‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர் விமர்சனம்

அரசு நிகழ்ச்சி ஒன்று மதுரை மாவட்டத்தில் நடக்கிறது. அதற்காகக் குழிதோண்டும் போது ஒரு எலும்புக் கூடு கிடைக்கிறது.அது ஊடகங்களில் தீயாகப் பரவுகிறது.அதன் பின்னணியை ஆராய இன்ஸ்பெக்டர் சசிகுமார் புறப்படுகிறார்.அவரது பயணத்தில் இன்னொரு எலும்புக்கூடும் கிடைக்கிறது. இரண்டும் பெண்ணின் எலும்புக்கூடுகள் என்றும் அவர்கள் கொலை செய்யப்பட்டு இறந்து இருப்பதும் தெரிகிறது . விஷயம் பெரிதாகிறது. சசிகுமார் தொடர்ந்து தேடுதல் விசாரணை என்று இறங்குகிறார்.அது மர்மமும் பரபரப்பும் நிறைந்த பயணமாக மாறுகிறது. கொலை செய்யப்பட்டவர் யார் ? செய்தவர் யார்? என்பதைப் பற்றி விறுவிறுப்பாக சொல்வதே இந்த ‘வதந்தி – சீசன் 2’ இணையத் தொடர்.

ஊடகப் படைப்பு வடிவங்களில் இணையத் தொடர்களுக்குக் கிளைக் கதைகளை விரித்துக் கொள்ளும் வசதியும் அதன் காட்சிகளுக்கான கொள்ளளவுக்கான இடமும் இருக்கிறது. சிலவற்றில் அது சுவாரஸ்யமாக இருக்கும். சிலவற்றில் அது சலிப்பூட்டும். ஆனால் இதிலும் கிளைக்கதைகள் உண்டு என்றாலும் அவை சோர்வூட்டாமல் நேர நீட்டிப்பு போன்று தெரியாமல் பிரதான கதைக்கு வலுவூட்டும் வகையில் உள்ளன. கொலையாளிகள் யார் ? கொலைக்கான காரணம் என்ன ? என்று யூகிக்க முடியாத அளவிற்கு பார்வையாளர்களுடன் வெற்றிகரமாகக் கண்ணாமூச்சி ஆடியிருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்.அந்த வகையில் திரைக்கதையில் திறமை காட்டியுள்ளார்.

தொடர் ஆரம்பித்ததுமே பார்வையாளர்களின் கவனத்தை ஒருமைப்படுத்தி தன் கட்டுக்குள் கொண்டு செல்கிற இயக்குநர், போகப்போக அதனை இறுக்கிப் பிடித்துக் கொண்டு கதை சொல்கிறார்.கொலையும் கொலை சார்ந்த குற்றவியல் கதையாக இருந்தாலும் அதற்குள் காதல், கணவன் மனைவி அன்பு, மதுரை மண்ணின் மைந்தர்கள், இளைஞர்கள், பண்பாடு, ஜல்லிக்கட்டு போன்றவற்றையும் இணைத்து ஒரு சுவாரஸ்யமான கலவையாக உருவாக்கி இருக்கிறார்.

நடிகர் சசிகுமார் இத்தொடரில் மூசா ராசா என்ற சப் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.இதுவரை மதுரை மண்ணின் மைந்தனாக பெரும்பாலும் முகம் காட்டியவர், இதில் காக்கி சட்டை அணிந்து இருக்கிறார்.அலட்டிக் கொள்ளாமல் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அந்தப் பாத்திரத்தில் நடித்துள்ளார்.

அறிமுக நடிகராக இருந்தாலும் யஷ்வந்த் ,தான் ஏற்று நடித்துள்ள முடக்கத்தான் மணி கதாபாத்திரத்தில் மதுரை மண்ணின் இளைஞராகக் கச்சிதமாகப் பொருந்திக் கலக்கியுள்ளார்.மாடு பிடி வீரராக அவரது உணர்வுகளை வெளிப்படுத்தி உள்ளது கவனிக்க வைக்கிறது.

’டாடா’ படத்தில் வந்து சற்று இடைவெளிக்குப் பிறகு இந்தத் தொடரில் நடித்திருக்கும் அபர்ணா தாஸ் சசிகுமாரின் ஜோடியாக வருகிறார் . பெரிதாக நடிப்பு வாய்ப்பு இல்லை.

முடக்கத்தான் மணியின் காதலியாக வரும் ரேவதி, ‘வதந்தி’ முதல் சீசனில் நடித்த அதே ராமராக வரும் விவேக் பிரசன்னா ஆகியோரும் தங்களது பணியைக் குறையின்றிச் செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் சரவணன் ராமசாமி, குற்றவியல் சார்ந்த கதையாக இருந்தாலும் வண்ணங்களைப் பயன்படுத்தி உள்ளார்.கதையை, பாத்திரங்களை, உணர்வுகளைப் புரிந்து கொள்ளும் வகையில் அவர் ஒளிப்பதிவு உள்ளது.

இசையமைப்பாளர் சைமன் கே.கிங் அமைத்துள்ள பின்னணி இசை, தொடருக்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மர்ம முடிச்சுகள் விழும் போதும் அவை அவிழும் போதும் அவர் மீட்டி உள்ள பின்னணி இசை அவற்றின் பூடகத்தை உணர வைக்கிறது.

படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ, இந்த இணையத்தொடரின் மர்மத்துடன் மதுரை மண்ணின் ,மக்களின், பண்பாட்டையும் வாழ்க்கையையும் ரசிக்கும்படி தொகுத்திருக்கிறார்.

கலை இயக்குநர் மீவினின் பணியும் கவனம் ஈர்க்கிறது. ஜல்லிக்கட்டுப் போட்டியைக் காட்சிப்படுத்திய விதம் எதார்த்தத்திற்கு அருகில் உள்ளது.

எழுதி இயக்கியிருக்கும் ஆண்ட்ரூ லூயிஸ், வதந்தி முதல் சீசனில் கொலையாளியைத் தேடும் பயணத்தை விறுவிறுப்பாகக்கொண்டு சென்றார்.இந்த இரண்டாம் சீசனில்,தண்டனை பெற்ற ஒருவரை நிரபராதி என்பதை நிரூபிக்கும் கதையின் பயணத்தைப் நகர்த்தி இருக்கிறார்.

அனைத்து அத்தியாயங்களும் சுவாரஸ்ய முடிச்சுகளுடன் உருவாகி உள்ளது இத்தொடரின் சிறப்பு.

இணையத் தொடர் அளிக்கும் சுதந்திரத்தை ஆபாசத்தை காட்சிகளிலோ வசனங்களிலோ அதீத வன்முறைகளையோ காட்டுவதற்குப் பயன்படுத்தும் பலரின் மத்தியில் இவை எதுவுமில்லாமல் அனைவரும் ரசிக்கும் படியாக உருவாக்கியுள்ளது பாராட்டத்தக்கது.

மொத்தத்தில், ‘வதந்தி – சீசன் 2’ அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் கவரும் .