‘LIK ‘ லவ் இன்சூரன்ஸ் கம்பெனி ‘ திரைப்பட விமர்சனம்

பிரதீப் ரங்கநாதன் , கிருத்தி ஷெட்டி, சீமான் ,எஸ் ஜே சூர்யா ,யோகி பாபு ,கௌரி ஜி கிஷன், ஷாரா , ஆனந்தராஜ், மாளவிகா நடித்துள்ளனர்.விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார் எஸ் எஸ் லலித் குமார்  வழங்கும் இப்பட்டத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா தயாரித்துள்ளார்.

திரைப்படங்களில் கடந்த காலத்தை நிகழ்காலத்தில் கதையாகக்கூறும்  போது முன்னொருகாலத்தில், சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு என்றெல்லாம் கதை தொடங்கும். ஆனால் இந்த ’லைக்’ திரைப்படம் பின்னொரு காலத்தில் என்ற வகையில் 2040- ல் நடப்பதாகத் தொடங்குகிறது.

எஸ் ஜே சூர்யா பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (Love Insurance Kompany – LIK) அதாவது ’லைக் ’(LIK)  என்கிற ஒரு செயலியை உருவாக்கிச் சந்தைப்படுத்துகிறார்.அதன்படி காதலிப்பவர்கள், காதலிப்பதாக நினைப்பவர்கள் இருவரிடையே உள்ள பொருத்தத்தைச் சரியாகத் துல்லியமாகக் கணித்துச் சொல்லும் .அது மட்டுமல்ல கணவன் மனைவி இருவர் இடையே உள்ள அனைத்தையும் ஒருவருக்கொருவர் வெளிப்படையாகச் சொல்லிவிடும் தன்மை கொண்டதாக இருக்கும்.சம்பந்தப்பட்டவர்களின் தரவுகளின் அடிப்படையில் அந்தக் கணிப்பை அது  தருகிறது . இந்த லைக் செயலி நாடெங்கும் வரவேற்பு பெற்றுப் பெரும் பரபரப்பாகி, பேசுபொருளாக மாறுகிறது . இப்படிப்பட்ட சூழலில் பிரதீப் ரங்கநாதன் சீமானின் மகனாக தொழில்நுட்ப அபாயங்கள் அற்ற பசுமை மண்டலம் பகுதியில் வசிக்கிறார். அங்கே செல்போன் தொல்லைகள்  இல்லை. அப்படி சமூக ஊடகங்களின் தாக்கங்கள் இல்லாத ஆரோக்கியமான சூழலில் இருக்கிறார். அப்படிப்பட்டவர் கிருத்தியைப் பார்த்ததும் காதல் கொள்கிறார். அவர்களது ஜோடிப் பொருத்தத்தைப் பார்த்தபோது லைக் செயலி 3 சதவீதம் தான் அவர்களுக்குள் பொருத்தம் உள்ளதாகக் கூறுகிறது. இதனால் பயந்து போன கிருத்தி,நமக்குள் காதல்  சரிப்பட்டு வராது என்று பிரிந்து சென்று விடுகிறார் . அதேவேளை லைக் செயலி,பிரதீப்புடன் ஒரு நண்பரைப் போல் பழகும் கெளரி கிஷனுடன் ஜோடிப் பொருத்தம் 93 சதவீதம் இருப்பதாகக் கூறுகிறது.மனித மன உணர்வுகளை எப்படி ஓர் எந்திரம் கண்டுபிடிக்கும் ? கணிக்கும் ? என்று வெகுண்டு எழுகிற பிரதீப் ரங்கநாதன் அதற்குக் காரணமான எஸ் ஜே சூர்யாவைச் சந்திக்கிறார். அப்போது இந்த எந்திரம் தவறு செய்யாது என்கிறார் சூர்யா. இல்லை மனித உணர்வுகளைக் கணிக்கக் கூடிய எந்த எந்திரமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை இது தவறு என்று தான் நிரூபிக்கிறேன் என்று கூறுகிறார் பிரதீப் . இருவரும் சவால் விடுகிறார்கள். லைக் செயலி கண்டுபிடித்துக் கணித்ததற்கு மாறாக கிருத்தி தன்னைக் காதலிப்பதை உறுதி செய்வேன் என்று சவால் விடுகிறார். 30 நாட்கள் கொண்ட அந்த சவாலில் பிரதீப் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதுதான் 159.58 நிமிடங்கள் கொண்ட ’லைக் ’படத்தின் மீதிக் கதை. 

