அரசியல்வாதிகளைப் போல் ஊழல் செய்யவில்லை; ஊரை அடித்து உலையில் போடவில்லை; நில அபகரிப்பு செய்யவில்லை; லஞ்சம் வாங்கிச் சொத்துக்குவிப்பு செய்யவில்லை; மனித உழைப்புகளைச் சுரண்டவில்லை. பாவத்தைச் சேர்க்கவில்லை. யாருடைய சாபத்தையும் வாங்கவில்லை.ஆனாலும் இவை எதுவுமே செய்யாத சிவகுமாரை ஏன் விமர்சனம் செய்கிறார்கள்?
அவர் யாரைப் பற்றியும் விமர்சிப்பதில்லை. யாரைப் பற்றியும் எதிர் கருத்து சொல்வதில்லை.அரசியல் பேசுவதில்லை. அரசியல் சவடால் கருத்துக்கள் சொல்வதில்லை.அரசியல் விவாதங்களில் பங்கேற்பதில்லை. எந்த சமூகத்தையும் குறைவாகப் பேசியதில்லை.எந்தவித விமர்சனங்களிலும் ஈடுபடுவதில்லை.பரபரப்புக்காக எதுவும் பேசுவதில்லை. இருந்தாலும் ஏன் விமர்சிக்கப்படுகிறார்?![]()
முடிந்தவரை நல்லதே நினைக்கிறார்; நல்லதையே செய்கிறார்.நல்லது செய்ய முடியாவிட்டாலும் கூட பொல்லாததை நினைப்பதில்லை; செய்வதில்லை. புறம் கூறித் திரிவதில்லை. இருந்தாலும் என் விமர்சிக்கப்படுகிறார்?
பொறாமை தான் காரணம்.வேறு என்ன இருக்க முடியும்?
இன்று ஊடகங்களில் தீவிரமாக இயங்கும் கருத்துப் போராளிகள் எல்லாரும் ஜாதி மத வெறியர்கள் தான்.அவர்களை யாராவது சீண்டினால் தேன் கூட்டில் இருந்து சீறிப்பாயும் தேனீக்கள் மாதிரி படைபடையாக வந்து கொட்டுவார்கள். விஷத்தைக் கக்குவார்கள். வேட்டை விலங்குகள் போல அறமற்றுக் கடித்துக் குதறுவார்கள்.கண்மூடித்தனமான சித்தாந்தத்தில் இயங்கும் கும்பலும் இதையே செய்யும்.ஆனால் அவர்கள் பற்றி எதுவும் பேசாமல் இருந்தால் கூட அவரை விமர்சிக்கிறார்கள்.
திரைத் துறையில் எவ்வளவு நல்லவர்கள் இருக்கிறார்களோ அவ்வளவு அழுக்கு மனம் கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஒரு பக்கம் வாழ்த்திக்கொண்டே மறுபக்கம் வசை பாடுவார்கள்.அதற்குக் காரணம் வேறு என்ன? பொறாமை தான்.
அவர் ஒரு நடிகராக மட்டுமல்ல ஓவியராக மட்டுமல்ல பேச்சாளராகவும் நல்ல கருத்துக்களை சொல்கிறார் .ஆனால் அதனைப் பொறுக்காதவர்கள் வயிற்று எரிச்சலில் பொசுங்கிக் கொண்டு ஏதாவது எதிர்மறையாகக் கருத்து சொல்கிறார்கள்.அதிலும் சமூக ஊடகங்களில் முகத்தை மறைத்துக் கொண்டு அவதூறு செய்து கொண்டு இருக்கிறார்கள்.பெரும்பாலும் தாங்கள் யார் என்று தெரியாமலே மறைத்துக் கொண்டு போலி முகங்களோடு இதைச் செய்யும் கோழைகள் அவர்கள்.
தனது கல்வி அறக்கட்டளை மூலமும் அகரம் பவுண்டேஷன் மூலமும் சிவகுமாரும் அவரது மகன்களும் பல நூறு மாணவர்கள் வாழ்க்கையில் நேரடியாக விளக்கேற்றி வைத்திருக்கிறார்கள்.மறைமுகமாகப் பல்லாயிரம் மாணவர்களுக்கு நம்பிக்கை ஒளியேற்றி வைத்திருக்கிறார்கள்.உழவன் பவுண்டேஷன் மூலமும் கார்த்தியும். ஆனால் இந்த சமூகத்திற்காக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடாத பதர்கள் எல்லாம் அவரை விமர்சிப்பதும் அவதூறு பேசுவதும் என்று இருக்கின்றன.
அவர் எப்போதும் பேராசைப்படாமல் அளவான வருமானம் அதற்கேற்ற வாழ்க்கை என்று தனக்குள் ஒரு விதிமுறைகளை வகுத்துக் கொண்டு வாழ்ந்தவர்; வாழ்பவர் . தனது உடலையும் உள்ளத்தையும் சீராக வைத்துக் கொண்டு இயங்கி வருகிறார். அதனால்தான் அவரிடம் நல்ல நினைவாற்றல் உள்ளது. அவரிடம் கற்றுக் கொள்வதற்கு ஆயிரம் உள்ளன ? பொறாமைப்படுவதற்கு என்ன உள்ளது?
பின்னே ஏன் வசை பாடுகிறார்கள் ?
அவரது உடல் நலமும் மன நலமும் வளர்ச்சியும் வெற்றிகளும் நற்பெயரும் அவர்களைத் தாழ்வுணர்ச்சி கொள்ள வைக்கின்றன. நம்மால் முடியவில்லையே நமக்கு நிகழவில்லையே என்று பொறாமைப்பட வைக்கின்றன. வேறு என்ன சொல்ல முடியும்?
