‘என்ன விலை’ திரைப்பட விமர்சனம்

கருணாஸ் , நிமிஷா சஜயன், விஜயலட்சுமி வீரமணி,கமலேஷ் ஜெகன், மோகன் ராமன், மொட்ட ராஜேந்திரன், ஷாஷா சிவகுமார்,ஒய்ஜி மகேந்திரன் , பிரபு,பூர்ணிமா பாக்யராஜ் ,நிழல்கள் ரவி, லொள்ளு சபா சாமிநாதன், பாண்டி, கவிதாலயா கிருஷ்ணன், தீபா ஷங்கர் ,கோதண்டம், சேரன் ராஜ், கொட்டாச்சி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
சஜீவ் பழூர் எழுதி இயக்கி இருக்கிறார் .ஆல்பி ஆண்டனி ஒளிப்பதிவு செய்துள்ளார் .சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார்.ஸ்ரீஜித் சாரங் படத்தொகுப்பு செய்துள்ளார். கலாமயா சீனிவெர்ஸ் சார்பில் ஜித்தேஷ் வி,அனுகோபால் வேணுகோபாலன் தயாரித்துள்ளனர்.

ராமேஸ்வரம் கடற்கரைப் பகுதியில் வாழும் தவசிமுத்து மீன்பிடித் தொழில் செய்பவர்.பட்டினியாகக் கிடந்தாலும் பத்தினியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிற நேர்மையான மனம் கொண்டவர். அவர் அவ்வப்போது கடலில் மூழ்கி சங்கு, முத்து போன்றவற்றை எடுப்பவர். அவர் மனைவி, பள்ளி செல்லும் வயதில் ஒரு மகன் ,கூடவே தன் தங்கை என்று வாழ்ந்து வருகிறார்.ராமேஸ்வரத்தில் அக்னி தீர்த்தக்கரை என்று சொல்லப்படும் இடத்தில் பக்தர்கள் ஏதாவது தாங்கள் துறக்க நினைப்பதைக் கடலில் வீசி எறிந்துவிட்டுச் செல்வதுண்டு .தவசி முத்துவும் அங்கே கடல் நீரில் வீசி எறியும் காசு போன்ற சில பொருட்களை மூழ்கி எடுத்து விற்று வாழ்க்கை நடத்துபவர். அப்படி ஒரு நாள் அக்கினி தீர்த்தம் பகுதியில் மூழ்கிக்கிடந்த ஒரு பதக்கத்தை எடுக்கிறார்.பளபளப்பாக இருந்ததைப் பார்த்து பயந்து இது ஏதோ  விலை மதிப்புள்ளது என்று நினைத்து நாம் வைத்திருக்கக் கூடாது என்று போலீஸ்காரர் வரதராஜனிடம் கொடுக்கிறார். போலீஸ்காரர் அதில் தங்கமும் வைரமும் உள்ளதை அறிந்து அதை அபகரிக்க நினைக்கிறார். அதில் உள்ள வைரக் கல்லை எடுத்துக் கொண்டு பதக்கத்தை மட்டும் தவசியிடம் கொடுக்கிறார்.அவர் வைரக்கல்லை விற்று சக போலீஸ்காரர்களிடம் பணத்தைப் பங்கு போடுகிறார்.வைரக்கல்லை விற்றது வெளியே தெரிகிற போது தங்களைக் காப்பாற்றிக்கொள்ள தவசி மீது திருட்டுப் பட்டம் சுமத்துகிறார்கள். தவசியைக் கைது செய்து லாக்கப்பில் சித்திரவதை செய்கிறார்கள் .இப்படிப்பட்ட நிலையில் தவசிமுத்துவை அந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்ற வழக்கறிஞர் காஞ்சனா வருகிறார்.தவசி உண்மையில் நிரபராதிதான் என்றாலும் போலீசின் ஜோடனை வழக்குகள் அவரைக் குற்றவாளியாக நிறுத்துகிறது.அதில் இருந்து தவசிமுத்துவை மீட்க வழக்கறிஞர் காஞ்சனா சட்டப் போராட்டம் நடத்துகிறார். அது பல்வேறு தளங்களில் இந்தக் கதையை அழைத்துச் கொண்டு செல்கிறது. முடிவில் இந்த அமைப்பையே கேள்வி கேட்டு அதிர வைக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் நிரபராதி என்கிறார்கள்.ஆனால் தனக்கு நேர்ந்த அவமானங்களுக்கும் சித்திரவதைகளுக்கும் இழந்த மானத்திற்கும் விலை கேட்கிறார் தவசி.அது நாட்டையே அதிரவைக்கிற அளவிற்கு முடிக்கிறது அதன் முடிவு என்ன என்பதுதான் 123.52 நிமிடங்கள் கொண்ட ‘என்ன விலை’ படத்தின் மீதிக் கதை.

