’நூறு கோடி வானவில் ’திரைப்பட விமர்சனம்

ஹரிஷ் கல்யாண், சித்தி இத்னாதி, கோவை சரளா, தம்பி ராமையா, சின்னி ஜெயந்த், சம்பத் ராம், ரினில்,பிக் பாஸ் பார்வதி நடித்துள்ளனர். யதார்த்த வாழ்வியல் படங்களுக்குப் புகழ்பெற்ற இயக்குநர் சசி இயக்கி உள்ளார். பிரசன்னா எஸ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார் .சித்து குமார் இசையமைத்துள்ளார்.மாதவ் மீடியா சார்பில் பாலாஜி கபா – அருண் அருணாசலம் புரொடக்ஷன் சார்பில் அருண் அருணாசலம் தயாரித்துள்ளனர்.

இப்படம் நவம்பர் 6, 2026 அன்று தமிழ் ZEE5 தளத்தில் நேரடியாக வெளியாகிறது. கட்டணம் செலுத்திப் பார்க்கும் (Pay-per-view) முறையில் இப்படத்தைக் காணலாம்.

நல்ல ஒரு கதை சொல்லி இயக்குநராக அறிமுகமான இயக்குநர் சசி , ‘சொல்லாமலே’ என்கிற தனது முதல் படத்திலிருந்து ‘பூ’, ‘பிச்சைக்காரன்’, ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ போன்ற பாராட்டுப் பெற்ற திரைப்படங்களைத் தொடர்ந்து சமீபத்தில் கவனிக்க வைத்த
‘நூறு சாமி’ வரை தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளவர்.

படத்தின் கதை என்ன?

ஹரிஷ் கல்யாண் இளமைத் துடிப்புள்ள ஒரு ஊடகக்காரர், மும்பையில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். அவர் ஒரு நாள் அலுவல் ரீதியாக கோவா கிளைக்கு வருகிறார்.இன்னொரு புறம் சித்தி இத்னாதி கோவாவில் இருக்கிறார்.ஒரு விபத்தில் சிக்கி சுயநினைவின்றி கோமாவில் இருக்கும் தனது காதலன் ரிச்சியை மீட்கப் போராடுகிறார்.ஒவ்வொரு நாளையும் அவரது ஒவ்வொரு அசைவையும் அன்றாடம் வீடியோவாகப் பதிவு செய்து வருகிறார்.யதேச்சையாக ஹரிஷ் கல்யாணும் சித்தி இத்னாதியும் சந்திக்கிறார்கள்.தொடக்கத்தில் அவர்களுக்குள் முரண்பாடும் மோதலுமாகச் செல்கிறது .ஆனால் ஒரு கட்டத்தில் இருவர் இடையே நல்ல நட்பு வருகிறது. ஒரு சூழலில் சித்தி இத்னாதியின் வாழ்க்கையை மையமாக வைத்து ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியை உருவாக்குகிறார் ஹரிஷ் கல்யாண்.அது வெற்றிகரமாகப் பார்வையாளர்களால் பார்க்கப்படுகிறது.சித்தி இத்னாதி மீது ஹரிஷ் காதல் கொள்கிறார்.அவருக்கு ஏற்கெனவே ஒரு காதலர் இருக்கும் நிலையில் இதை ஏற்க அவரது மனம் தாங்குகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் நினைவு தப்பி கோமாவில் இருந்த ரிச்சிக்கு சுயநினைவு மீண்டும் வருகிறது.அவரையும் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார் ஹரிஷ் கல்யாண். ஆரம்பத்தில் அவருக்கு இதில் விருப்பமில்லை.ஒவ்வாமையுடன் இருக்கிறார். ஆனால் பிறகு இணைந்து கொள்கிறார்.இதற்குப் பிறகு அந்த மூன்று பேர் வாழ்க்கையில் பல்வேறு முரண்களும் மட்டுமல்ல திருப்பங்களும் ஏற்படுகின்றன. ஹரிஷ் கல்யாண்- சித்தி இத்னாதி காதல் என்னானது ? அதை சித்தி இத்னாதி எப்படி எடுத்துக் கொள்கிறார்? அது தெரிந்ததும் ரிச்சி என்ன செய்கிறார்? என்று பல்வேறு புதிர்களுக்கு விடை சொல்வது தான் ’நூறு கோடி வானவில் ’ படத்தின் மீதிக் கதை.

இதுவரை வெளிவந்த பாத்திரங்களில் ஜாலி மனிதராக சற்றே ஆவேசம் கொள்பவராக நடித்து வந்த ஹரிஷ் கல்யாண், இந்த படத்தில் எடை கூடிய அழுத்தமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை வெளிப்படுத்தி இருக்கிறார். பல்வேறு நடிப்பு தருணங்களில் பார்வையாளார்களின் கவனத்தைக் கவர்கிறார். அவரது தலைமுடி தாடி என தோற்றம், உடல் மொழி, வசன உச்சரிப்பு, முக பாவனைகள் அனைத்தும் ஈர்க்கும் வகையில் வெளிப்பட்டுள்ளன.

