ஆர்யா , நிகிலா விமல்,முரளி கோபி ,ரெஜினா கசாண்ட்ரா, சுனில், இந்திரன்ஸ் , சித்திக், அஜய்,போஸ் வெங்கட், தேவ் மோகன் , ரென்ஜி பணிக்கர், அஞ்சலி பி. நாயர், சாந்தி பாலச்சந்திரன், அச்யுத்குமார், சரத் அப்பானி, விஜயராகவன் நடித்துள்ளனர்.
முரளி கோபி கதை திரைக்கதை எழுதியுள்ளார்.
ஜியேன் கிருஷ்ணகுமார் இயக்கி உள்ளார்
அஜனீஷ் லோக்நாத் இசையமைத்துள்ளார்.எஸ். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார் .வினோத்குமார் தயாரித்துள்ளார்.
அனந்தன் காடு என்பது திருவனந்தபுரத்தைக் குறிக்கும். ஒரு காலத்தில் அனந்தபுரி என்கிற பெயரில் பெரிய காடாக இருந்தது அந்த ஊர். அந்த நினைவாக படத்திற்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது . கேரளாவின் தலைநகரமாக இன்று அரசியலின் அதிகார மையமாக இருக்கும் திருவனந்தபுரத்தில் உள்ள அரசியல்வாதிகளின் ஆட்டம் பற்றிப் படம் பேசுகிறது.அன்று காடு போல் இருந்த ஊரில் இன்று காட்டாட்சியாக மாறி நடக்கும் அதிகார வெறியாட்டம் பற்றிப் பேசப்படுகிறது.
என்றாலும் இந்தக் கதை அனந்தபுரி என்கிற அனந்தன் காட்டில் இருந்து அதாவது திருவனந்தபுரத்தில் இருந்து பல இடங்களில் கதை நிகழ்வுகளுக்காகத் தாவித் தாவிச்செல்கிறது. இலங்கை யாழ்ப்பாணம் ,வல்வெட்டித் துறை,கடலூர் ,திருப்பாச்சி,கோவா, தனுஷ்கோடி, ராஜஸ்தான் என்று பல இடங்களில் சம்பவங்கள் நிகழ்கின்றன.
ஒரு போராளியாக வெற்றிவேல் குமரன் என்ற பெயரில் இலங்கையில் செயல்பட்டு வந்த ஆர்யா, உள்நாட்டுப் போரில் தனது குடும்பத்தை இழக்கிறார்.இலங்கை ராணுவத்தின் கொடுமையில் அவரது குடும்பம் சிக்கி அழிகிறது. அந்தக் கொடுமையை நேரில் கண்ட அவர் அதை நினைத்துப் பெரிதும் மன அழுத்தத்திற்கு உள்ளாகி உணர்வுகள் உறைந்து போய் இறுக்கமாக இருக்கிறார் .இந்த நிலையில் தமிழ்நாட்டுக்குத் தப்பி வருகிறார்.இங்கே அவரது பெயர் மணி என்று சொல்லப்படுகிறது.அவரைகேரளா செல்ல வைத்து ஒரு இடத்தில் அடைக்கலம் கொடுத்து பாதுகாப்பாக இருக்க வைக்கிறார் இன்னொரு இலங்கைத் தமிழர் போஸ்வெங்கட் .
கேரளாவில உள்ள நான்கு நண்பர்கள் கொண்ட குழுவில் இருந்த ஒருவர் வீட்டில்
அவரைத் தங்கவைத்துக் கொள்கிறார்கள். அந்த நால்வரும் ஆர்கெஸ்ட்ரா கச்சேரி நடத்துகிறார்கள்.பாடகர்கள் இசைக் கச்சேரி என்பதெல்லாம் பெயரளவுக்குத்தான் . ஆனால் அவர்கள் திரை மறைவாக நிறைய வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள். கூலிக்குக் கொலை செய்பவர்களாகவும் இருக்கிறார்கள்.
ஒரு கட்டத்தில் ஒருவரைத் தீர்த்துக்கட்ட இந்த நால்வர் குழு புறப்படுகிறது திருப்பாச்சி நோக்கி.கூடவே ஆர்யாவும் செல்கிறார். அங்கே செல்லும் ஆர்யா தமிழர்களைக் காட்டிக் கொடுத்ததாக அங்கு உள்ள ஒரு முதலியாரைக் கொலை செய்கிறார்.உடன் வந்த நால்வரும் மிரண்டு போகிறார்கள் .ஆர்யாவிடம் நீ யார் என்று கேட்கிறார்கள். இப்போதுதான் அவர் ஒரு இலங்கைத் தமிழர் என்றும் தெரிகிறது.
அரசியல்வாதிகள் அந்த நால்வரையும் தங்களது கூலிக்காரர்களாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.ஒரு கட்டத்தில் ஆர்யாவை போலீஸ் காட்டிக் கொடுக்கச் சொல்கிறது .அந்த நால்வரும் காட்டிக் கொடுக்க மறுக்கிறார்கள். அப்படிப்பட்ட சூழலில் இதுவரை தங்களைக் கூலிப்படையாக பயன்படுத்தி வந்தாலும் ஒரு கட்டத்தில் முதல்வராக இருப்பவர் தீர்த்துக்கட்டத் திட்டம் போடுகிறார்.போலீஸ் சுற்றி வளைக்கிறது.
