‘ராவ் பகதூர்’ (தெலுங்கு) திரைப்பட விமர்சனம்

சத்யதேவ்,விகாஸ் முப்பாலா ,தீபா தாமஸ்,பால பராசர், திருடா திருடா ஆனந்த், பிரனய் வகா,குணால் கௌசிக்,மாஸ்டர் கிரண்,வெங்கடேஷ் மஹா நடித்துள்ளனர்.  இயக்குநர் வெங்கடேஷ் மகா எழுதி இயக்கி படத்தொகுப்பு செய்துள்ளார்.ஒளிப்பதிவு: கார்த்திக் பர்மர், இசை:ஸ்மரன் சாய் , தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு வழங்க அனுராக் ஷரத் கோபாலகிருஷ்ண ரெட்டி மற்றும் ஈஸ்வரன் தயாரித்துள்ளனர்.

புவனம் ராமப்பா ராவ் பகதூர், தனது பாரம்பரியமான முன்னோர்களுக்கு சொந்தமான மாளிகையான புவனாலயத்தில், நோயாளியாகப் படுக்கையில் இருக்கிறார். அவர் கல்லீரல் புற்றுநோயால் அவதிப்படுகிறார்.அவரது மரணத்திற்கு மருத்துவர்கள் நாள் குறித்திருக்கிறார்கள்.
அவர் மனம் பிறழ்ந்து கிடக்கிறது. ‘சத்தியம் செத்துவிட்டது சத்தியம் செத்துவிட்டது’ என்று கத்துகிறார் . இந்த வீடு சுடுகாடாகப் போகிறது என்று பிதற்றுகிறார்.குடிப்பழக்கத்தால் அவரது மனம் பிறழ்ந்து விட்டது.

அவரது மரணம் நெருங்கி விட்டாலும் இறந்துபோன தனது இளைய மகன் குசுமப்பா என்ற குசுமா, தனது சொந்தக் குழந்தை அல்ல என்ற சந்தேகத்தால் பெரிதும் மன உளைச்சலுக்கு ஆளாகிறார்.ராமப்பாவின் மனைவி ரேணுகா, தனக்குத் தானே தண்டனை கொடுத்தவராக ஓர் இருண்ட அறைக்குள் தன்னை அடைத்துக்கொண்டு வாழ்கிறார். அதே சமயம், அவர்களின் மூத்த மகன் லவனப்பா என்ற லவனா,பெற்றோர்கள் இருவரும் இப்படி ஆளுக்கு ஒரு திசையாக கிடப்பதில் கவலையுடன் இருக்கிறான்.சீனிவாசாரி ராமப்பாவின் நெருங்கிய நண்பர்.குடும்ப மருத்துவரும் கூட. அவருக்கு மட்டுமே ராமப்பாவின் உடல் நிலையும் உள்ள நிலையும் தெரியும்.இப்படிப்பட்ட சூழலில் முன் கதை விரிகிறது.