திடீரென்று சைக்கிள் கேப்பில் நுழைந்து பலரும் பொறாமைப்படும் வகையில் தனக்கான கான்கிரீட் இருக்கையைத் தயாரித்து அமர்ந்து கொண்டிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.அதற்குப் பின்னே அவரது பல்லாண்டு உழைப்பு இருப்பது பலருக்கும் தெரியாது. அவர் சினிமாவையும் ரசிக நாடித்துடிப்பையும் சரியாகக் கணித்துள்ளவர் என்பதும் பலருக்கும் தெரியாது.அந்தப் பிரதீப் ரங்கநாதன் இதில் நாயகனாக வைப் வஸ்ஸி பாத்திரத்தில் வருகிறார்.எளிமையான தோற்றம் இயல்பான நடிப்பு பக்கத்து வீட்டு வாலிபனைப் போன்ற சித்திரம் கொண்ட அவர் இதிலும் தனது பாத்திரத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்கிறார்.கண்டதும் காதல் என்றாலும், தன் காதலி மீது தான் வைத்திருக்கும் அன்பை வெளிப்படுத்தும் காட்சிகளில் நகைச்சுவையைக் கடந்து ரசிக்கும் வகையில் தன் இருப்பை உணர்த்துகிறார்.காதலின் வலியை உணர்த்தும் போதும் ,அதற்காகப் போராடும் போதும் அவர் படம் பார்ப்பவர்களின் அனுதாபத்தை அள்ளுகிறார்.

நாயகி தீமாவாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி,அதீத ஒப்பனை என்று அழகுப் பதுமையாக வருகிறார்.சைபர் யுகத்தைத் தாண்டிய யுகத்தின் நாயகியாக தோற்றத்தில் ,உடல் மொழியில், விழி மொழியில், முகபாவனையில் மிரட்டுகிறார்.எளிதில் உணர்ச்சி வசப்படும் எதிர்கால யுவதிகளின் மனப்போக்கை, குணச்சித்திரத்தைத் தனது நடிப்பின் மூலம் பிரதிபலித்துள்ளார்.

லைக் செயலியின் நிறுவனராக, எதிர்மறை நிழல் கொண்ட சூரியன் பாத்திரத்தில் வரும் எஸ்.ஜே.சூர்யா, தனது வழக்கமான மிரட்டல் நடிப்பை நிறுவியிருக்கிறார்.அவரது சவால்களும் சவடால்களும் உடல் மொழியும் ஆணவ வெளிப்பாடும் அந்தப் பாத்திரத்தைத் தூக்கி நிறுத்தி உள்ளன.படத்தின் பாதி நடிப்பு பாரத்தை அவர் தன் தோள்களில் சுமந்துள்ளார் என்றே கூறவேண்டும்.ரசிக்கத் வைக்கும் வரையில் நடிப்புத் தருணங்களில் வெளிப்பட்டு ரசிகர்களைக் கவர்கிறார்.

