‘ஐ : நோபடி’ திரைப்பட விமர்சனம்

பிரித்விராஜ் சுகுமாரன்,பார்வதி திருவோத்து,ஹக்கிம் ஷாஜகான்,அசோகன்,விஜயராகவன்,மதுபால்,சங்கர் ராமகிருஷ்ணன்,நக்ஷத்ரா  நடித்துள்ளனர்.நிசாம் பஷீர் இயக்கியுள்ளார்.கதை : சமீர் அப்துல்,ஒளிப்பதிவாளர் : தினேஷ் புருஷோத்தமன்,படத்தொகுப்பாளர் : ரமீஸ் எம்.பி., இசை : ஜேக்ஸ் பிஜாய்.

பிரித்விராஜ் புரொடக்ஷன்ஸ் & E4 எக்ஸ்பெரிமென்ட்ஸ் நிறுவனங்கள் சார்பில் சுப்ரியா மேனன், முகேஷ் ஆர். மேத்தா, சி.வி. சாரதி தயாரித்துள்ளனர்.

நடுத்தர வர்க்கத்து நாயகன் ஒருவன் வங்கிக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறான்.அவன் சாதாரண ஆள். அவன் பெரிய ஆள் அல்ல என்பதால் அவனது சொற்கள் எடுபடாமல் போகிறது. அக்குற்றச்சாட்டின் காரணமாகக் கடுமையாகத் தாக்கப்பட்டு காயமடையும் ஒருவனது கதைதான் இந்தப் படம்.

அரசு பணியாற்றும் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த நாயகன் ராஜீவன். தனியார் வேலைக்குச் சென்று குடும்பத்தைக் கவனித்துக் கொள்ளும் மனைவி மீரா, பள்ளி வயது மகள்கள் ஜியா, அமலா என்கிற சிறிய குடும்பம் அவனுடையது.கணவன் மனைவிக்குள் பெரிய ஒட்டுதல் இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்குள் மௌனமான நிழல் படிந்து இருக்கிறது.சமூகத்திற்காகவும் பிள்ளைகளுக்காகவும் ஒன்று சேர்ந்து வாழ்வதாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு நாள் ராஜீவன் ஒரு வேலையாக வங்கிக்குச் செல்கிறான். அது அவன் கணக்கு வைத்துள்ள வங்கி அல்ல. அங்கே ஒருவரைப் பார்க்கச் செல்கிறான். திடீரென்று அங்கே முகமூடி போட்ட மூன்று பேர் கும்பல் நுழைகிறது.துப்பாக்கி முனையில் மிரட்டி 17 கோடி ரூபாய் கொள்ளை அடித்து விட்டுப் பணயக் கைதியாக ராஜீவனையும் பலவந்தமாக அழைத்துக் கொண்டு செல்கிறது. கொள்ளையடிக்க வருவதற்காகப் பயன்படுத்திய அந்த வண்டியிலிருந்து இன்னொரு வண்டிக்கு மாறுகிறார்கள். மாறியதும் நாயகனைக் கண்ணைக் கட்டி விட்டு நெடுஞ்சாலை நடுவே விட்டு விட்டுத் தப்பித்து விடுகிறார்கள்.
ஆனால் பயத்துடனும் பதற்றத்துடனும் தப்பித்து ஓடும்போது நெடுஞ்சாலையில் அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளாகி உருண்டு நொறுங்குகிறது.கொள்ளையர்கள் மூவரும் இறந்து விடுகிறார்கள்.ஆனால் கொள்ளையடித்த பணத்தைக் காணவில்லை.போலீஸ் விசாரணை தொடங்குகிறது. நாயகனுக்கும், இந்தக் கொள்ளைக் கும்பலுக்கும் எதோ தொடர்பு இருக்கிறது `என போலீஸ் சந்தேகிக்கிறது. கணக்கு வைத்திராத வங்கிக்கு அவன் செல்ல வேண்டிய அவசியம் என்ன? என்பது அவர்களது சந்தேகத்திற்குக் காரணமாகிறது. ஆனால் அவன் சொல்வதை அவர்கள் ஏற்கவில்லை.கணக்கு வைத்திராத வங்கிக்கு ராஜீவன் ஏன் செல்ல வேண்டும்? போலீசும் மக்களும் இந்த சமூகமும் ஊடகங்களும் அவனைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வசை பாடுகின்றன.நாயகனின் மூத்த மகள் ஒரு கட்டத்தில் கடத்தப்படுகிறாள்? இது ஏன்? இந்தக் கொள்ளைக்கு நாயகனுக்கு உண்மையிலேயே தொடர்பு இருக்கிறதா ? அனைத்து சந்தர்ப்ப சாட்சியங்களும் தடயங்களும் தனக்கு எதிராக இருக்கிற நிலையில் நாயகன் எப்படி அதை எதிர்கொள்கிறான் ? முடிவு என்ன என்பதுதான் ‘ஐ நோ படி’ படத்தின் மீதிக் கதை.

இந்தப் படத்தில் ராஜீவன் என்கிற நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த குடும்பத்தலைவர் பாத்திரத்தில் பிரித்திவிராஜ் சுகுமாரன், நடித்துள்ளார்.அனைத்தும் தனக்கு எதிராக இருக்கும் போது விரிவாகப் பேசாமல் மௌனமாக மன அழுத்தத்துடன் அதனை எதிர்கொண்டு போராடும் பாத்திரத்தில் அவர் சிறப்பாக நடித்துள்ளார்.
நாயகனின் மனைவியாக ‘பூ’ படப்புகழ் பார்வதி நடித்துள்ளார்.கணவனிடம் அந்நியோன்யம் இல்லாத நிலையிலும் பிள்ளைகளுக்காக எதிர்வாதம் செய்யாமல் எதையும் பேசாமல் மௌனமாக அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழும் ஒரு குடும்பத் தலைவியாக அவர் வாழ்ந்திருக்கிறார். அனைத்து நெருக்கடிகளையும் அவர் நிதானமாக எதிர்கொள்கிறார்.அந்த அழகு முகத்தில் தான் எத்தனை சோகம்? ஒரு மோனாலிசா முகபாவனையோடு அந்தப் பாத்திரம் அமைந்துள்ளது.

