’மொத ராத்திரி’ திரைப்பட விமர்சனம்

ரிஷிகாந்த் ,அனுஷ்கா அனில் குமார், சேத்தன் , ஏ. வெங்கடேஷ், பகவதி பெருமாள் ,அப்துல் லீ, ஷெல்லி கிஷோர் ,சங்கீதா பாலன் ,பானுப்ரியா, சுமித்ரா தேவி எல், வர்ஷினி கார்மேகம் ,கார்த்திகேயன் வேலன், கௌஷிக் கபிலன் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியுள்ளார் ராஜா கருப்பசாமி .

இசை: பரத் சங்கர், ஒளிப்பதிவு: சுரேந்திரன் பரஞ்சோதி,  படத்தொகுப்பு அசோக் அர்ஜுனன்  ,கலை இயக்கம் : ஏ பாலு மகேந்திரா,பாடல்கள் :யுகபாரதி ,நடனம்: அனுஷா விஸ்வநாதன். மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவிசங்கர் தயாரித்துள்ளனர்.

இந்தக் கதை தமிழ்நாட்டின் தென் மாவட்டத்தில் அதாவது தூத்துக்குடி பகுதி மண்ணில் நடக்கிறது.ரிஷிகாந்த துபாயிலிருந்து தெக்கூருக்கு வருகிறார். ஊருக்கு வந்த பிறகு தான் அவருக்குத் தெரிகிறது தனக்குத் திருமணம் என்று. அப்படிப்பட்ட சூழலில் அவருக்குத் திருமணம் நடக்கிறது. அவருக்கு மனைவியாக வரும் அனிஷ்மாவுடன் முதல் இரவு அறையில் பேசத் தொடங்குகிறார். ஆனால் அனிஷ்மா திடீரென்று கழிவறை செல்ல வேண்டும் என்று கேட்கிறார் . உள்ளே சென்று நீண்ட நேரம் ஆகியும் வராததால் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போய் பார்த்தால் அவர் ஜன்னல் வழியாகத் தப்பிக்க நினைக்கிறார். பிறகு தான் தெரிகிறது அவர் இன்னொருவரைக் காதலிக்கிறார் என்று. இந்த நிலையில் தனது வாழ்க்கை சூனியமான ஏமாற்றத்தையும் சகித்துக் கொண்டு அவரை வெளியே அழைத்துச் சென்று காதலனிடம் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறார். அங்கே போனால் அங்கே வரும் காதலன் தனக்கு இருப்பது உண்மையான காதலா என்றே சந்தேகமாக இருக்கிறது என்று கூறவே இருவருக்கும் அதிர்ச்சி. இந்த நிலையில் பிறகு நடப்பவை என்ன  என்பதுதான் 143.50 நிமிடங்கள் கொண்ட ‘மொத ராத்திரி’ படத்தின் மீதிக் கதை.முதல் இரவு நடக்க இருக்கும் 13 மணி நேரத்திற்கு முன்பு பிரதான கதை தொடங்கி பல்வேறு கலகல ,களே பரங்களுடன் இந்தப் படம் முடிகிறது.

முதல் இரவின்போது கதாநாயகி வீட்டை விட்டு ஓடுவது,  கதாநாயகியைக் கதாநாயகனே காதலனிடம் கொண்டு சேர்ப்பது, அந்தக் காதலனோ தனது காதலில் நம்பிக்கை இல்லை என்பது ,நாயகனும் தனக்கும் இந்தத் திருமணத்தில் விருப்பமில்லை தனக்கும் ஒரு காதல் கதை உண்டு என்று கூறுவது என்று தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்ய முடிச்சுகளைப் போட்டுக் கலகலப்பான திரைக்கதை பின்னி இயக்கி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்பசாமி.இம்முயற்சியில் அவர் வெற்றியும் பெற்றுள்ளார்.

ஒரு கல்யாண வீட்டில் நடக்கும் அத்தனை கலகலப்புகளையும் முரண்பாடுகளையும் ஏச்சு பேச்சுக்களையும் புறம் பேசுதலையும் சின்ன சின்ன சீண்டல்களையும்  சண்டைகளையும் மிக அழகாக எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் இயக்குநர். எவ்வளவு நெருக்கமான உறவாக இருந்தாலும் ஒருவரிடம் இருந்து அடுத்தவர் அன்னியர் தான் அவர்களது எண்ணங்கள் வேறு மாதிரியாக இருக்கும் என்பதைப் பல்வேறு பாத்திரங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்கள்.வீம்புகள் அகங்காரங்கள் போலி கௌரவங்கள் வெளிப்படுத்தும் தருணங்களையும் பல்வேறு பாத்திரங்கள் வாயிலாக காட்டியுள்ளார் இயக்குநர். பல இடங்களில் சிரிக்கவும் சில இடங்களில் சிந்திக்கவும் வைத்துள்ளார்.