60 களுக்குக் கதை பயணிக்கிறது.அந்த காலகட்டத்தில் ராமப்பா ஒரு துடிப்பான இளைஞர்: முற்போக்கு எண்ணம் கொண்டவர்.பழமை பேசும் தன் தந்தையிடமிருந்து விலகி நிற்பவர்.உடல் இயக்கம் தடைபட்ட தன் தந்தையைப் பராமரிக்க ஆச்சாரி கேட்டுக்கொண்டதால் வீட்டுக்கு திரும்பி வருகிறார்.
இங்கே வந்தவர் தந்தையைப் பராமரிக்க வந்த அழகியான செவிலி ரேணுகா மீது காதல் கொள்கிறார்.ஆனால் அவளுக்கோ வேறொருவர் மீது காதல் இருக்கிறது.தந்தை இறந்த பிறகு தான் இதை அவள் கூறுகிறாள்.மனமுடைந்து போகிறார் ராமப்பா.விசித்திர மன போராட்டத்தில் சிக்கி நோயாளி போல ஆகிறார்.கனவுகளும் நினைவுகளுமாக அவரை வாட்டி வதைக்கின்றன.அவரது முன்னோர்களின் ஆவிகள், குல வழக்கங்களைப் பின்பற்றவும், வாரிசுகளை உருவாக்கி குல வம்சாவளியைத் தக்கவைக்கவும் அவரைத் தூண்டுகின்றன.மீண்டும் ரேணுகாவிடம் தனது திருமண விருப்பத்தைக் கூறுகிறார் .அவளும் அதை ஏற்றுக்கொள்கிறாள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு,தங்கள் இருவரது நிறத்திற்கு மாறாக கறுப்பாக ஒரு மகன் பிறக்கிறான்.அவனது பெயர் குசுமா.அந்த மகன் தனக்குப் பிறக்கவில்லை என்கிற சந்தேகம் வருகிறது ராமப்பாவிற்கு. பெரிதும் மனச்சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்.ரேணுகாவிடமிருந்து விலகிச் செல்கிறார்.அவளைத் துன்புறுத்தவும் செய்கிறார். தனது முதல் மகன் மீது பாசத்தைப் பொழிகிறார். இந்த சந்தேகச் சூறாவளியில் மாட்டிக் கொண்டு குசுமா அரண்மனைக்குளத்தில் மூழ்கித் தற்கொலை செய்துகொள்கிறான்.என் மகனைக் கொன்றது ராமப்பாதான் என்று ரேணுகா பொங்குகிறாள். ராமப்பாவின் மனநலம் சீர்கெட்டுப் போகிறது.
காலம் மாற்றத்தில் விஞ்ஞான வளர்ச்சி மேம்படுகிறது.மரபணு சோதனை வந்திருப்பது அறிந்த ராமப்பா அதன் மூலம் சோதிக்க நினைக்கிறார். ஒரு நம்பிக்கையுள்ள சடங்கு போல நினைக்க வைத்து குசுமாவின் உடலைப் புதைகுழியிலிருந்து தோண்டி எடுத்து அதன் எலும்புக்கூட்டின் ஒரு பகுதியை ரகசியமாகத் திருடுகிறார். சோதனைக்கு ஏற்பாடுகள் நடக்கின்றன.சந்தேக நோயால் ஆசாரி மீது சந்தேகம் கொள்கிறார் ராமப்பா.மருத்துவர் ஆச்சாரி ராமப்பா. மீது ஒரு பொய்ப் புகார் கூறுகிறார்.காவல்துறை நீதிமன்ற உத்தரவின்படி அந்த எலும்புக்கூட்டின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்படுகிறது.தீர்ப்பு வரும் சூழலில், ராமப்பா கோமா போல நித்திரையில் ஆழ்ந்துவிடுகிறார். இறுதியில், ராமப்பாதான் குசுமாவின் மரபணு ரீதியிலான தந்தை என்று நீதிமன்றம் அறிவிக்கிறது; தனது அரச பரம்பரை களங்கமில்லாதது என்று கண்மூடுகிறார்.

இறந்து கிடக்கும் ராமப்பாவின் உடலுக்கு இறுதி மரியாதை செய்யும்போது தனது மனதில் ஒளித்து வைத்திருக்கிற ரகசியங்களை ஆளாளுக்கு அவர் காதில் கூறுகிறார்கள்.அவை பல்வேறு ரகசியங்களை வெளிப்படுத்துகின்றன. அவை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி தரும் வகையில் உள்ளன. அவை என்ன என்பது தான் 169.40நிமிடங்கள் கொண்ட ‘ராவ் பகதூர் ‘ படத்தின் உச்சகட்ட காட்சிகள்.

இந்தப் படத்தின் பட உருவாக்கம் தொன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்பங்களின் பயன்பாட்டைக் கொண்டதாகவும் உள்ளது.மாய யதார்த்த வாதக்காட்சிகள் படம் பார்ப்பவர்களுக்கு புதிய அனுபவத்தை தருகின்றன.

அந்த பிரம்மாண்ட மாளிகையில் சுவர்களில் மாட்டி வைக்கப்பட்டிருக்கும் ​​முன்னோர்களின் உருவப்படங்களிலிருந்து ஆலமரத்தின் வேர்கள் ராமப்பா நோக்கி ஊர்ந்து வருகின்றன; இவை பார்ப்பவர்களுக்கு இது வேறு மாதிரியான படம் என்ற உணர்வு அளிக்கும்.குடும்பம் பரம்பரை பாரம்பரியம் என்று சுற்றுச் சூழல்கிற மனித மனத்தைப் பற்றிய கதை இது.