பிரதீப் ரங்கநாதனின் தந்தையாக அன்புக்கடல் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் செந்தமிழன் சீமான்.இந்தத் தேர்தல் பருவத்தில் அவரது பாத்திரம் படத்திற்குப் பலம் சேர்ப்பதாக உள்ளது.தனது நடிப்பாலும் ஆவேசக் கருத்துரைகளாலும் சண்டைக் காட்சிகளில் பங்கெடுத்துள்ளதாலும் சீமான் அழுத்தமாகப் பதிக்கிறார்.சீமான் சித்தாந்தவாதி சீமானாகவே வருகிறார் என்று தோன்ற வைக்கிறது

தோற்றத்தில் வித்தியாசம் காட்டியிருக்கும் யோகி பாபு, நடிப்பிலும், நகைச்சுவையிலும் எந்த மாறுபாட்டையும் வெளிப்படுத்தவில்லை. படத்தில் எந்திர பொம்மைகள் கூட நடித்துள்ளன. ஆனால் கல்கியாக வரும் கௌரி கிஷன் உணர்ச்சி காட்டாமல் ஒரு பொம்மையைப் போல வருகிறார்.

பிரதீப் ரங்கநாதனின் நண்பராக நடித்திருக்கும் ஷாரா இயக்குநர் சொன்னதை நல்ல பிள்ளையாகக் கேட்டு நடித்துள்ளார். கொழுக் மொழுக்  தோற்றத்தில் அம்மாவாக நடித்திருக்கும் மாளவிகா,எஸ் ஜே சூர்யாவிடம் வேலை பார்க்கும் சிரிப்பு மூட்ட நினைக்கும் ஆனந்தராஜ், சுனில் ரெட்டி ஆகியோர் தங்கள் பாத்திர வருகையைப் பதிவு செய்துள்ளார்கள்.

ரவி வர்மனின் ஒளிப்பதிவு பிரம்மாண்டத்தைக் கண் முன் நிறுத்துகிறது.பல காட்சிகளில் மாயாஜாலம் காட்டியுள்ளார்.குறிப்பாக லைக் செயலியின் செயல்பாடுகளை நிறுவ உருவாக்கப்பட்டுள்ள காட்சிகள்,எஸ் ஜே சூர்யா சார்ந்த காட்சிகளில் வரும் எந்திர மனிதர்கள் சண்டைக்காட்சி, ரீல்ஸ் அனுபவ மனநிலைக்கு எதிராகக் காண்பிக்கப்படும் நிகர்நிலை அல்லாத இயற்கையுலகில் உள்ள அழகான காட்சிகள் என்று ரசிக்கவைக்கின்றன.

அனிருத்தின் இசையில் பாடல்கள் எங்கேயோ கேட்ட உணர்வைத் தருகின்றன.ஆனால் பின்னணி இசை பிரமாண்டத்தை உயர்த்திப் பிடிக்கிறது.படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ், திரையில் காட்டப்படும் தொழில்நுட்ப சாகச வளர்ச்சிகளைப் பார்வையாளர்களுக்குப் புரியும்படி  பிசிறு தட்டாமல் தொகுத்துள்ளார்.

எதிர்கால யுகத்தைக் கண் முன் கொண்டு வரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள பின்புலங்கள் கலை இயக்குநர் கண்ணன் எஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் முத்துராஜ் ஆகியோரின் உழைப்பை வெளிப்படுத்துகின்றன.

தன் கற்பனையில் கண்ட கனவு உலகத்தைக் கண் முன் திரையில் நிறுவி அசத்தியிருக்கிறார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.
மனித உணர்வுகள் எந்திரக் கணிப்புகளுக்கு அடங்காதவை என்கிற கருத்தை இந்தப் படத்தின் மூலம் கூறி காதலர்களை நிம்மதிப் பெருமூச்சு விட வைத்துள்ளார் .

மொத்தத்தில், ‘LIK’ (லவ் இன்சூரன்ஸ் கம்பெனி) மனிதன் எந்திரங்களுக்கு அப்பாற்பட்டவன் என்பதைக் கூறுகிற படமாகவும் செயலியைத் தனது செயல்கள் மூலம் வெற்றி பெற்ற ஒரு மனிதனின் கதையாகவும் உருவாகி உள்ளது.

இளைஞர்களைக் கவரும் வகையில் ஒரு முழு நீள சுவாரஸ்யமான வண்ணமயமான திரை அனுபவத்தைத் தருகிற படமாக இது  வெற்றி பெற்றுள்ளது.