‘மண்டாடி ‘ திரைப்பட விமர்சனம்

சூரி, சுஹாஸ், மகிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டண்ட் சிவா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கியுள்ளார்.இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர். கதிர் ISCஒளிப்பதிவு செய்துள்ளார்.  படத்தொகுப்பாளர் பிரதீப் இ. ராகவ், கலை இயக்குநர் டி.ஆர்.கே. கிரண் மற்றும் ஆக்‌ஷன் காட்சிகளுக்காக பீட்டர் ஹெய்ன், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூ ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.ஆர். எஸ். இன்போடெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

நெய்தல் நிலப் பின்னணியில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது.கடலும் கடல் சார்ந்த நிலப் பகுதியும் கொண்ட ராமநாதபுரம் மாவட்டத்தில் இருக்கும் முகவைப்பட்டினம் என்ற ஊர்தான் இந்தப் படத்தின் கதைக் களம் .

அந்த ஊரில் மீன்பிடித் தொழில் தான் வாழ்வாதாரமாக உள்ளது.பிள்ளைப் பிராயத்தில் இருந்தே கடல் மீன்பிடி படகு படகு சவாரி போட்டி என்று வளர்கிறார்கள் அப்பகுதி மனிதர்கள்.இளைஞர்கள் மத்தியில் படகுகளை யார் வேகமாக செலுத்துகிறார்கள் என்பதில் ஒரு போட்டி உண்டு.அப்படியே போட்டிபோட்டுக்கொண்டு வளர்ந்திருக்கிறார்கள்.

அந்த ஊரில் அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு வருடா வருடம் பாய்மரப் படகு போட்டி நடைபெறும். அந்தப் போட்டியினால் அந்த ஊரில் ஏற்படும் மோதல்களும்,தனிமனித பகைமை உணர்ச்சிகளும் அதன் மூலம் வெளிப்படும் பழிவாங்கும் எண்ணங்களும் செயல்களும் நட்பும், துரோகமும் இணைந்த கலவை தான் இந்த ‘மண்டாடி’ படத்தின் கதை செல்லும் பாதை .

அந்த ஊரில் 20 வருடங்களுக்கு முன்பாக சத்யராஜ் ஒரு குருவைப் போல ‘முகவை மைந்தன்’ என்ற பாய்மரப் போட்டியின் குழுவுக்கு வழிகாட்டியாக காட்பாதர் போல இருந்திருக்கிறார்.இவருடைய சீடர்களாக இருந்தவர்கள்தான் படத்தின் நாயகனான சூரி, சுகேஷ், அச்யூத் குமார் இன்னும் பலர்.

சத்யராஜின் வழிகாட்டுதலில் தொடர்ந்து பல வருடங்களாக பாய்மரப் படகு போட்டியில் முகவை மைந்தன்ஸ் வெற்றி பெற்று வந்திருக்கிறது.

இந்த நிலையில் சுகேஷின் தந்தை செய்த தவறான வழிகாட்டுதலால் சத்யராஜிடம் இருந்து சூரி பிரிந்துவிலக நேரிடுகிறது.அதோடு சூரி சத்யராஜின் மகளான மகிமா நம்பியாரை வே று காதலித்து வருகிறார்.ஒரு கட்டத்தில்  தவறான புரிதல்களால் அந்தக் காதலும் கைகூடாமல் போகிறது.

சத்யராஜ் உடனான ஒரு மோதலில் சுகேஷின் தந்தை சத்யராஜை அவமானப்படுத்திவிட அதைக் கண்டு கோபமடையும் சூரி சுகேஷின் தந்தையை அடித்ததில் அவர் தண்டுவடம் பாதிக்கப்பட்டு சக்கர நாற்காலியே கதி என்று கிடக்கிறார்.அதற்குப் பிறகு நடந்த அசம்பாவிதங்களில் சத்யராஜ் கொல்லப்பபடுகிறா. ஆனால் சூரி காப்பாற்றப்படுகிறார்.இதற்கு மேலும் இந்த ஊரில் இருந்தால் தனக்கு நிம்மதி இருக்காது என்பதால் சூரி அந்த ஊரை விட்டு சென்னைக்கு வந்தவர் விஜிபி கோல்டன் பீச் நீச்சல் குளத்தின் கார்ட் ஆக வேலை பார்த்து வருகிறார்.ஊரில் இருந்து ஒரு இளைஞன் சூரியைத் தேடி அடைக்கலம் கேட்டு வருகிறான். ஆனால் இங்கேயும் சுகேஷின் ஆட்கள் தேடி வந்து அந்த இளைஞனைக் கொலை செய்ய முயற்சிக்கிறார்கள்.

இதனால் கோபமடையும் சூரி அந்த இளைஞனை அழைத்துக் கொண்டு 20 வருடங்களுக்கு முன்பு தான் வேண்டாம் என்று வந்த அதே ஊருக்குள் வருகிறார்.சூரி தனது கடந்த காலத்தைச் சொல்வது போல் கதை நகர்கிறது.மீண்டும் பாய்மரப் படகுப் போட்டியில் தான் ஒரு தனி அணியை அமைத்து போட்டியில் பங்கேற்க போவதாக சவால் விடுகிறார்.அவருடைய அந்த சவால் ஜெயித்ததா? இல்லையா? என்பதுதான் இந்த ‘மண்டாடி’ படத்தின் மீதிக்கதை.

