‘ஒன் மேன்’ திரைப்பட விமர்சனம்

சங்ககிரி ராஜ்குமார் எழுதி ஒளிப்பதிவு செய்து இசையமைத்து ஒலிப்பதிவு செய்து நடித்து இன்னும் பல்வேறு தொழில்நுட்ப பணிகளை ஏற்று இயக்கித் தயாரித்துள்ள திரைப்படம் இது.

‘தனி ஒருவன்’ என்று இந்த படத்தின் பெயர் வைத்திருக்கலாம். அந்தப் பெயரில் ஒரு படம் வந்து விட்டது.அப்படித் தனி ஒருவனாக திரைப்படக்கலையின் 24 துறைகளையும் பிற தொழில் நுட்பக்கலைகளையும் சேர்த்து சுமார்  70 பணிகளையும் செய்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார்.

ஒரு விபத்து நடந்து சேதமடைந்த விமானம் கிடக்கிறது. காவல்துறை விபத்திற்குக் காரணம் என்ன என்று துப்பு துலக்குகிறது.
அங்கே ஒரு மொபைல் போன் கண்டெடுக்கப்படுகிறது. அதில் ஒரு வீடியோ இருக்கிறது. அதை பார்த்த போது ஒருவன் பேசுகிறான் அவன் யாரென்று கதை விரிய ஆரம்பிக்கிறது.

அது என்ன?வாலிபர்கள் ஐந்து பேர். ஒவ்வொருவரும் பல்வேறு  துறையிலும் திறமை மிகுந்த விற்பன்னர்களாக இருக்கிறார்கள். அவர்கள் ஒரு பயணத்தில் காட்டில் சிக்கிக்கொள்கிறார்கள்.தற்செயலாக ஒரு வினோதமான தொழிற்சாலையில் உலகத்தையே உறைய வைக்கும் ஒரு நாசகார ஆற்றலைக் கண்டுபிடிக்கிறார்கள்.
அதனைப்பயன்படுத்தினால், உலகம் பத்து நாட்கள் ஸ்தம்பித்து நிற்கும். அதைச்செயல் படுத்தி அதற்குள் அவர்கள் தாங்கள் விரும்பிய அனைத்தையும் சாதித்துக் கொள்ளத் துடிக்கிறார்கள்.இந்த விபரீத விளையாட்டின் முடிவு என்ன?என்பதுதான் பல்வேறு ஆச்சரியங்களை கொண்ட இந்த ’ஒன் மேன்’ படத்தின் கதை.  

சங்ககிரி ராஜ்குமார் என்கிற பெயரில் படத்தை இயக்கி இருக்கும் ஒருவரே பிரதானமான ராஜா, ரூபி, ஜாக், பூமா , ஜானி என்று பல்வேறு பாத்திரங்களில் வருகிறார். அது மட்டுமல்ல அதில் வரும் அவரது அம்மா பாத்திரத்திலும் அவரே நடித்துள்ளார் .அது மட்டுமல்ல இந்தத் திரைப்படத்தில் வருகிற அனைத்து கதாபாத்திரங்களிலும் அவரே தோன்றுகிறார். அதன்படி போலீஸ் அதிகாரிகள் கூட்டத்தில் தோன்றும் முகங்கள் எனப் பல்வேறு தோற்ற மாற்றங்களில் இப்படி அனைத்து பாத்திரங்களையும் ஏற்று நடித்திருக்கிறார்.
இது எப்படி சாத்தியமாகும் ? என்று நினைக்கலாம் இப்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியில் இதுவும் சாத்தியம்தான் என்று அவர் நிரூபித்துக் காட்டியுள்ளார். அது மட்டுமா? தான் நடிப்பதை, தானே ஒளிப்பதிவு செய்ய முடியும் என்பதையும் காட்டியுள்ளார். தனது கேமராவை ஓடவிட்டு தானே முன்னே ஓடிச்சென்று நடித்து அந்த பாத்திரங்களை உணர்வுகளைப் பதிவு செய்துள்ளார்.இதற்கு ஒரு பெரிய அசகாய உழைப்பும் திட்டமிடலும் தொழில்நுட்பம் சார்ந்த அறிவும் தேவை.அதை சங்ககிரி ராஜ்குமார் பிரகடனப்படுத்தியுள்ளார்.

சினிமா என்பது ஏதோ பணக்காரர்களின் கையில்தான் ஆயுதமாக இருக்கும், சாமான்யருக்கு அந்த உலகத்தில் இடமில்லை என்கிற கருத்தாக்கத்தைத் தகர்க்கும் வகையில், திறமை இருந்தால் யாரும் ஒரு திரைப்படத்தை உருவாக்க முடியும் என்று அவர் இந்த படத்தின் மூலம் நிரூபித்துள்ளார் .இந்தியாவிலிருந்து அமெரிக்கா வரை கதையைக்  கொண்டு செல்கிறார்.உலக அதிசயம் ஒவ்வொன்றிலும் காட்சிகள் வருகின்றன.

எனவே தான் இயக்குநர் சேரன் ,நடிகர் சத்யராஜ் போன்றவர்கள் இந்தப் படத்திற்கு ஆதரவு தெரிவித்து இதை உயர்த்திப் பிடிக்கிறார்கள் .

இந்தப் படத்தை பார்க்கும்போது ஒரு தனிமனித முயற்சியை மட்டும் அல்ல சினிமா தொழில்நுட்பத்தின் சாத்தியங்களையும் அறிந்து கொள்ள முடியும். எனவே அனைவரும் பார்க்க வேண்டிய படமாக இந்தப் படம் மாறி இருக்கிறது .

அது மட்டுமல்லாமல் இந்த படத்தில் இடம் வரும் கிராபிக்ஸ் காட்சிகளையும் இவரே அமைத்துள்ளார் அதன்படி கார், ரயில் பயணம், ஹெலிகாப்டர் ,விமானம் பயணங்கள் அதில் நிகழும் சாகசங்கள் சண்டைக் காட்சிகள் என்று நம்மை ஆச்சரியத்தின் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறார்.
கிராபிக்ஸ் காட்சிகளில் வறுமை தெரிந்தாலும் தொழில் நுட்பத்தில் தான் ஒரு வலிமையான திறமைகொண்டவர் என்பதை நிரூபித்திருக்கிறார்.

இவரிடம் பட்ஜெட் மட்டும் தான் பிரச்சினையாக இருந்திருக்கிறது. ஆனால் அந்த பட்ஜெட் நிர்பந்தத்தால் தான் இப்படி ஒரு சாதனையைச் சாத்தியப்படுத்தி இருக்கிறார்.

அது மட்டுமில்லாமல் அவர் பிரதானமாக ஏற்றுள்ள நான்கு பாத்திரங்களுக்கும் நான்கு விதமான முகத்தை கொடுத்து வேறு விதமான தோற்றத்தையும் குரல் மாற்றத்தையும் கொடுத்து நம்மைப் பார்க்க வைத்துள்ளார் .இந்த சாகசக் கதையின் ஊடாக அன்பைப் பற்றியும் மனிதாபிமானத்தைப் பற்றியும் பாடம் எடுத்துள்ளார்.

சினிமா மீது காதல் கொண்ட சங்ககிரி ராஜ்குமாரை முதுகு வலிக்கும் வரை தட்டிக் கொடுக்கலாம்.

மொத்தத்தில் இந்தப் படத்திற்கு நம்பிச் செல்கிற எவரையும் ஏமாற்றாது. வியப்பில்தான் ஆழ்த்தும்.