துஷாரா விஜயன்,அதிதி பாலன் ,அப்பாஸ்,வசுந்தரா,நரேன் மணி,ஜெயசூர்யா, கிறிஸ்டினா மேரி, ஷர்மிளா அக்ஷதா அஜித், கவின்,சரவண சக்தி, என். அருண்மொழித்தேவன் ,மீனாள்,துரை சுதாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். எழுதி இயக்கியிருக்கிறார் ஏ. சற்குணம். கிரியேட்டிவ் தயாரிப்பாளர்கள் : புஷ்கர் & காயத்ரி.ஒளிப்பதிவு : அருண் அமரேந்திரன்,இசையமைப்பாளர்: சாம் சி எஸ்,எடிட்டர் : ரிச்சர்ட் கெவின். ஸ்டண்ட்: தினேஷ் சுப்பராயன்.வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரித்து வழங்கியுள்ளது.தயாரிப்பாளர்கள்: கௌதம் செல்வராஜ், எஸ் குஹப்ரியா, எஸ் நந்தகுமார்.
போட்டித் தேர்வுகள் அதற்கான பயிற்சி மையங்கள் அதன் பின்னே உள்ள கார்ப்பரேட் மாபியாக்கள் செய்யும் அட்டூழியங்களைத் தோலுரித்துக்காட்டி உள்ளது இந்த ‘எக்ஸாம் ‘இணையத் தொடர்.
ஏழைப் பெண்ணான துஷாரா விஜயன் எப்படியாவது படித்து அரசாங்க வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கனவில் இருக்கிறார்.வறுமையில் வாழும் அவரது தாயாரின் லட்சியம் கனவு தன் மகளை எப்படியாவது அரசாங்க வேலைக்கு அனுப்பி அழகு பார்ப்பது என்று இருக்கிறது. பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் துஷாரா விஜயன் படித்து போட்டித் தேர்வு எழுதச் செல்கிறார் .அங்கே தான் அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது.எவ்வளவோ சிரமப்பட்டு போராடி படித்து தேர்வு எழுத சென்றால் அங்கே குறுக்கு வழிகளில் ,நோகாமல் அந்த தேர்வுகளை எழுதி வெற்றி பெற்று அரசுப் பணிகளை அடைய ஒரு கூட்டம் முயற்சி செய்கிறது.இதை துஷாரா விஜயன் அறிந்து கொள்கிறார். இந்த மோசடிகளுக்குப் பின் உள்ள நபர்களை அம்பலப்படுத்த நினைக்கிறார் .அதற்காகச் சில அதிரடித் திட்டங்களைச் செயல்படுத்துகிறார் .அதில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா என்பதை ஒரு உள் விரிவு கொண்ட கதையாக உருவாக்கி எடுக்கப்பட்டுள்ளது தான் ‘எக்ஸாம்’ இணையத்தொடர்.
போட்டித் தேர்வு எழுதச் செல்லும் துஷாரா விஜயன்போட்டித் தேர்வு மோசடிகளில் சம்பந்தப்பட்டவர் என்று சந்தேகப்பட்டு போலீஸ் டிஎஸ்பி ஆன அதிதி பாலனைக் கடத்துகிறார்.அதுமட்டுமல்ல தானே டிஎஸ்பி மரமல்லி என பலரையும் நம்ப வைத்துச் சில செயல்பாடுகளைச் செய்கிறார்.அந்த இடத்தில் நடக்க இருக்கும் அரசு தேர்வு மோசடியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபடுகிறார்.
அதிதி பாலன் மூலமாக அந்த மோசடி நடக்க இருப்பதாகத் தவறாக எண்ணி அவரைக் கடத்தி அடைத்து வைத்திருக்கும் துஷாரா விஜயனுக்கு,இந்த மோசடியில் அதிதி பாலனுக்கு நேரடித் தொடர்பில்லை என்றும். அவருக்குப் பின்னே பலர் இயக்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றும் ஒரு கட்டத்தில் உண்மை தெரிகிறது . அதைத் தேடிய பயணத்தை மேற்கொள்கிறார்.திரை மறைவில் இயங்கும் அந்தக் கண்ணுக்கு தெரியாத கயவர்களைத் தேடி பயணப்படுகிறார்.இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா இல்லையா என்பதை இதுவரை திரை காணாத பின்னணித் தகவல்களுடன் பரபரப்பான திருப்பங்களுடன் சொல்வதே ‘எக்ஸாம்’ இணையத் தொடர்.
