சூர்யா, மமிதா பைஜு ,ராதிகா சரத்குமார்,ரவீனா டாண்டன், நாசர்,பவானி ஸ்ரீ, காளி வெங்கட் ,ஜார்ஜ் மரியான், மைம் கோபி,ராஜீவ் மேனன், சுனில் ரெட்டி, சுதா, ரகுபாபு நடித்துள்ளனர்.
வெங்கி அட்லூரி எழுதி இயக்கியுள்ளார்.இசை : ஜி.வி. பிரகாஷ் குமார்,ஒளிப்பதிவு : நிமிஷ் ரவி,படத்தொகுப்பு : நவீன் நூலி,கலை இயக்கம் : பங்களன்,மக்கள் தொடர்பு : யுவராஜ்,
ஸ்ரீகரா ஸ்டுடியோஸ் வழங்கியுள்ளது.தயாரிப்பு நிறுவனங்கள் : சிதாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் & ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ்
சார்பில் சூர்யதேவர நாக வம்ஷீ & சாய் சௌஜன்யா தயாரித்துள்ளனர்.
தொழிலதிபராக இருக்கும் சூர்யா 42 வயதானாலும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கிறார்.விருப்பப்பட்ட போதெல்லாம் வெளிநாடு சென்று ஜாலியாகச் சுற்றுவது அவரது வழக்கம். மறைந்த அவரது தந்தைக்கு இரண்டு தாரம் என்கிற கசப்பு அவருக்குள் இந்த முடிவெடுக்க வைத்திருக்கலாம் .அவரது தாயார் ராதிகா ,இவ்வளவு வசதியாக இருக்கும் குடும்பத்திற்கு ஒரு வாரிசு வேண்டாமா என்று தன் மகனைத் திருமணம் செய்ய செய்து கொள்ளச் சொல்லிப் பல வகையிலும் வற்புறுத்தி வருகிறார் .அம்மா மீது பாசம் கொண்ட சூர்யா, அம்மா சொன்னதையெல்லாம் கேட்கிறார் .அம்மாவுக்காக ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் தங்கப்பதக்கம் கூட வாங்கிக் கொடுக்கிறார். ஆனால் திருமணத்திற்கு மட்டும் சம்மதிக்காமல் இருக்கிறார்.ஒருகட்டத்தில் அம்மாவைத் திருப்திப்படுத்த அமெரிக்கா சென்று வாடகைத் தாய் ஏற்பாட்டின் மூலம் பெற்ற ஒரு குழந்தையுடன் இந்தியா வருகிறார். அந்தக் குழந்தைக்கு உயிராபத்துள்ள பிரச்சினை வருகிறது. எனவே மீண்டும் அமெரிக்கா சென்று அந்தக் குழந்தையை வயிற்றில் சுமந்த வாடகைத்தாய் மமீதாவைத் தன் வீட்டுக்கு அழைத்து வருகிறார் . மமீதா மருத்துவம் படிக்கும் மாணவி. பணத்துக்காக இந்த வாடகைத்தாய் ஒப்பந்தத்துக்கு ஒப்புக் கொண்டவர். இந்தியா வந்தவர் இங்கே சூர்யா,ராதிகா , அந்தக் குடும்பம், இங்குள்ள சூழல், குழந்தை அனைத்தையும் பார்த்து சூர்யாவைத் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்.ஆனால் சூர்யாவோ அதை ஏற்காமல் தவிர்த்து வருகிறார். நம்மிடையே இருப்பது வெறும் ஒப்பந்தம் தான், வேறு உறவு எதுவும் கிடையாது ,குழந்தை பெற்றுக் கொடுத்ததோடு அந்த ஒப்பந்தம் முடிந்து விட்டது ஊருக்குக் கிளம்ப கிளம்பலாம் என்றும் கறாராகச் சொல்கிறார்.இதைக் கூறி அமெரிக்கா செல்வதற்கு டிக்கெட்டும் எடுத்துக் கொடுத்து விடுகிறார். இந்த நிலையில் அவர் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே இந்த 161.26 நிமிடங்கள் கொண்ட ’விஸ்வநாத் & சன்ஸ்’ படத்தின் மீதிக் கதை.