நாயகனாக நடித்திருக்கும் ரிஷிகாந்த், வழக்கமான கதாநாயக பிம்பத்தைக் கலைக்கக்கூடிய ஒரு பாத்திரத்தில் இதில் தோன்றி நடித்துள்ளார். அந்த மருது கதாபாத்திரத்தில் அளவாக அழகாக நடித்து திரைக்கதைக்குப் பலம் சேர்த்துள்ளார்.உள்ளடங்கிய உணர்வு கொண்ட அந்தப் பாத்திரத்தின் தன்மையை நம்மை உணர வைத்துள்ளது சிறப்பு.
’சிறை’ திரைப்படத்திற்குப் பிறகு அழுத்தமான பாத்திரம் ஏற்றுள்ளார் நாயகி அனிஷ்மா அனில்குமார்.முத்துச்செல்வியாக வருபவர், அந்தப் பாத்திரத்திற்கு மேலும் அழுத்தம் சேர்த்து வெளிப்பட்டுள்ளார்.முதல் பாதியில் அதிகம் பேசாமலும் இரண்டாம் பாதியில் உணர்வுகளைக் கொட்டித் தீர்ப்பவராகவும் வருகிறார்.

கோயில் பூசாரியாக வரும் சேத்தன் பாத்திரம் படத்தின் தொடக்கத்திலேயே வருகிறது .படத்தின் கதைக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லாதது போல் தோன்றினாலும் அந்தப் பாத்திரத்தை வைத்து பிரதான கதாபாத்திரங்களை இணைத்துள்ள இயக்குநரின் சாமர்த்தியம் பாராட்டுக்குரியது.கல்யாண வீட்டில் பகவதி பெருமாள், அப்துல் லீ மற்றும் உறவினர் குழுவினர் அடிக்கும் குடிக்கச்சேரி ஜாலி ரகளையாக உள்ளது.அதுமட்டுமல்லாமல் முதலிரவில் என்ன நடக்கிறது என்று திருமணத்திற்கு வந்த பெண்கள்  தூங்குவதாகப் பாசாங்கு செய்து கொண்டு தங்களுக்குள் கிசுகிசுத்துக் கொள்ளும் அந்த ரகசிய பரிபாசை உரையாடல்களும் இன்னொரு வகை கலகலப்பு.அந்த முதலிரவுக்கான கட்டில் கொண்டு வரும் கதையும் அதன் பயணமும் வெடிச்சிரிப்பு ரகம்.

அவ்வகையில் சங்கீதா பாலன், பானுப்பிரியா, வர்ஷினி கார்மேகம், ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்புக் கலைஞர்களாகத் தோன்றாமல் அந்த ஊரின் மண்ணின் மைந்தர்களாகவே வருகிறார்கள்.

ஒரே நாள் இரவில் நடக்கும் இந்தக் கதையை அந்த உணர்வை விட்டுத் துளியும் நழுவி விடாமல் காட்சிகளை ஒளிப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் சுரேந்தரன் பரஞ்சோதி.கல்யாண வீட்டுக் களையோடு அந்த இரவு நேரத்துப் பதற்றத்தையும் நமக்குள் கடத்துகிறார் அவர்.

பரத் சங்கரின் இசையில் பாடல்கள் அனைத்தும் சூழல்களுக்குப் பொருத்தமாக உள்ளன. பின்னணி இசையும் கதாபாத்திர உணர்வுகளையும் சந்தர்ப்ப தீவிரத்தை உணர்த்தும் வகையில் உள்ளது.

ஓர் இரவில் நடக்கும் இந்தக் கதையை ச சிறிதும் தொய்வில்லாமல் படத்தொகுப்பு செய்துள்ளார் படத்தொகுப்பாளர் அசோக் அர்ஜுனன்.படத்தில் ஏராளமான பாத்திரங்கள் இருந்தாலும் அதனதன் முக்கியத்துவத்தைத் தவறவிடாமல் தொகுத்துள்ளார்.

திருமணத்தில் தொடங்குகிற கதை முதலிரவில் முடிவடைகிறது. அதற்குள் மனித மனங்கள் அவற்றின் ஊசலாட்டங்கள் குரூங்கள் குறும்புகள் முரண்பாடுகள் அகங்காரங்கள் தவறான நம்பிக்கைகள் அனைத்தையும் பற்றி அலசி இருக்கிறார் இயக்குநர் ராஜா கருப்புசாமி.போகிற போக்கில் சின்ன சின்ன காட்சிகள் சிறுவரி வசனங்கள் மூலம் கூட சமூக அவலத்தைச் சுட்டிச் செல்கிறார்.படத்தின் கதையை ஆபாச நெருப்பு சிறிதும் தீண்டிவிடாமல் நகைச்சுவை நீர் கொண்டு நனைத்துக் காப்பாற்றி இருக்கிறார் இயக்குநர்.

கதை நிகழும் இடங்கள், காட்சிப்படுத்தி உள்ள விதம், கதாபாத்திர வடிவமைப்பு ,அந்தத் தெற்கத்தி மொழியின் தொனி ஆகியவை படத்திற்குப் புது நிறம் கொடுத்து வணிகப்படத்தில் இருந்து சற்று உயர்த்திக் காட்டுகிறது. இந்தப் படத்திற்கு ’மொத ராத்திரி’ என்ற தலைப்பு தான் பலமும் பலவீனமும் என்று கூறலாம்.

’பல்வேறு படங்களில் வரும் முதல் இரவுக் காட்சிகளில் ஆபாசம் தலை தூக்கி இருப்பதைக் காண முடியும். ஆனால் இதில் தலைப்பு தான் அப்படியே தவிர கதையும் அது வெளிப்படுத்தும் உணர்வும் வேறு மாதிரியாக உள்ளன.

மொத்தத்தில், இந்த ’மொத ராத்திரி’ அனைவரையும் கவரும் ஒரு முழு நீள பொழுதுபோக்குப் படம் என்றே கூறலாம்.