‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரைப்பட விமர்சனம்

வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா சகா ,மாறன், சரவணன் ,லிஸி ஆண்டனி, அருவி மதன் கன்யா பாரதி, சுப்பிரமணியம் சிவா நடித்துள்ளனர் . தயாள் பத்மநாபன் எழுதி இயக்கியிருக்கிறார் . திரைக்கதை வசனம்: கவிதா பாரதி, தயாள் பத்மநாபன், இசை: தர்புகா சிவா, ஒளிப்பதிவு: எம்.வி. பன்னீர்செல்வம், படத்தொகுப்பு:  பூபதி வேதகிரி , பாடல்கள் : பாரதியார், பாரதிதாசன், தயாள் பத்மநாபன். கலை இயக்கம்: சூளை அன்பு. கே.வி. சபரீஷ் தயாரித்துள்ளார் .2 எம் சினிமாஸ் டி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

வெற்றி வறுமையின் காரணமாகச் சின்ன சின்ன திருட்டுகள் செய்கிறார்.அவ்வப்போது திருடி அன்றாட வாழ்க்கை அல்லல்களைக் கடக்கிறார்.கவலையும் கடனுமாக வாழ்க்கை நகர்கிறது. ஒரு கட்டத்தில் பெரிய கடன் அடைக்க பெரிய திருட்டு செய்வது என்று இதுதான் கடைசி என்று இறங்கி தனது நிலம் அடமான பத்திரங்களைத் திருடுவதற்காக கடன் பட்டிருக்கும் கவிதா பாரதி வீட்டுக்குள் நுழைந்து திருடுகிறார் .எதிர்பாராமல் கவிதா பாரதிக்கும் வெற்றிக்கும் ஒரு மோதல் நடக்கிறது. ஓர் அசந்தர்ப்பத்தில் அவரைக் கொலை செய்கிறார். குற்றம் நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது .தூக்கு மேடை ஏறும் சில மணி நேரங்களுக்கு முன் அவரது எண்ணங்கள் சுழல்கின்றன.அவரது முன் கதை விரிகிறது.முடிவில் யாரும் எதிர்பாராமல் அவருக்கு தூக்கு தண்டனை எல்லாம் ரத்தாகவில்லை. ஆனால் தூக்கு தண்டனைக்கு அதாவது மரண தண்டனைக்கு எதிராகச் சமூக ஆர்வலர்கள் பல்லாண்டுகளாக பேசி வரும் சூழலில் இந்தப் படத்தில் ஒரு கைதி வெளிப்படுத்தும் உணர்வுகளை முக்கியமாகப் பதிவு செய்ய வேண்டும் என்று இயக்குநர் முயன்று இருக்கிறார்.அதற்கான விவாதங்கள் படத்தில் காட்சிகளாக உள்ளன.அவை யோசிக்க வைக்கும் விதத்தில் உள்ளன. தண்டனை வழங்கும் போது குற்றத்தை மட்டும் பார்க்காமல் குற்றம் செய்யத் தூண்டிய சூழலையும் கவனிக்க வேண்டும் என்று வாதிடுகிறது படம்.

மஞ்சள் பத்திரிகையாளர் லட்சுமி காந்தன் கொலை வழக்கு நடந்து 40 களில் பரபரப்பாகப் பேசப்பட்டது. அதற்கும் இந்தப் படத்துக் கதைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. தலைப்புக் கவர்ச்சிக்காக மட்டுமே அந்தப் பெயரை வைத்திருக்கிறார் இயக்குநர்.

மரண தண்டனைக்கு எதிராக முதலில் குரல் கொடுக்கும் ஒரு தூக்கு தண்டனைக் கைதியின் கருத்துகளைச் சொல்வது தான் ‘லக்‌ஷ்மிகாந்தன் கொலை வழக்கு’.

நல்லவரா கெட்டவரா என்று கணிக்க முடியாத பாத்திரங்களைக் கொடுத்து வெற்றியைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் .எனவே அப்படி ஒரு திருட்டுத்தனம் செய்யும் அதே நேரம் காதலிக்கவும் செய்யும் ஒரு புத்திசாலியாகவும் இருக்கும் சிந்திக்க வைக்கும் படியான பேச்சும் கொண்ட அறிவுமதி பாத்திரத்தில் வெற்றி அழகாகப் பொருந்தி இருக்கிறார்.மெல்ல மெல்ல காதலியிடம் மனதை பறிகொடுக்கும் போதும் காதலியிடம் நைசாக பேசி அவரைக் கவரும் போதும் போலீஸ் அதிகாரியிடம் நக்கலும் நையாண்டியுமாகச் சட்டத்தைப் பற்றி விவாதிக்கும்போதும் என்று தனது நடிப்பு வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்தி வெளிப்படுத்தி உள்ளார்.