நாயகனின் பெண் குழந்தைகளாக வரும் நட்சத்திரா, ஐரா இருவரும் அதிகம் பேசாமலேயே தங்கள் குழந்தைமையை க் காட்டி நடித்துள்ளார்கள்.

ஹக்கிம் ஷாஜகான் காவல்துறை கெட்ட பெயர் சம்பாதித்த எதிர்மறை சாயல் கொண்ட அனஸ் பாத்திரத்தில் நடித்துள்ளார்.அலட்டிக் கொள்ளாமல் தனது பாத்திரத்தின் கள்ளத்தனத்தை வெளிப்படுத்துகிறார்.

அந்த அபார்ட்மெண்டில் வாட்ச்மேன் போல் இருக்கும் ஜேக்கப்பாக வரும் அசோகன் கதையின் முக்கியமான பாத்திரமாகவும் மாறுகிறார்.கேரளா அரசாங்கத்தின் முதல்வராக விஜயராகவன் நடித்து அசல் அரசியல்வாதியாக வெளிப்பட்டுள்ளார்.
இன்னும் பலதுணைப் பாத்திரங்களில் நடித்துள்ள அனைவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்டவேலைகளைக் குறையின்றிச் செய்துள்ளார்கள்.

இந்த சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கு தனது ஒளிப்பதிவின் மூலம்  செழுமை சேர்த்துள்ளார் ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமன்.வசனங்கள் அதிகம் இல்லாத இந்த படத்தை பேச வைத்துள்ளது ஒளிப்பதிவு.

ஜேக்ஸ் பிஜோயின் இசையில் ஆங்காங்கே பிறமொழிப் பாடல்கள் ஒலிக்கின்றன ஆர்ப்பாட்டம் இல்லாத பின்னணி இசை கதையின் தீவிரத்தைக் கூட்டி நம்மை இன்னும் கதையோடு நெருக்கமாக்குகிறது.

எம்.பி ரமீசின் படத்தொகுப்பில் படம் 168 நிமிடங்கள் ஓடுகிறது. படம் நீளமாக இருந்தாலும் காட்சிகளில் தொய்வில்லாமல் தொகுத்துள்ளார். சமீர் அப்துல் திரைக்கதை அமைத்திருக்கிறார். முதல் பாதித் திரைக்கதையைக் கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றவர், இரண்டாம் பாதியில் சற்றுத் தளர விட்டுள்ளார்.கதையை முன்பே முடித்திருக்கக்கூடிய சாத்தியங்கள் இருந்தாலும் சற்றே நீளமாக்கி இருக்கிறார்.

பரபரப்பான திரில்லர் படத்திற்கு ஒலியின் பலமும் தேவை என்பதை நிரூபித்துள்ளார் ஒலிப்பதிவாளர் நிக்சன் ஜார்ஜ்.அவரது ஒலி வடிவமைப்பும் பலமாக மாறி உள்ளது.

இந்தப் படத்தின் வசனங்களை சில பக்கங்களிலேயே எழுதிவிட முடியும் .மிகக் குறைவாகவே பேசி உணர்வுகளை வெளிப்படுத்தும்படி வசனங்கள் எழுதியுள்ள வசனகர்த்தாவின் கூர்மை பாராட்டத்தக்கது.

தனக்கு நீதி இல்லையா என்று ராஜீவன் பாத்திரம் கேட்கும் போது,  உலகம்  கடுமையானது .பூமியில் நிகழும் உணவுச் சங்கிலி சுழற்சி போல சமுதாயத்திலும் எளியவனை வலுத்தவன் சாப்பிட்டுக் கொண்டிருப்பான்,’உணவுச் சங்கிலியில் அடிப்படியில் இருக்கும் வெட்டுக்கிளி, வெறும் புல்லை மட்டும் சாப்பிடக்கூடாது; தன்னை வேட்டையாட வரும் தவளையையே அது சாப்பிட வேண்டும்’  என்பது  போலீஸ் அதிகாரி பேசும் வசனமாக வருகிறது .எனவே இங்கு இரக்க உணர்ச்சிக்கு வேலை இல்லை என்பதை உணர்த்தும் வகையில் அந்த கதாபாத்திரம் கைவிடப்பட்ட நிலையை சுட்டிக்காட்டுகிறது அந்த வசனம்.

உன் தலையை மேலே உள்ளவன் சாப்பிடுவான் என்கிறஎன்பதை உணர்த்துகிற வசனங்கள் வசனம் வருகிறது

‘நான் எல்லாம் யாரும் இல்லை நான் ஒரு சாதாரண ஆள்’ என்றும் ‘நான் சொல்வது எடுபடாது .என் குரலும் வார்த்தைகளும் யாருக்கும் கேட்காது’ என்கிற பலவீனமுள்ள ஒரு சாமான்யக் குடிமகனின் குரலை அரசாங்கமே கேட்கும் நிலைக்கு வருமாறு இந்தக் கதை அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் கற்பனை எளியவர்களின் குரல் எதிரொலிப்பதாக உள்ளது எனலாம்.

மொத்தத்தில் ஒரு திருப்தியான சஸ்பென்ஸ் திரில்லர் அனுபவத்தை இந்தப் படம் நிச்சயமாகக் கொடுக்கும்.