ஏற்கெனவே வாத்தி, லக்கி பாஸ்கர் போன்ற படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார்.இதற்கு முன்பு ’கருப்பு’ என்று ஓர் அதிரடி ஆக்சன் படத்தில் நடித்த சூர்யாவுக்கு முற்றிலும் வித்தியாசமான குடும்பம் சார்ந்த கதையாக இந்தப் படம் அமைந்திருக்கிறது.
இப்படத்தில் சூர்யா, சஞ்சய் விஸ்வநாத் என்ற பாத்திரத்தில் நடுத்தர வயது தொழிலதிபராகப் பொறுப்பும் முதிர்ச்சியும் கொண்டவராக கடமையில் நேர்த்தி கடைப்பிடிப்பவராக வருகிறார். தனது தோற்றத்தாலும் உடல் மொழியாலும் அந்தப் பாத்திரத்தில் அசலாகப் பொருந்தி வசனம் பேசாமலேயே பாத்திரத்தின் தன்மையைப் புரிய வைத்து விடுகிறார்.தாய்ப்பாசம் மிக்கவராகவும் மமீதாவுடன் எச்சரிக்கை உணர்வுடன் கறார் தன்மையுடன் நெருக்கம் காட்டாத படியும் குழந்தை மீது பாசம் கொண்டவராகவும் தனது தந்தையின் இரண்டாம் தாரத்துக் குடும்பத்தினரை அணுகுவதிலும் கையாளுவதிலும் பொறுப்புள்ள குடும்ப உறுப்பினராகவும் பல காட்சிகளில் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளில் அழகாகவும் சிலவற்றில் கம்பீரமாகவும் சிலவற்றில் உணர்ச்சிகரமாகவும் வெளிப்பட்டுள்ளார்.சூர்யா ராதிகாவைப் பிரியும் காட்சியில் கண்கலங்க வைக்கிறார் .அந்தக் காட்சிகளை இடைவெட்டு இல்லாமல் காண்பித்து சூர்யாவின் நடிப்புத் திறனுக்கு சாட்சியமாகவும் மாற்றியுள்ளார் இயக்குநர்.
ஒரு பக்கம் ராதிகா _சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் பாச உணர்வின் வெளிப்பாடு என்றால் இன்னொரு பக்கம் மமீதாவுடன் பட்டும் படாமல் ரொம்ப ஒட்டாதே என்று எச்சரிக்கையுடன் பழகுவது கலகலப்பின் வெளிப்பாடு .குழந்தை வளர்க்க அவர் படும் பாடுகள் நகைச்சுவை நயமான காட்சிகள்.அம்மா- மகன் சம்பந்தப்பட்ட சில காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் ஒரு தருணத்தில் நெகிழ்ச்சிக்குரியதாக மாறுவது நல்லதொரு உணர்வுப் பரிமாற்றம்.
சூர்யா அலட்டிக் கொள்ளாமல் ஒரு பக்கம் ஸ்கோர் செய்தாலும் இன்னொரு பக்கம் மமீதா பைஜூ தனது துறுதுறுப்பான நடிப்பால் பார்வையாளர்களைக் கவர்கிறார். அமெரிக்கா, இந்தியா என்று இரண்டு தளத்திலும் அவர் தனது நடிப்பில் கவனம் பெறுகிறார். ஆட்டம் பாட்டம் என்றும் கிண்டல் கேலி என்றும் வெட்டு ஒன்று துண்டு ரெண்டு என்றும் எதையும் முகத்துக்கு நேராகப் பேசுகிறவராக அவரது பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அது கே. பாலச்சந்தர் பட நாயகியை நினைவூட்டும் சித்தரிப்பு.