அவர்களிடமிருந்து ஆர்யா அவர்களைக் காப்பாற்றினாரா? ஆர்யாவையும் போலீஸ் தேடுகிறது .ஒருவரை ஒருவர் காட்டி கொடுத்தார்களா? காப்பாற்றினார்களா? என்பதுதான் 157. 56 நிமிடங்கள் கொண்ட ‘அனந்தன் காடு’ படத்தின் மீதிக் கதை.
படத்தின் ஆரம்பத்தில் போலீஸ் அதிகாரி சுனிலை அவர் நண்பர்களுக்காகக் கொடுக்கும் ஒரு பார்ட்டியில் ஓர் இளைஞன் சுடுவது போல் பதற வைக்கும் காட்சியில் படம் தொடங்குகிறது.
அதன் பிறகு முன் கதை விரிகிறது. இலங்கையில் நடக்கிற போராளிகளுக்கும் இராணுவத்திற்குமான சண்டைக் காட்சி பார்ப்பவர்களைப் பதற்றம் கொள்ள வைக்கிறது.தமிழகம் வந்த ஆர்யா இங்கே மணியாக அதிகம் பேசாமலேயே வருபவர்,அந்தப் போராளி பாத்திரத்தில் மட்டுமல்ல கேரளாவில் நடக்கும் சண்டைக் காட்சிகளிலும் பிரமாதப்படுத்தியுள்ளார். அவரது உடற்கட்டும் உடல் மொழியும் அதற்குப் பெரிதும் துணை நின்றுள்ளது. ஆக்சன் காட்சிகளில் அதகளம் செய்கிறார்.
எப்போதும் வாய் பேசாமல் மௌனமாக இருக்கும் ஆர்யாவிடம் நீ யார் என்று கேட்கிற போது, “தம்பியை இழந்தவன் ,தங்கையை இழந்தவன், தாயை இழந்தவன் ,தந்தையை இழந்தவன், தாய் மண்ணை இழந்தவன் “என்று கூறும் போது அந்த பாத்திரத்தின் வலியுணர்வு புலப்படுகிறது.
முரளி, கிருஷ்ணன் குட்டி, ஜாக்சன், தங்கம் என்கிற நான்கு பாத்திரங்களை ஏற்றவர்களும் பிரமாதப்படுத்தியுள்ளார்கள்.
குறிப்பாகக் கதாசிரியர் முரளி கோபி இதில் தங்கம் பாத்திரத்தில் முரட்டுத்தனம் காட்டி நடித்திருக்கிறார். இந்திரன்ஸ் கிருஷ்ணன் குட்டியாக வருகிறார் .அவர் தனது நடிப்பின் மூலம் குணச்சித்திரத்தில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார் என்று கூற வேண்டும்.
ஆந்திராவில் இருந்து கேரளா வந்து பணியாற்றும் போலீஸ் அதிகாரியாக வரும் சுனில் சைக்கோத்தனமான வில்லத்தனத்தில் புது அத்தியாயம் எழுதுகிறார்.
நிகிலா விமல் ,ரெஜினா கசாண்ட்ரா போன்ற நடிகைகளை முகமரியாதைக்கு மட்டும்தான் பயன்படுத்தியுள்ளார்கள். குறைவான காட்சிகளிலேயே வருகிறார்கள் என்றாலும் அவர்களது பங்களிப்பு படத்திற்கு உதவும்.
போராளிகளையும் தீவிரவாதிகளையும் வன்முறைகளுக்குக் காவல்துறையும் ஆளுங்கட்சியும் எப்படிப் பயன்படுத்துகிறது என்பதையும் காரியம் முடியும் வரை பயன்படுத்திக் கொள்வதும் ,முடிந்த பிறகு அவர்களைத் தீர்த்துக் கட்டுவதுமான போக்கை காட்சிகளின் மூலம் படம் சொல்கிறது.
பரபரப்பான காட்சிகளைப் பார்வையாளர்களுக்குத் தனது ஒளிப்பதிவின் மூலம் நேர்த்தியாகக் கடத்தி உள்ளார் ஒளிப்பதிவாளர் யுவா.கதையின் வேகத்தை மேலும் கூட்டும்படியான பின்னணி இசை வழங்கியுள்ளார் அஜனீஷ்
லோக்நாத்.இவர் காந்தாரா படத்திற்கு இசையமைத்தவர்.இரண்டாவது பாதியின்
நீளத்தைக் குறைத்து படத்தை மேலும் நேர்த்தியாக மாற்றி இருக்கலாம் இரண்டாவது பாதியில் நிகழும் அளவற்ற வன்முறைகளைக் குறைத்து இருக்கலாம்
வன்முறைக்கு வன்முறையே தீர்வு என்கிற கருத்து சொல்லப்படுவது வருத்தத்திற்குரியது.
மொத்தத்தில் ஒரு விறுவிறுப்பான கிரைம் திரில்லர் அனுபவத்தைத் தருகிறது இந்த ,’அனந்தன் காடு’.


