’காட்டாளன்’ திரைப்பட விமர்சனம்

ஆண்டனி வர்கீஸ், துஷாரா விஜயன்,சுனில் , கபீர் துகான் சிங்,பார்த் திவாரி,ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர்,ஹரி சங்கர் நாராயணன்,சந்திப் ரவிராஜ், அல்போன்ஸ் புத்திரன், லோகேஷ் கனகராஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பால் ஜார்ஜ் இயக்கியுள்ளார். ரெனடிவே ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி பஸ்ரூர் இசை அமைத்துள்ளார். ஷமீர் முகமது படத்தொகுப்பு செய்துள்ளார். கியூப் என்டர்டெயின்மென்ட்ஸ் ஷெரிப் முகமது தயாரித்துள்ளார்.

காட்டாளன் என்றால் வேட்டைக்காரர், காட்டில் வாழ்பவர், முரட்டுத்தனமானவர் என்ற பொருளில் கொள்ளலாம்.கேரளாவின் பாரம்பரியக் கலை வடிவமான கதகளியில் வேட்டைக்காரன் அல்லது காட்டில் வாழும் பாத்திரங்களை காட்டாளன் என்று அழைப்பர்.

சுனில் ஒரு பயங்கரமான கடத்தல்காரர்.அவர் பெயர் மாரி.யானைகளைக் கொன்று தந்தங்களைக் கடத்திக் கள்ளச் சந்தையில் விற்பவர்.அவர் கேரளாவில் இருக்கும் ஒரு வனப்பகுதியையே தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அது மட்டுமல்ல அங்கு வாழும் மக்களையும் தனது அடிமை போல வேட்டைக்காரர்களாக வைத்திருக்கிறார்.எல்லா நிழல் உலகத் தாதாக்களுக்கும் போட்டியாளர் ஒருவர் இருப்பார்.இந்த வகையில் அவரது போட்டியாளரான கபீர் துகான் சிங், சுனில் இடத்தைப் பிடிக்க முயற்சி செய்கிறார். சுனில் கடத்தும் தந்தங்களைக் காவல்துறை உதவியுடன் கபீர் கைப்பற்றுகிறார். சுனிலை நெருக்கி அவரது தொழிலை துடைத்தெறிய முயற்சி செய்கிறார்.இந்த முயற்சியில் சுனிலின் தந்தங்கள் பறிபோய் விடுகின்றன.அதை மீட்பதற்காக சுனில் தனது நம்பிக்கைக்குரிய
நாயகன் ஆண்டனி வர்கீஸைக் களத்தில் இறக்குகிறார்.அவரது சாணக்கியத்தனத்தால் இழந்த தந்தங்கள் மீட்கப்படுகின்றன. காவல் துறையின் கண்ணில் மண்ணைத் தூவி விட்டு மீண்டும் தங்கள் கடத்தல் தொழிலைச் செய்கிறார்கள்.

ஒரு கட்டத்தில் சுனிலின் நம்பிக்கைக்குரிய தம்பியாய் தளபதியாய் இருந்த நாயகன் ஆண்டனி வர்கீஸ், அவருக்கு எதிராகச் செயல்படும் நிலை ஏற்படுகிறது.அந்த வனப் பகுதி மக்களுக்கு உதவியாகவும் இருக்கிறார்.இதை அறிந்த சுனில் பதற்றப்படுகிறார்.ஆவேசம் அடைகிறார். ஆண்டனி வர்கீஸை அழிக்க நினைக்கிறார். அதற்காக அதுவரை தனது எதிரியாக இருந்த கபீர் துகான் சிங்குடன் கைகோர்க்கிறார்.இன்னொரு பக்கம் அந்த வனப்பகுதி பழங்குடி மக்களை ஒன்று திரட்டுகிறார் ஆண்டனி.அவர்களுக்கு விடுதலை உணர்ச்சி ஊட்டி கடத்தல்காரர்களுக்கு எதிராகப் போராட்டக்களத்தில் குதிக்க வைக்கிறார். எப்போது மாரியை வீழ்த்தலாம் என்று பார்த்துக் கொண்டிருந்த மக்கள் எழுகிறார்கள்.அது பெரிய யுத்தமாக மாறுகிறது.அதில் வெற்றி பெற்றது யார் ?கடத்தல்காரர்களை ஏன் ஆண்டனி வர்கீஸ் அழிக்க நினைக்கிறார் ? போன்ற கேள்விகளுக்கு இயற்கை சார்ந்த பின்னணியில் ரத்தம் தெறிக்கும் காட்சிகளுடன் சொல்வதே ‘காட்டாளன்’.

இந்தப் படத்தில் நாயகனாக நடித்திருக்கும் ஆண்டனி வர்கீஸின் தோற்றம்,இறுக்கமான முகம், மிகை உணர்வு காட்டாத உடல் மொழி அலட்டிக் கொள்ளாத அந்த பாவனை போன்றவை பார்ப்பவர் மனதில் அழுத்தமாகப் பதிகின்றன.

