ஜே.டி. சக்கரவர்த்தி, லால்,ராதிகா சரத்குமார், சரண் சக்தி, பால சரவணன், ஸ்மேஹா,காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி, சமய முரளி நடித்துள்ளனர்
எழுதி இயக்கி பின்னணி இசை அமைத்துள்ளார் டி சமய முரளி. ஒளிப்பதிவு -கா வின் பாஸ்கர், படத் தொகுப்பு -ஸ்ரீ வாட்சன், இசை-சாம் டேனியல், சண்டைக்காட்சிகள்- தவசி ராஜ் ,கலை இயக்கம் -சிட்டிபாபு.தயாரிப்பு -எஸ் ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ்.
துறைமுகங்களில் கப்பல்கள் மூலம் வந்து சேர்ந்து நிற்கும்ஆயிரக்கணக்கான வண்ண வண்ணமான கண்டெய்னர்கள் மூலம் போதைப் பொருள் கடத்துவது என்பது தமிழ் சினிமாவுக்குப் பழகிய ஒன்றுதான் .ஆனால் அந்த ஒரு விஷயத்தை மட்டும் எடுத்துக் கொண்டு விரிவாகவும் ஆழமாகவும் அகலமாகவும் போதை மருந்துக் கடத்தல் காரர்களின் உள்ளுலகங்களையும் காட்டும்படி ‘ எனிமி ஆப் த ஸ்மக்ளர்’ படம் உருவாகி இருக்கிறது.
சரண் சக்தியும் பால சரவணனும் நெருங்கிய நண்பர்கள். இவர்களில் பால சரவணனுக்குச் சுங்கத்துறை அலுவலகப் பணிகளுடனும் தொடர்பு இருக்கிறது. அதையும் அவர் பலவகையில் பயன்படுத்திக் கொள்கிறார். வீட்டை மீட்கவும் குடும்பக் கடனை அடைக்கவும் எதையாவது செய்தாக வேண்டும் என்ற நெருக்கடி நிர்பந்தத்தில் இருக்கும்சரண் சக்தியின் வாழ்க்கைக்குள், போதை பொருள் கடத்தல் சாம்ராஜ்யம் நடத்தும் ஜே.டி. சக்கரவர்த்தி நுழைகிறார்.பணத்திற்காக சமூக விரோத செயலில் இறங்குகிறார் சரண்.அதற்காகச் சட்டவிரோத சரக்குப் பரிமாற்ற வேலைகளில் இறங்குகிறார். நண்பர் பால சரவணனும் அவருக்குத் துணை வருகிறார். சரண்சக்தி சட்டவிரோதப் போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்குள் பணத்திற்காக நுழைந்து ஒரு கட்டத்தில் அந்தக் கடத்தல் வேலையைத் தானே மேல் இடத்திற்குத் தெரியாமல் செய்ய நினைக்கிறார். இந்நிலையில் சரண் ஒரு பெண்ணையும் காதலிக்கிறார். சரணின் தாயார் ராதிகா சரத்குமார்.ஆரம்பத்தில் காதலன் சரணை நம்பிய காதலி ஸ்மேஹா போகப்போக சந்தேகப்படுகிறார் .ஒரு சட்ட விரோதப் பரிமாற்றத்தால் போலீஸ் பிடியில் செல்கிறார் சரண். அதன் விபரீத விளைவுகள் என்ன என்பதே 124.30 நிமிடங்கள் கொண்ட படமாகஉருவாகி இருக்கும் ‘ எனிமி ஆப் த ஸ்மக்ளர்’ படம்.
இந்தப் படத்தை இந்திய வருவாய்த்துறையில் ஆட்சிப் பணி அதிகாரியாக பணியாற்றிய டி.சமய முரளி இயக்கியிருக்கிறார் .தனது துறையில் தான் பெற்ற அனுபவங்களைக் கொண்டு அவர் இயக்கியிருப்பதால் கதைக்கும் காட்சிக்கும் ஒரு நம்பகத்தன்மை வந்துவிடுகிறது.அதுவே படத்திற்குப் பெரிய பலமாக அமைந்திருக்கிறது.