விளையாட்டுப் பெண் போல் இல்லாமல் பொறுப்பான ஓர் இளம்பெண்ணாக சித்தி இத்னாதி இந்தப் படத்தில் வருகிறார். தயக்கமும் தவிப்பும் கொண்டு வெளிப்படுத்த முடியாமல் திணறும் பாத்திரத்தில் அதற்கான உணர்வுகளை அழகாக முகத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.தோற்றப்பொலிவை நம்பாமல் நடிப்பைக் காட்டியுள்ளார்.அவரது பாத்திரத்தின் மூலம் அனுதாபத்தின் வழியே பாராட்டுகளை அள்ளிக் கொள்கிறார்.

ரிச்சியாக நடித்திருக்கும் நடிகரும் இயல்பான நடிப்பால் கவனம் பெறுகிறார்.தனது காதலி இன்னொருவருடன் பழகுவதைப் பொறுக்காமல் முகத்தில் காட்டும் அந்த ஒவ்வாமை உணர்ச்சி ரசிக்க வைக்கிறது.
முற்றிலும் ஸ்டைலிஷ் ஆன கதாபாத்திரத்தில் கோவா வாசியாக வரும் கோவை சரளா புகை பிடித்துக் கொண்டு எதையும் டேக் இட் ஈசியாக எடுத்துக்கொண்டு அந்தப் பாத்திரத்தில் ஆச்சரிய கவனம் பெறுகிறார். மேலும் சில காட்சிகள் வைத்து அவரை அடித்த ஆடி விளையாட விட்டிருக்கலாம். தொலைக்காட்சி நிறுவனத்தில் உயர் பொறுப்பில் இருப்பவராக தம்பி ராமையா வருகிறார்.அவர் மிகை நடிப்பு காட்டாமல் இருந்ததே நன்றாக உள்ளது.

பிக் பாஸ் பார்வதி இதில் படப்பிடிப்புக்குழுவில் உள்ள ஒளிப்பதிவாளராக வருகிறார். அவர் துடுக்குத்தனமாக பேசிக்கொண்டு அடிக்கும் கமெண்ட்கள் அந்த பாத்திரத்தின் இயல்பைக் காட்டுவதுடன் கலகலப்பும் ஊட்டுகின்றன. அவர் இது போல நகைச்சுவைக் காட்சிகளில் நடிக்கலாம்.தொலைக்காட்சி படக்குழுவில் குழுவில் பணியாற்றும் திருநம்பி பாத்திரம் கவனம் பெறுகிறது
அதில் நடித்துள்ள சீதாராம் என்ற நடிகர் அதிகம் பேசாமலேயே கவனிக்க வைக்கிறார்.

ஹரிஷ் கல்யாணின் தோழனாக மாமாவாக வரும் சின்னி ஜெயந்த் காதலுக்கு உதவுபவராக வருகிறார்.
இதயம் படத்தின் நண்பன் பாத்திரத்தை நினைவூட்டுகிறார். ஹரிஷ் கல்யாணின் தந்தையாக வரும் சம்பத்ராம் குறைந்த காட்சிகளில் வந்தாலும் பதிகிறார்.

பிரசன்னா எஸ் குமாரின் ஒளிப்பதிவு கோவாவின் எழிலையும் இளமைத்துள்ளலான பாத்திரங்களின் அழகையும் பார்வையாளர்கள் முன் கொண்டு வந்து சேர்த்துள்ளது. சித்துகுமாரின் இசை படத்தில் நம்மை ஒன்ற வைக்கிறது. பாடல்கள் கவனம் பெறுகின்றன.

இயக்குநர் சசி எப்போதும் மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் சிக்கல்களை ஆழமாகப் பேசும் கதைகளை உருவாக்குவதில் வல்லவர்.இதிலும் அதே பாதையில் சென்றுள்ளார்.இது ஒரு முக்கோணக் காதல் கதை போல் தோன்றினாலும் மனித மன மெல்லுணர்வுகளை மனித மனத்தின் போக்கின் எழும் சன்னமான இயல்புகளை அதன் சலனத்தின் இழைகளை அசைவுகளைக் காட்சிகள் ஆக்கி அதை ரசிக்கும்படி ஒரு கவனிக்கத்தக்க படமாக இயக்குநர் சசி மாற்றியுள்ளார்.

தமிழ் சினிமாவின் நடப்பு போக்கு என்று இருக்கும் வெட்டுக்குத்து ரத்தம் அடிதடி படங்கள் மத்தியில் ஒரு தென்றலைப் போல மெல்லுணர்வுகளை கூறும் இந்தப் படம் உருவாகி இருக்கிறது .படத்தின் உச்சகட்ட காட்சி பார்வையாளர்கள் யூகத்துக்கு அப்பால் அமைந்துள்ளது எனலாம்.