சூரி  அவமானத்தையும் வலிகளையும் பொறுத்துக் கொண்டு முகத்தையும் மனத்தையும் இறுக்கமாக வைத்துக்கொண்டு அந்த பாத்திரத்தின் தீவிரத்தை தோற்றத்திலும் முக பாவனைகளிலும் நடிப்பிலும் காட்டி முத்திரை பதிக்கிறார் .சூரி படகு போட்டியில் வெல்வதற்கு தனது அணியினர் தயார் படுத்தும் காட்சிகளில் ஆவேசத்தையும் வெற்றி வெறியையும் காட்டியுள்ளார்.அதுமட்டுமல்லாமல் பல்வேறு நடிப்பு சந்தர்ப்பங்கள் அவருக்கு வாய்த்துள்ளன. அதையும் சரியாக பயன்படுத்தியுள்ளார்.‘மாமன்’ படம் போலவே இந்தப் படத்திலும் சூரி காட்டியிருக்கும் எமோஷன்ஸ் காட்சிகள் நிச்சயம் அவரது ரசிகர்களுக்குப் பிடிக்கும்.

மேக்கப்பே இல்லாமல் நடித்திருக்கும் மகிமா நம்பியார் படம் முழுக்க தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

வில்லனாக நடித்திருக்கும் சுகேஷ் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார்.பகைமை உணர்ச்சியை முகத்தில் தேக்கி வைத்துக் கொண்டு அவர் காட்டியுள்ள வில்லத்தனம் ரசிக்க வைக்கிறது.மகிமா நம்பியாரின் கணவராக நடித்திருக்கும் அச்யூத் குமாரும் அந்தப் பாத்திரத்துக்கு ஏற்ப நடிப்பை வழங்கியுள்ளார்.

இடைவேளையில் எட்டிப் பார்த்து பின் பாதியில் வரும் சத்யராஜ் தனது தோற்றம் உடல் மொழி பேச்சு வழக்கு செயல்கள் என அனைத்திலும் அந்த மண்ணின் மைந்தராக வெளிப்படுகிறார்.

மகிமா நம்பியாரின் மகனாக நடித்தவரும், அவருடைய காதலியாக நடித்த சாச்சனா, சுகேஷின் அப்பாவாக நடித்தவர் மற்றும் சூரியின் நட்பு வட்டத்தில் இருப்பவர்கள் அத்தனை பேருமே நடிப்புக் கலைஞர்களாகத் தோன்றாமல் அந்தந்த பாத்திரமாகவே வருகிறார்கள்.

எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவில் நெய்தல் நிலக் காட்சிகளை அழகாகக் காட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் படகு சவாரி போன்றவற்றை நம்மையும் நடுக்கடலில் இறக்கி களத்தில் நின்று கண் முன் காட்சிகளைக் காட்டும் வகையில் ஒளிப்பபதிவு செய்துள்ளார்.

ஜி.வி.பிரகாஷின் இசையில் பாடல்கள் வெற்றி பெற்றுள்ள நிலையில் பின்னணி இசையிலும் பிரமாதப்படுத்தியிருக்கிறார். படத் தொகுப்பாளரான பிரதீப் ராகவ் தன்னுடைய நேர்த்தியான தொகுப்பால் பாய்மரப் படகுப் போட்டி முழுவதையும் அவ்வளவு அழகாக நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்.குறிப்பாக பாய்மர படகுப் போட்டிக்காட்சிகள் பார்ப்பவர் நரம்புகளில் உணர்ச்சி மின்சாரத்தைத் தூண்டும் வகையில் உள்ளன.

ஒரு கிராமத்து மீனவர் கதையில், காதல் நட்பு துரோகம் பொறாமை சூழ்ச்சி வன்மம் தியாகம் குற்ற உணர்ச்சி பகைமை உணர்ச்சி அனைத்தும் கலந்து கொடுத்து இருக்கிறார் இயக்குநர்.

கடலில் திடீரென்று ஏற்படும் ஆரச்சுழற்சி கதையின் திருப்புனையாக வந்து படம் பார்ப்பவர்களுக்குப் பெரிய காட்சி அனுபவத்தை தருகிறது.நடுக்கடலில் இடம்பெறும் காட்சிகளைப் பார்க்கும்போது படக்குழுவினர் எவ்வளவு உழைத்திருக்கிறார்கள் என்பது தெரிகிறது. இந்த படத்தை ரசித்து இந்த படத்திற்கு ஆதரவு கொடுக்கலாம் .

படம் பார்ப்பவர்களுக்கு நிச்சயமாக திருப்தி தரும்.மொத்தத்தில் இதுவெல்லாம் ஒரு படமா என்று திண்டாடி வருந்தும் அளவிற்கு படங்கள் வரும் சூழ்நிலையில் கொண்டாடி மகிழும் அளவிற்கு வந்துள்ள ஒரு படம்தான் இந்த ‘மண்டாடி’