நாயகியாக வருகிறார் பிரிகிடா சகா. மூக்கும் முழியுமாக சிரிக்கும் கண்களுடன் அந்த கிராமத்து வெள்ளந்திப் பெண்ணாக வருகிறார்.காதல் காட்சிகளிலும் கடைசியில் ஒரே ஒரு திருட்டு என்று கணவனைத் திசை மாற்றுவதிலும் என்று தனது பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார்.

சிறைச்சாலையில் உள்ள காவல்துறை அதிகாரியாக வருகிறார் ரங்கராஜ் பாண்டே.கண்டிப்பும் அதே நேரம் கருத்துகளைக் கவனிக்கிற நுண்ணுணர்வும் கொண்டவராக வருகிறார்.தொலைக்காட்சி விவாதங்களைப் பார்த்த அவர் இதில் கைதியுடன் ஆன கருத்து மோதலில் தனது பாத்திரத்தைச் சிறப்பாக வெளிப்படுத்தி உள்ளார்.

வெற்றியின் நண்பராக வரும் லொள்ளு சபா மாறன், அம்மாவாக நடித்திருக்கும் லிஸி ஆண்டனி, தொழிலதிபர் லக்‌ஷ்மிகாந்தனாக நடித்திருக்கும் கவிதா பாரதி, வெற்றியைத் தூக்கிலிடும் ‘ஹேங்மேன்’ பணி செய்பவராக வரும் சுப்பிரமணியம் சிவா, கன்யா பாரதி, அருவி மதன் ஆகியோர் தங்களது எல்லை தாண்டாத நடிப்பின் மூலம் ஈர்க்கிறார்கள்.


ஒளிப்பதிவாளர் எம்.வி.பன்னீர் செல்வம்,இயற்கை ஒளியிலும் இடையூறு நிறைந்த இடங்களிலும் தன் ஒளிப்பதிவினைச் சிறப்பாகச் செய்துள்ளார்.அவர் வைத்திருக்கும் குளோசப் காட்சிகள் நடிகர்களை அழகாகக் காட்டுவதற்காக அல்லாமல் பாத்திர உணவுகளைப் பிரதிபலிப்பதாக உள்ளன.

தர்புகா சிவாவின் இசையும், பாடல் வரிகளும்கதையின் தன்மை உணர்த்தும் வகையில் உள்ளன. முதல் பாதியில் நிறைய பேசிக் கொண்டிருப்பதாக தோன்றினாலும் அந்த சலிப்பு தெரியாத அளவிற்கு சரளமாகப் படத்தொகுப்பு செய்துள்ளார்படத்தொகுப்பாளர் பூபதி வேதகிரி.

படத்தில் வசன காட்சிகள்அதிகம் என்றாலும் பேசப்பட வேண்டிய விஷயத்தைப் பேசியாக வேண்டும் என்ற வகையில் அதை நாம் குறையாகக் கருத முடியாது.

எந்த வகையில் உயிரைக் கொன்றாலும் அது கொலைதான். அது மரண தண்டனையாக இருந்தாலும் தூக்கு தண்டனையாக இருந்தாலும் யுத்தத்தில் இருந்தாலும் என்கவுண்டரில் இருந்தாலும் என்று வாதம் செய்துள்ளார் இயக்குநர் தயாள் பத்மநாபன்.குறைந்த அளவிலான கதாபாத்திரங்கள் குறிப்பிட்ட இடங்களில் ஆன படப் பதிவுகள் போன்றவற்றைக் கடந்து தனது திரைக்கதையாலும் அழுத்தமான வசனங்களாலும் படத்தைப் பார்க்கும் படி செய்துள்ளார் இயக்குநர்.

வில்லன் பாத்திரத்தின் கொடூரத்தைச் சித்தரிக்க மகளுடன் கூடத் தவறாக நடந்து கொள்வேன் என்று கூறவைத்திருப்பது ஒரு நெருடல். படத்தில் வில்லன் பாத்திரத்திற்கு ரெட்டியார் என்று சமூகத்தின் பெயரைக் குறிப்பிட்டு இருப்பதும் தேவையற்றது .சில நாடகத்தனமான காட்சிகளைத் தவிர்த்து இருக்கலாம்.

இந்த உலகத்திற்கு வந்த உயிரை எடுப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை என்று மொத்தத்தில் உயிர்க் கொலைக்கு எதிராகப் பேசுகிறது இந்தப் படம்.

மொத்தத்தில், ‘லட்சுமி காந்தன் கொலை வழக்கு’ திரையில் ஓர் மனித உரிமை விவாதம்