தங்களது தோல்விகளை, தாழ்வுணர்ச்சியை மறைக்க அவதூறு பேசி வசைபாடி அதைச் சமன் செய்து கொள்கிறார்கள். இதன் மூலம் சுய இன்பம் காண்கிறார்கள்.இது ஒரு மனநோய்க் கூறு என்று தான் சொல்ல வேண்டும்.
அவரை செல்ஃபி எடுத்ததைப் பற்றி வேலையற்ற கூட்டத்தினர்,சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்.ஒருவர் அனுமதி இல்லாமல் அவரைப் புகைப்படம் எடுப்பது தவறு மட்டுமல்ல உரிமை மீறலும் கூட.செல்போனில் செல்ஃபி எடுக்கும் போது ஒரு சிக்கல் உண்டு .செல்ஃபி எடுப்பதாக நினைத்துக் கொண்டு சம்பந்தப்பட்டவரிடம் நெருங்கி உரசி தள்ளி அவருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்துவதுண்டு.இது பொதுவாகவே எரிச்சல் ஏற்படுத்தும். போன தலைமுறையினருக்கு இதில் ஒவ்வாமை உண்டு.அப்படித்தான் அதில் அவர் எதிர்வினை செய்தார்.தவிர்க்கப் பார்த்ததைத் தட்டி விட்டர், தட்டி விட்டார் என்று அதையே சொல்லிக் கொண்டு திரிகிறது ஒரு கூட்டம்.
அவர்கள் வீட்டில் உள்ளவர்களை இப்படி எடுத்தால் தெரியும் அவர்களுக்கு அதன் அசௌகரியம் என்ன என்பது. ஒருமுறை போலி பக்தன் பற்றி ஒரு கருத்து கூறியதற்காக இந்துமத வெறியர்கள் வசைபாட ஆரம்பித்தார்கள்.எப்போதும் திருநீற்று முகத்தோடு இருக்கும்,அவரே சிறந்த முருக பக்தர், சொந்த ஊரில் ஆலயம் அமைத்தவர்.அவரை விடவா பக்தர்கள் இருக்கிறார்கள்?
இந்து மதம் என்பது பல்வேறு கேள்விகள் கேட்டுக் கேட்டுச் சீரமைக்கப்பட்டு விவாதத்தால் வளர்ந்து மெருகேற்றி உருக்கொண்டு உயர்ந்து வந்திருக்கும் ஒரு மதமாகும்..அந்த சுதந்திரம் தான், அந்த ஜனநாயகம் தான் இந்து மதத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது என்று அதைப் புரிந்து கொண்டவர்கள் கூறுகிறார்கள்.இதைப் புரிந்து கொள்ளாத கூட்டம் வசை பாடுகிறது.
இதைச் சாக்காக வைத்துக் கொண்டு சினிமாவில் உள்ள பொறாமைக்காரர்கள் சூர்யாவின் மீது பிராண்டுகிறார்கள்.
சூர்யா படங்களைப் பற்றித் தவறாகப் பரப்பரை செய்கிறார்கள்.
சூர்யா எப்போதும் நேர் நிலை சிந்தனை கொண்டவர். யாரைப் பற்றி எப்போதும் எதுவும் அவதூறு சொல்வதில்லை ;விமர்சனம் செய்வதில்லை.ஆனால் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கும் அவரைப் பிராண்டுகிறார்கள்.
சிவகுமார் மற்றும் அவரது வாரிசுகளுக்கு உள்ள தனிச் சிறப்பு என்ன? திரையில் புகழ்பெற்ற எல்லாருடைய வாரிசுகளையும் மக்கள் ஏற்பதில்லை.மக்களின் ஏற்பு கிடைப்பது என்பது சாதாரணமல்ல.எத்தனையோ நட்சத்திரங்கள் தங்களது பிள்ளைகளை -வாரிசுகளைக் கொண்டுவர முயற்சி செய்தார்கள். ஆனால் மக்களின் ஏற்பு என்பது சிவகுமாரின் பிள்ளைகளுக்கு மட்டும் தான் கிடைத்திருக்கிறது.
அந்தப் பொறாமை தான் பல்வேறு வகையில் அவதூறு பேச வைக்கிறது.ஆனால் இவை எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் கடந்து போய் அவர்கள் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஒருவரது வளர்ச்சியும் வெற்றியும் நற்பெயரும் இன்னொருவருக்கு பொறாமையையோ புகைச்சலை யோ ஏற்படுத்தினால் அதற்கு இவர்கள் எப்படிக் காரணமாக இருக்க முடியும்?அந்த எண்ணம் வந்தால் அவர்கள் தான் மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும்.
எப்படி இருந்தாலும் இந்த அழுக்கு மனம் கொண்ட பொறாமைக்காரர்களின் அவதூறுகளையும் வசைகளையும் தாண்டி தங்கள் பாதையில் சென்று கொண்டிருக்கும் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு அவர்களால் பயனடைந்தோர் ,ரசிகர்கள் ,நலம் விரும்பிகள்,மக்கள் என்று பலரது வாழ்த்துகளும் ஆசீர்வாதங்களும் கிடைத்து வருகின்றன என்பதுதான் உண்மை.
அக்டோபர் 27 ஆம் தேதி சிவகுமார் பிறந்தநாள்,தனது 85 ஆவது வயதைத் தொட்டுக் கடக்கிறார் . திரையுலக மார்க்கண்டேயன் என்று அழைக்கப்படும் அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!
-அபூர்வன்


