கு வினாடி மாறும் முகபாவங்களைக் காட்டி நடிப்பிலும் அசத்துகிறார்.

மற்றொரு நாயகியாக நடித்திருக்கும் அஞ்சலி நாயர், மங்கலான நிறம் கொண்ட பெண்களின் பிரதிநிதியாக வருகிறார். அழுத்தமான அந்தப் பாத்திரத்தில் பொருத்தமாக நடித்துள்ளார்.

நாயகனாக நடித்திருக்கும் டிராவிட் செல்வம், இதுவரை பிற படங்களில் சின்னச்சின்ன துணைப் பாத்திரங்களில் வந்தவர் இதில் கதாநாயகன் நிலைக்கு உயர்ந்துள்ளார்.காதலுக்கு ஏங்குவது ஆபத்தில் சிக்கிக் கொண்டு தவிப்பது எனப் படத்தில் குறை சொல்லாத நடிப்பை வழங்கியுள்ளார்.

சூனியக்காரியாக நடித்திருக்கும் தேவதர்ஷினிக்கு சொல்லிக் கொடுக்கவே வேண்டாம் ,பிரமாதப்படுத்தியுள்ளார்.

காவல் துறை அதிகாரியாக நடித்திருக்கும் சினிமாவாலா சதீஷ், விசாரணை போலீஸ் அதிகாரியாக வந்தாலும் அவர் பங்கிற்கும் நகைச்சுவையும் செய்திருக்கிறார். ஆர்.ஜே.தீபக் ,குரைஷி மற்றும் சசி செல்வராஜ் ஆகியோரும் தங்கள் குறை இல்லாத பங்களிப்பைக் கொடுத்துள்ளார்கள்.

சில குறிப்பிட்ட இடங்களிலேயே கதை நிகழ்ந்தாலும் அந்தக் குறை தெரியாத அளவிற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்
ஒளிப்பதிவாளர் ஜெயந்த் சேது மாதவன்.

இசையமைப்பாளர் ஹரி.எஸ்.ஆரின் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசை காட்சிகளின் தீவிரத்தை உயர்த்தி உள்ளது.

படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யா, கலை இயக்குநர் ஆர்.கிஷோர், ஆடை வடிவமைப்பாளர் ஹர்ஷிகா ரமேஷ் ஆகியோரது பணியில் குறை சொல்ல ஒன்றும் இல்லை.

காதல், சூனியக்காரி என்ற சேர்மானத்தில் வரும் இந்தக் கதை முதல் பாதியில் சற்றே சோர்வூட்டினாலும் இரண்டாம் பாதியில் அந்தத் தொய்வை ஈடு கட்டி உள்ளார்கள்.
இந்த நகைச்சுவை  முலாம் பூசிய கதைக்குள் நாம் எதிர்பாராத வகையில் ஒரு சமூக சிந்தனையையும் கூறியுள்ளார்கள்.

நம்மை வேறோர் உலகத்திற்கு அழைத்துச் செல்கிற இப்படம் யாரும் எதிர்பாராத வகையிலான கற்பனை கொண்டது.மொத்தத்தில் இந்த, ‘டிரோன்ஸ்’ ஒரு முழு நீள பொழுது போக்குப் படம் என்று கூறலாம்.