ஆரம்பத்தில் ஒரு கடற்கரையோரக் கிராமத்தில் மீன்பிடித் தொழில், மக்கள் வாழ்க்கை என்று செல்கிற கதை,நெய்தல் பகுதி மக்களின் வாழ்வியலைப் பிரதிபலிக்கிற அந்தக் கதை பிறகு நகைத் திருட்டு என்று திரில்லர் நிறம் ஏற்றிக்கொண்டு வேகமெடுக்கிறது.அது புதையல் எடுக்கும் தொழிலில் கிடைத்த பொருள் யாருக்குச் சொந்தம் என்று கேள்வியோடு புதையல் வேட்டை என்று இடைவேளை வருகிறது. அதற்குப் பிறகு நடக்கும் சட்டப் போராட்டம் விறுவிறுப்பாக இந்தக் கதையை இழுத்துச் செல்கிறது .ஒரு ஏழை மனிதனுக்கு நேரும் அந்த அவலம் நாட்டையே உலுக்குகிறது. அது நாட்டுப் பிரச்சினையாக மாறுகிறது.பிறகு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை நோக்கி நகர்கிறது இந்தப் படத்தின் திரைக்கதை.

இந்தப் படத்தில் தவசிமுத்து பாத்திரத்தில் கருணாஸ் நடித்திருக்கிறார். இதுவரை அவர் ஏற்றதிலேயே சிறப்பான பாத்திரம் இதுதான் என்று சொல்லும் அளவிற்கு அதில் அவர் இயல்பாகவும் ஈர்க்கும்படியாகவும் நடித்துள்ளார் .புறத்தோற்றத்தில் தெரிகிற அனைத்தும் அவரைக் குற்றவாளியாக பார்க்க நினைக்கிறது.
ஆனால் உள்ளுக்குள் நேர்மையானவராக இருப்பவர் . அதற்கேற்ற அவரது தோற்றம் ,உடல் மொழி ,ஓசை ஒடுங்கிப் போன கரகரப்பான குரல் வரை அந்தப் பாத்திரத்தில் வெகுவாக பொருந்தி உள்ளார். அவரது நடிப்பும் மிகச் சிறப்பாக வெளிப்பட்டுள்ளது.லாக்கப் சித்திரவதையின் போதும் வீட்டுக்கு வந்து கைது செய்யப்படுவோம் என்று பயந்து நான் ஜெயிலுக்கு போக மாட்டேன் என்று ஒதுங்கி ஒடுங்கி அதிர்ந்து கதறுவதும் என  அவர் பார்ப்பவர்களைக் கலங்க வைக்கிறார்.கருணாஸ் என்கிற நடிகர் கரைந்து தவசிமுத்து ஆகவே வெளிப்பட்டுள்ளார்.சபாஷ்.

அவரது மனைவியாக விஜயலட்சுமி வீரமணி நடித்திருக்கிறார். மிக இயல்பான பாத்திரத்தில் வந்தது அழகாக அந்தப் பாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் .கருணாசின் தங்கையாக வரும் ஷாஷாவும் இயல்பான நடிப்பில் பதிகிறார்.கருணாஸின் மகனாக வரும் சிறுவன் கமலேஷ் ஜெகன் சில காட்சிகளில் வந்தாலும் அனுதாபத்தை அள்ளுகிறான்.

படத்தின் பிரதான பாத்திரமாக கருணாஸ் இருந்தால் இன்னொரு பக்கத் தூணாக நிற்கிறார் நிமிஷா விஜயன். அவரது ஒளி பொருந்திய கண்கள் அந்த பாத்திரத்திற்கு உயிரூட்டுகின்றன.நெஞ்சில் உரமும் நேர்மைத் திறமும் கொண்ட வழக்கறிஞராக அவர் வருகிறார். அவரது ஒவ்வொரு அசைவும் கம்பீரமாக இருக்கிறது. அந்த பாத்திரத்திற்கு வலு சேர்த்துள்ளது.அதேபோல இந்த படத்தில் முதலமைச்சராக வரும் பிரபு, நீதிபதிகளாக வரும் நிழல்கள் ரவி,பூர்ணிமா பாக்யராஜ், அட்வகேட் ஜெனரலாக வரும் ஒய் ஜி மகேந்திரன், அரசு தரப்பு வழக்கறிஞர்களாக வரும் லொள்ளு சபா சாமிநாதன், கவிதாலயா கிருஷ்ணன்,மார்வாடியாக வரும் கோதண்டம் ,பழக்கடை கொட்டாச்சி ,மோசமான போலீஸ் காரராக வரும் மோகன்ராம், அவருக்கு மேலதிகாரியாக வரும் சேரன்ராஜ், அந்த உதவி வழக்கறிஞர் பையன் ,தெலுங்கு நடிகை வைஷ்ணவியாக வருபவர், சூப்பர் ஸ்டார் ராஜ்கிரணாக வருபவர், நீதிமன்றத்தில் கை உயர்த்திக் கைதட்டுபவர் வரை அனைவரும் தத்தமது பாத்திரத்தில் கவனிக்க வைக்கிறார்கள்; நினைவில் நிற்கிறார்கள்.