பணக்காரக் குடும்பத்தில் வாழும் பாசக்கார அம்மாவாக இந்தப் படத்தில் நிர்மலா தேவி பாத்திரத்தில் ராதிகா வாழ்ந்திருக்கிறார். அவரது திரையிருப்பே படத்திற்குப் பெரும் பலமாக அமைந்துள்ளது. அவருக்கும் சூர்யாவுக்குமான காட்சிகள் பாசத்தின் வெளிப்பாடாக இருந்தாலும் அவருக்கும் மமீதாவுக்குமான காட்சிகள் வேறொரு கோணத்தில் உள்ளன. இரண்டும் இரண்டு விதமாக ரசிக்க வைப்பவை.
இவர்கள் தவிர சூர்யாவின் தந்தையின் இரண்டாம் மனைவி அதாவது சூர்யாவின் சித்தியாக ரவீனா டாண்டன் வருகிறார் .அவர் தனக்கு உரிய அங்கீகாரம் அடையாளம் கிடைக்காமல் அழுத்தப்பட்ட பாத்திரத்தில் நன்றாக வெளிப்பட்டுள்ளார். அவரது மகளாக வரும் பவானிஸ்ரீ நடித்து அப்பாத்திரத்தின் உணர்வுகளை வெளிப்பட வைத்துள்ளார்.சூர்யாவின் பிள்ளையாக நடித்துள்ள அந்தக் குழந்தையின் ஒவ்வொரு அசைவும் ரசிக்க வைக்கும் படி உருவாக்கி இருக்கிறார் இயக்குநர். சூர்யாவின் மைத்துனராக வழக்கறிஞராக வரும் சுனில் அதிகம் பேசாமலேயே தான் வரும் காட்சிகளை நகைச்சுவைக் காட்சிகளாக மாற்றி இருக்கிறார் .இரண்டாவது பாதியில் வரும் நாசர், மைம் கோபி, காளி வெங்கட் போன்றவர்களை மேலும் சில காட்சிகளில் பயன்படுத்திக் கொண்டு இருக்கலாம்.
வேலை முடிந்துவிட்டது ஊருக்குச் செல்லலாம் என்று மமீதாவை மூட்டை கட்டி சூர்யா வெளிநாட்டுக்கு அனுப்பி வைக்கும் நிலையில் அவரோ தனது குழந்தை உடன் தன்னைச் சேர்த்து வைக்க வேண்டும் என்று ”விஸ்வநாதன் நியாயம் வேணும், விஸ்வநாதன் நியாயம் வேணும்” என்று போராடுவதுடன் இடைவேளை வருகிறது. ஒரு குழந்தைக்குத் தாயின் இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது என்கிற உண்மையும் சூர்யாவுக்குத் தெரிகிறது.அதற்குப் பின்பு கதை வேறு திசையில் பயணிக்கிறது.இந்தக் கதையை விட்டு விலகி வெளியே செல்வது போல் தோன்றினாலும் பிறகு வெவ்வேறு அனுபவங்களைத் தரும் காட்சிகள் விரிகின்றன.படத்தின் மறுபாதியில் சூர்யா சித்தி ரவீணாவின் மகள் பவானிஸ்ரீயின் கல்யாண ஏற்பாடுகள், அதில் வரும் சிக்கல்கள் என்று கதை வேறொரு திசைக்குச் சென்றாலும் அனைத்தையும் இணைத்து சூர்யாவின் பாத்திரம் ஒரே கதையாக மாற்றுகிறது.
படத்தின் முதல் பாதியில் இருந்த பரபரப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்றாலும் அந்த பாசப் போராட்டத்தின் கதையில் நம்மை மிதவேகத்தைக் கடந்து ரசிக்க வைக்கிறார் இயக்குநர் .