ஏழை நடுத்தர மக்களின் அதிகபட்சக் கனவாக இருக்கும் அரசு வேலை கிடைக்க உதவியாகவுள்ள இந்தப் போட்டித் தேர்வுகளுக்கு பின்னே உள்ள மோசடிகளை விலாவாரியாக எடுத்துக் கூறி காட்சிகளைச் சுவாரசியமும் பரபரப்பும் உள்ளதாக மாற்றியிருக்கிறார் இயக்குநர் ஏ.சற்குணம்.
இணையத் தொடர்கள் என்றாலே, அடிதடி குத்துவெட்டு ஆபாசம் அருவருப்பான வசனங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ளும் பல இயக்குநரிடமிருந்து ஏ. சற்குணம் வேறுபட்டுத் தெரிகிறார்.இணையத் தொடர்களின் படைப்பு சுதந்திரத்தை சமூகக் கண்ணோட்டத்தில் அவர் வெளிப்படுத்தி உள்ளார். சபாஷ்.இந்த தொடருக்கான காட்சிகளைப் பல உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து மிகவும் துணிச்சலுடன் காட்சிப்படுத்தி அரசு எந்திரக்கோளாறுகளின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தை வெளிக்காட்டியிருக்கிறார் சற்குணம் .
முதன்மை கதாபாத்திரங்களில் என்று சொல்லும் அளவிற்கு ஜான்சி பாத்திரத்தில் வரும் துஷாரா விஜயன் மற்றும் மரமல்லி பாத்திரத்தில் வரும் அதிதி பாலன் இருவரும் தங்களது நடிப்புப் பணியைச் மிகச் சரியாக செய்து மனதில் பதிகிறார்கள்.துஷாரா விஜயனின் பாத்திரம் உழைத்தும் பலனில்லாமல் போகும் ஏழை மக்களை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.எவ்வளவுதான் முன்னேற்றத்திற்காக போராடினாலும் அதிகாரத்திற்கு முன்பு தோற்றுப்போகும் அப்பாவி ஏழை மக்களைஅவர்களது அவலத்தைக் கண் முன் நிறுத்துகிறது.
பணத்தின் மூலம் எதையும் வளைக்க முடியும் எதையும் விலைக்கு வாங்க முடியும் என்ற உயர் தட்டுக் குணம் கொண்ட கதாபாத்திரத்தில் வரும் அதிதி பாலன், அம்மக்களின் மனநிலையைத் தன் நடிப்பில் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். ஜெயச்சந்திரன் பாத்திரத்தில் வரும் அப்பாஸ், சரண்யா பாத்திரத்தில் வரும் வசுந்தரா இருவரும் நினைவில் நிற்கும் வகையில் நடித்துள்ளனர்.
இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அனைத்தும் இயக்குநரின் திசையறிந்து பயணப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.
மலைப்பிரதேச பின்னணி காட்சிகளுக்கு அழகூட்டுகிறது.பின்னணி இசையும் காட்சிகளை ஆழப்படுத்த உதவியுள்ளது.
இந்தத் தொடரை எழுதி இயக்கியிருக்கும் சற்குணம், நாட்டில் நடைபெற்ற அரசு தேர்வு மோசடிகளையும், அதன் பின்னணியையும் எதார்த்தம் குலையாமல் சொல்லியிருக்கிறார்.இத்தகைய மோசடி எப்படி நடக்கிறது ?, யார் மூலமாக நடக்கிறது ? என்பதை மிக விரிவாகக் காட்சிப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் சற்குணம்.
மிக முக்கியமான சமூகப் பிரச்சினைனையை எந்தவித சமரசமும் இன்றி கூறியிருக்கும் இயக்குநர் சற்குணம், அதை ஒரு சுவாரஸ்யமான இணையத் தொடராகக் கொடுத்து வெற்றி பெற்றிருக்கிறார்.
மொத்தத்தில், ‘எக்ஸாம்’ இணையத்தொடர் ரசிகர்களிடம் அதிக மதிப்பெண்கள் பெறும்.
ரேட்டிங் 4.2/5