ராமேஸ்வரத்தில் தொடங்கும் கதை மதுரை, ஆந்திரா, பீகார் என்று பல இடங்களுக்குச் செல்கிறது.பின்புலங்களையும் கதாபாத்திரங்களையும் கதாபாத்திர உணர்வுகளையும் கண் முன் நிறுத்துகிற வகையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் ஆல்பி ஆண்டனி.வழக்கமான மசாலாப் படங்களுக்கு விறுவிறுப்பான பின்னணி இசை அமைப்பதில் பெயர் பெற்றிருக்கும் இசை அமைப்பாளர் சாம் சி எஸ்
இப்படிப்பட்ட படத்திற்கு இசையமைத்ததன் மூலம் வேறு பாதையில் பயணம் செய்யத் தொடங்கி இருக்கிறார். கதையில் பல்வேறு அடுக்குகளைக் கொண்ட இந்தப் படத்தில் அதன் தன்மைக்கேற்ற வித்தியாசமான பின்னணி இசையையை வழங்கி இருக்கிறார் .அவர் இசையமைத்திருக்கும் பாடல்களும் கவனிக்க வைக்கின்றன.நெருடல் இல்லாமல் படப்பு தொகுப்பு செய்துள்ளார் சுஜித் ஷாரங்.

ஒரு கட்டத்தில் கடல் நீரில் கண்டெடுக்கப்படும் பொருள் தொல்பொருள் துறையைச் சார்ந்ததா? கலைத் துறையைச் சேர்ந்ததா? கருவூலத்துறையைச் சேர்ந்ததா?  சுங்கத்துறைக்குச்சொந்தமா? என்று கேள்விகள் எழுகின்றன. சட்டப் போராட்டத்தில் எழுப்பப்படும் கேள்விகள் சுவாரசியமானவை.
அதற்கான விவாதங்களும் தர்க்கங்களும் ரசிக்கும்படி உள்ளன.

நீதித்துறை, அதன் இரக்கமற்ற பார்வை, அமைப்பில் உள்ள ஓட்டைகள், அதிகார வர்க்கத்தின் அலட்சியம், ஊடகங்களின் வியாபாரத்தனம், அறமற்ற பிழைப்பு வாதம் அனைத்தையும் வெளிப்படுத்தும்படி காட்சிகள் உள்ளன. மொத்தத்தில் இந்தப் படம் உணர்ச்சிகரமான குடும்பக்கதை சமூகக் கதையாகத் திரும்பி நாட்டின் பிரச்சினையாக உருமாறி படம் பார்ப்பவர்களின் உணர்வோடு ஒன்றச்செய்து விடுகிறது.அதற்கான திரைக்கதை ஓட்டம் சிறப்பாக உள்ளது.அதனால் தான் பல்வேறு சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளது இந்தப் படம்.

பக்திப் படம் எடுத்தால் கூட கெட்டவனைக் காட்டுகிறேன் என்ற பெயரில் புகைப்பதையும் குடிப்பதையும் காட்சிகளாக வைத்துக்கொண்டு எடுக்கிற இந்தக் காலத்தில் ஒரே ஒரு காட்சியில் கூட புகை பிடிப்பதையும் மது அருந்துவதையும் காட்டாமல் முழுப் படத்தையும் எடுத்திருப்பதற்கு முதலில் இந்தப் படக் குழுவினரைப் பாராட்ட வேண்டும்.

மொத்தத்தில் இப்படம் மானத்திற்கு என்ன விலை என்று கேட்கிறது. இந்தக் கதை படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் தங்களது கதையாக உணர வைக்கும்.அந்த அளவிற்கு உணர்ச்சிகரமான ஒரு படைப்பாக உருவாகியிருக்கிறது. இயக்குநர் சஜீவ் பழூருக்குப் பாராட்டுகள்,வாழ்த்துகள்! இப்படத்தைத் தயக்கமின்றி அனைவரும் பார்க்கலாம்.