படத்தின் ஒளிப்பதிவாளர் நிமிஷ் ரவி தனது ஒளிப்பதிவால் ஒவ்வொரு ஃப்ரேமையும் விழிகளை விரிய வைக்கும் வண்ணம் உருவாக்கி இருக்கிறார். படத்தின் அனைத்து காட்சிகளும் பெரிய கேன்வாஸில் வரையப்பட்ட ஓவியங்களாகக் கண்களை நிறைக்கின்றன. இந்தியா சென்னை ,அமெரிக்கா சான்பிரான்சிஸ்கோ என்று பயணிக்கிற கதையில் பின்புலக் காட்சிகள் அழகுணர்ச்சியோடு மிளிர்கின்றன.அவை தனிக் காட்சி இன்பம் அளிப்பவை.
ஜி.வி. பிரகாஷ்குமார் இசையில் சில பாடல்களும் பின்னணி இசையும் இயக்குநருக்குப் பக்கபலமாக அமைந்துள்ளன.
சூர்யாவும்ம் மமீதாவும் ஒன்று சேர்வதில் என்ன பிரச்சினை என்றால் 20 வயது வித்தியாசம் என்பதுதான். இவ்வளவு வயது வித்தியாசம் கொண்டுள்ள ஒரு பெண்ணை மணப்பதற்கு அவர் தயங்குகிறார் .பெண் தயாராக இருக்கும்போது ஆண் மறுப்பது ஏன் என்பதற்குச் சூர்யா சொல்லும் காரணங்கள் நியாயமானவை ; சிந்திக்க வைப்பவை .அதையும் மீறி மமீதா நிபந்தனை இல்லாமல் மணக்கச் சம்மதிக்கிறார். மமீவின் அன்பு வெல்கிறதா என்பதுதான் சுவாரசியமான கேள்வி .இப்படிப்பட்ட கதையில் இருவரது மெல்லுணர்வுகளையும் வெளிப்படுத்தும் படியான காட்சிகள் அமைத்துள்ளார் இயக்குநர்.
அம்மா, அப்பா, காதல், குடும்பம் ,பாசம் ,நெகிழ்ச்சி என்று உறவுகளில் உள்ளார்ந்த பக்கங்களை வெளிப்படுத்தும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்பத்தில் கலகலப்பான அம்மா மகன் கதை, பிறகு ஒரு கட்டத்தில் உணர்வு பூர்வமாக மாறுகிறது .திருமணத்தைத் தவிர்க்கும் சஞ்சய் விஸ்வநாத் பாத்திரமும் குழந்தை வந்த பிறகு அதை நோக்கிச் செல்லும் கதையின் பயணமும் ரசிக்கும்படியும் நம்புபடியும் உள்ளது.
’கருப்பு’ என்கிற ஆக்சன் அதிரடி படத்தில் வெற்றி பெற்ற சூர்யா, அடுத்ததாக அதற்கு நேர்மாறாகத்தான் கதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் இந்தக் கதைத் தேர்வு சரியானதுதான் .’கருப்பு’ எதிர்பார்ப்புடன் ரசிகர்கள் செல்லக்கூடாது. இது வேறு மாதிரியான அனுபவத்தை தரும்படி அமைந்துள்ளது.
சோர்வும் தொய்வும் ஏற்படாத வகையில் இந்தத் திரைக்கதைக்கான காட்சிகளைக் கோர்த்துள்ளார் படத்தொகுப்பாளர் நவீன் நூலி.
தெலுங்குத் திரையுலக இயக்குநர் இயக்கினாலும் தமிழ்க் கலாச்சாரத்தோடு இந்தப் படம் உருவாகி உள்ளது.அது மட்டுமல்லாமல் காட்சிகளில் மட்டுமல்ல சின்ன சின்ன வசனங்களில் கூட எதார்த்தம் குலையாமல் பொறி தட்டுகின்றன..
மொத்தத்தில் சூர்யாவின் பிரத்தியேக ரசிகர்களுக்கு மட்டுமல்ல குடும்பக் கதைப் பிரியர்களுக்கும் இந்தப் படம் பிடிக்கும்.