சுனிலை நகைச்சுவையாகவும் வில்லத்தனமாகவும் படங்களில் காட்டி வருகிறார்கள்.இதில் மாரி பாத்திரத்தில் பிடிவாதமும் முரட்டுத்தனமும் கொண்ட இரக்கமற்ற வில்லத்தனத்தால் மிரட்டுகிறார். இன்னொரு வில்லனாக நடித்திருக்கும் கபீர் துகான் சிங், ரசிக்க வைக்கும் வில்லனாக கவனம் பெறுகிறார்.

எதிர்பாராத நேரத்தில்  லூசி பாத்திரத்தில் பிரவேசிக்கும் துஷாரா விஜயன், ஆண்மைத் தனமான தோற்றத்துடன் சண்டைக் காட்சிகளில் மோதி நடித்திருக்கிறார்.குறிப்பாக அந்த துப்பாக்கிச் சண்டைக் காட்சிகள் சபாஷ் போட வைக்கின்றன.

பார்த் திவாரி, ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் என மற்ற பாத்திரங்களில் நடித்திருக்கும் நடிப்புக் கலைஞர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையைக் குறையின்றி செய்துள்ளனர்.படத்தின் முடிவில் எதிர்பாராத வேடத்தில் லோகேஷ் கனகராஜ் வருகிறார்.

கதை கேரளாவில் இருந்து இலங்கை நோக்கிச் செல்கிறது. இறந்தவர் உடலில் தந்தங்களை கடத்தும் காட்சிகளும் சிறு குழந்தை துன்புறுத்தப்படுவதும் நடுக்கடலில் படகில் நடக்கும் துப்பாக்கிச் சண்டைக் காட்சிகளும் பதை பதைக்க வைக்கின்றன.நிறைய பேரைப் போட்டுத் தள்ளுகிறார்கள் எண்ணிக்கையே இல்லை.
செண்டிமெண்ட் காட்சிகளுக்கு நல்ல வாய்ப்பு இருந்தும் அதைச் சரியாகப் பயன்படுத்தவில்லை.

ரெனடிவே ஒளிப்பதிவில் ஆக்‌ஷன் காட்சிகள் அமர்க்களம் காட்டுகின்றன.படத்தின் விறுவிறுப்பைத் தூக்கி நிறுத்தும் வகையில் கதாபாத்திரங்களை தனது ஒளிப்பதிவின் மூலம் அட்டகாசமாக அறிமுகம் செய்து இருக்கிறார். காடுகளின் பின்புலக் காட்சிகளும் யானைவரும் காட்சிகளும் மிரட்டுகின்றன.

ரவி பஸ்ரூர் இந்த ஆக்ஷன் படத்திற்கு பின்னணி இசையில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.பாடல்கள் இசையில் பிரகாசிக்க முடியவில்லை.

ஷமீர் முகமதுவின் படத்தொகுப்பு தொய்வுக்கு இடம் இல்லாமல் படத்தை விறுவிறுப்பு குறையாமல் கொண்டு செலுத்துகிறது.

பவுல் ஜார்ஜ், ஜோபி வர்க்கீஸ், ஜெரோ ஜேக்கப் ஆகியோரின் கதை, திரைக்கதை மற்றும் உன்னி.ஆரின் வசனம் போன்றவை படைப்பு ரீதியாக உதவியதை விட மேலேங்கித் தெரிவது ஆக்சன் காட்சிகள் தான்.

’கே.ஜி.எப்’, ’புஷ்பா’ போன்ற படங்களின் பாதிப்பில் இப்படி ஒரு படத்தை இயக்குநர் பவுல் ஜார்ஜ் இயக்கியிருக்கிறார் என்று கூறும்படியாகக் காட்சிகள் உள்ளன.

இயக்குநர் பவுல் ஜார்ஜ் ஆக்சன் படத்தை வன்முறை விறுவிறுப்பு கலந்து எடுப்பது என்கிற வகையிலேயே பயணம் செய்துள்ளார்.யானைகளைக் கொன்றுத் தந்தம் கடத்துதல் போன்றவற்றைக் கூறிய அளவுக்கு அந்த மண்சார்ந்த மக்கள், உயிரினங்களுக்கான அச்சுறுத்தல் பற்றியோ விரிவாகக் கூறவில்லை. தந்த வேட்டையின் பாதிப்புகளையும் அதற்காக உயிரினங்கள் கொல்லப்படுவது பற்றியும் அனுதாபம் வரும் வகையில் கூறியிருக்கலாம்.

‘காட்டாளன்’ படத்தில் மனிதனின் பேராசையால் பெரிய விலங்கான யானைகளைக் கொன்று தந்தத்தை வெட்டி எடுப்பது போன்ற காட்சிகள் துணுக்குற வைக்கின்றன. விலங்குகளின் மீது பரிவுடன் கதை நகர்ந்து இருந்தால் படத்தின் நோக்கம் உயர்ந்திருக்கும்.