வாழ்ந்து கெட்ட குடும்பம் போல ஒரு காலத்தில் மதிக்கப்பட்ட அரச குடும்பத்தின் வம்சாவளியைச் சேர்ந்தவராக ராமப்பா என்கிற ராமுடு கதாபாத்திரத்தில் சத்யதேவ் நடித்திருக்கிறார். அவரது உலகம், மனக்குழப்பமும் பரம்பரை கௌரவத்தால் நிகழும் போராட்டங்களும் நிறைந்தது. அவ்வகையில் அந்த இறுக்க உணர்வுகளை நடிப்பில் காட்டியுள்ளார்.அவருக்கு எழும் கேள்விகளும் அவரைப் பற்றி பிறருக்கு எழும் கேள்விகளும் புதிராக இருப்பவை.

ரேணுகாவாக தீபா தாமஸ் நடித்துள்ளார் . மொழி பேசும் பட்டாம்பூச்சி  கண்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் நாசி படபடக்கும் குணச்சித்திரம் என்று அவர் பார்வையாளர்களை அபகரிக்கிறார்.

குடும்ப மருத்துவர் டாக்டர் ஆச்சாரியாக வரும் விகாஸ் முபாலா பல்வேறு வகையான சந்தர்ப்பங்களில் தனது தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார்.அ ச்சம்  வாக பரபரப்பான படம் முழுதும் வலம் வருகிற பாத்திரத்தில் பால பராசர் நடித்துள்ளார். ராமப்பாவின் மகன்   லவானாவாக பிரனாய் வகா  நடித்துள்ளார். ராமப்பாவின் கறுப்பு மகன்  சிறுவன்  குசுமாவாக மாஸ்டர் கிரண் அந்த பாத்திரத்தின்  சித்திரத்தில்  நடிப்பில்  அனுதாபங்களை அள்ளுகிறான்.நம்ம ஊர் திருடா திருடா ஆனந்த் இன்ஸ்பெக்டர் ஏ. ஜெகந்நாதனாக நடித்துள்ளார்.

இயக்குநர் வெங்கடேஷ் மகா வித்தியாசமான கோணத்தில் ஒரு வாரிசுரிமை போராட்டத்தை தொன்மமும் அறிவியலும் கலந்து இயக்கியுள்ளார்.செயற்கையான பரபரப்பு இல்லாமல் இயல்பான கதை ஓட்டத்திலேயே முடிச்சுகளை போட்டுப்போட்டு அவிழ்க்கிறார். இருதலைமுறைக் கதையை கூறும் போது அதற்கான ஒளி அமைப்பையும் பயன்படுத்தி ஒளிப்பதிவு செய்துள்ளார் கார்த்திக் பர்மர்.

கதை நிகழும் அந்தப் பிரமாண்ட மாளிகையே ஒரு பெரிய கதாபாத்திரமாகப் படத்தை ஆக்கிரமித்து கவர்கிறது.அந்த ராஜ வம்சத்து உடைகள் நடை உடை பாவனைகள் தனி அழகு.சுவரில் மாட்டப்பட்டிருக்கும் படங்கள் உயிர் வருவது போன்ற காட்சிகள், கதாபாத்திரங்கள் கூடத்தில் நின்று இருக்க பின்புலங்கள் சுழல்வது போன்ற காட்சிகள், மரத்தின் வேர் சுற்றி பிணைந்து கதாபாத்திரத்தை இழுத்துக் கொண்டு உள் செல்வது போன்ற காட்சிகள்  கிராபிக்சில் நம்மை வியக்க வைக்கின்றன.

ஸ்மரன் சாய் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் நம்மை வேறொரு உலகத்திற்கு அழைத்துச் செல்கின்றன.ஆங்காங்கே அளவோடு பயன்படுத்தப்பட்டிருக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் படத்தின் மர்மத்தின் தீவிரத்தை அதிகப்படுத்துகின்றன.

இந்தப் படத்தைத் தெலுங்கில் பார்த்தாலும் உணர்வுகளைக் கடத்துவதற்கு மொழி ஒரு தடையாக இருக்கவில்லை.

‘ராவ்பகதூர்’ திரையில் ஒரு புது அனுபவம் தான்.