வழக்கமாக இது போன்ற கதைகளில் காட்சிப் பிரம்மாண்டங்களுக்காகக் காட்டப்படும் அனாவசியமான சண்டைக் காட்சிகளோ ஆர்ப்பாட்டமான பொருள் சேதாரமோ காட்டாமல் அதன் உள் உலகத்தை அதன் தீவிரத்தை வீரியத்தோடு காட்டியுள்ளார் இயக்குநர்.அந்தக் காட்சிகளால் சுங்கத்துறையின் செயல்பாடுகள் சட்டவிரோதப் பொருள்களைப் பிடிப்பதற்கு அவர்கள் துறையில் உள்ள நடைமுறைகள் போன்றவை நமக்குத் தெரிய வருகின்றன அதில் ஒரு நம்பகத்தன்மை இருக்கும்படி காட்சிகள் உள்ளன.இதுவே இந்த படத்தைத் தனித்துவம் மிக்க ஒரு படமாக வெளிக்காட்டுகிறது.குற்றப் பின்னணியில்உருவாக்கப்படும் ஒரு கதையில் நம்பகத்தன்மையோடு காட்சிகள் உருவாக்குவது சிரமம். அதை மிகச் சரியாகச் செய்துள்ள இயக்குநர் டி. சமய முரளி அதில் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறார்.
சுங்கத்துறை விசாரணைகள், சரக்குப் பரிமாற்றத்தில் நடைபெறும் முறைகேடுகள், கடத்தல் கும்பல்களின் செயல்பாடுகள் எனத் துறை சார்ந்த நுணுக்கங்களைத் திரைக்கதையில் இணைத்திருப்பது சபாஷ்..கதையின் பிரதானமையத்தில் இருக்கும் சக்தி,நடுத்தர வயது இளைஞனாகத் தோற்றத்தில் நடிப்பில் கவனம் பெறுகிறார்.கடத்தல் கும்பல் தலைவனது அச்சுறுத்தலில் தவிப்பு என்று அவர் அனைத்தையும் முக பாவனைகளில் காட்டியுள்ளார்.
சரண் சக்தியின் நண்பனாக வரும் பால சரவணன் தனது வழக்கமான நகைச்சுவை போக்கு தாண்டி, கதையின் ஓட்டத்துக்கு உதவும் வகையில் வருகிறார்.சரண் சக்தியுடனான நட்பும், கதையில் அவர் எடுக்கும் முடிவுகளும் படத்தின் ஓட்டத்திற்கு வலு சேர்க்கின்றன.
ஜே.டி. சக்கரவர்த்தி, லால், ராதிகா சரத்குமார் ஆகிய அனுபவம் வாய்ந்த நடிகர்கள் தங்கள் நடிப்பால் தோற்றத்தால் திரை பங்களிப்பில் நிறைவு செய்கிறார்கள்.அவர்களது நட்சத்திர பலம் அந்தந்த பாத்திரத்தை எடை மிக்கதாக மாற்றி விடுகிறது.
கதாநாயகியாக நடித்துள்ள ஸ்மேஹாவும் இளமைத் தோற்றத்தில் இயல்பான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.
சாம் டேனியலின் இசை மட்டுமல்ல இயக்குநரின் பின்னணி இசையும் இந்த க்ரைம் கதைக்குப் பொருத்தமாக அமைந்துள்ளன. விசாரணைகளும் பதற்றமும் நிறைந்த காட்சிகளில் பின்னணிஇசை கூடுதல் பரபரப்பை அளிக்கிறது.கா வின் பாஸ்கர்
செய்துள்ள ஒளிப்பதிவும் கதையின் தீவிரத்திற்குத் துணை நிற்கிறது.படம் முழுவதும் சுவாரஸ்யமாக நகரும் திரைக்கதை, இறுதிக்கட்டத்தில் மட்டும் சற்றே தடுமாறுகிறது.குறிப்பாக லால் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீளமாக உள்ளன.
இருப்பினும், வழக்கமான கடத்தல் கதையிலிருந்து விலகி, சுங்கத்துறையின் செயல்பாடுகளையும் குற்ற உலகின் மறுபக்கத்தையும் பேச முயன்றிருப்பது பாராட்டத்தக்கது.
மொத்தத்தில்…போதைப் பொருள் கடத்தல் சார்ந்த சற்று தீவிரமான நுட்பமான பார்வையில் செல்கிறது இந்த படம்.இயக்குநரின் துறை சார்ந்த அனுபவத்தால் பல்வேறு குறைகளை மறந்து இந்தப் படத்தை ரசிக்கலாம்.


