‘சண்டக்காரி ‘ திரைப்பட விமர்சனம்

விமல், ஸ்ரேயா சரண், புன்னகை பூ கீதா, சத்யன் ,பிரபு, கே.ஆர். விஜயா, ரேகா, தேவ் ஹில், உமா பத்மநாபன், கிரேன் மனோகர், மகாநதி சங்கர் நடித்துள்ளனர்.எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். மாதேஷ். ஆர்.பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ரீஷ் இசையமைத்துள்ளார் .தினேஷ் பொன்ராஜ் படத்தொகுப்பு செய்துள்ளார். பாஸ் ப்ரொடக்ஷன் கார்ப்பரேஷன் சார்பில் புன்னகை பூ கீதா தயாரித்துள்ளார்.

கதை லண்டனில் தொடங்குகிறது.ஸ்ரேயா லண்டனில் உள்ள நிறுவனம் ஒன்றில் உயர் பொறுப்பில் இருக்கிறார். அவர் அதிகாரம் மட்டுமல்ல ஆணவமும் மிக்கவர்.அவரைக் கண்டாலே அலுவலகம் பதற்றம் அடையும் அளவிற்குக் கறாராக இருக்கிறார்.அவரது நிறுவனத்தில் கிராமத்தில் இருந்து சென்ற விமல் வேலையில் சேர்கிறார், அதுவும் அவருக்கு உதவியாளராக.மனதில் தாழ்வு உணர்ச்சியில் அறிவில் சிறந்தும் இருக்கும் விமல் ஒரு செயலியைக் கண்டுபிடித்துப் புகழ் பெற நினைக்கிறார்.ஸ்ரேயாவிடம் வேலைக்குச்  சேர்ந்தவர் ,ஸ்ரேயாவின் ஆணவப்போக்கால் பாதிக்கப்படுகிறார். இந் நிலையில் ஸ்ரேயாவின் லண்டன் விசா முடிவடைகிறது. அங்கே தொடர்ந்து இருந்தால்தான் அவரது உயர் பதவி,மேலும் பணம் ஈட்டுவது போன்றவை சாத்தியப்படும்.விமலைத் திருமணம் செய்து கொள்வது போல் நடித்தால் லண்டனில் தொடர்ந்து நிரந்தரமாகத் தங்கி இருப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். எனவே அந்த முயற்சியில் இறங்குகிறார்.ஆனால் விமலோ ஸ்ரேயாவின் எதிராளியுடன் கூட்டு சேர்ந்து கொண்டு இந்தத் திட்டத்தைத் தடுக்க நினைக்கிறார்.அதன்படி, ஸ்ரேயாவின் திருமணத் திட்டத்திற்கு சம்மதிக்கிறார் விமல் ஒரு நிபந்தனையுடன் .அது தமிழகத்தில் இருக்கும் தங்களது பெற்றோரைச் சந்தித்துச் சம்மதம் பெற வேண்டும் என்பது அது.விமலின் விருப்பத்தை ஏற்றுத் தமிழகம் வருகிற ஸ்ரேயா தனது திட்டத்தினை நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான்  ‘சண்டக்காரி’ படத்தின் மீதிக் கதை.
படத்தின் முதல் பாதியில் லண்டன் பின்புலக் காட்சிகள் கலர்ஃபுல்லாக இருக்கின்றன.படத்திற்கு வேறு நிறம் தருகின்றன.ஸ்ரேயாவின் முகத்தில் இருக்கும் பளபளப்பு அவரது நடிப்பில் காண முடியவில்லை. கடும் சொல் பேசி கோபக்காரராகவும் திமிர் பிடித்தவராகவும் இருக்கும் ஸ்ரேயா அந்தப் பாத்திரத்தில் முடிந்த அளவிற்குச் செய்துள்ளார்.பாடல் காட்சிகளில் ஒரு வணிகப்பட நாகியாகத் தாராளம் காட்டியுள்ளார்.
விமல் லண்டன் காட்சிகளிலும் தமிழகத்தில் இடம்பெறும் காட்சிகளிலும் ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறார். பின்புலம் மாறுகிறதே தவிர வேறு ஒன்றும் மாறவில்லை.

எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் சத்யனின் பாத்திரம் நகைச்சுவைக்கு உத்திரவாதம் அளிக்கிறது.விமலின் தந்தையாக பிரபுவும் தாயாக உமா பத்மநாபனும் நடித்துள்ளனர்.தனது வீராவேச குணத்தைக் காட்டாமல் மிகவும் அடக்கி வாசித்துள்ள பிரபுவின் பாத்திரமும் புதிதாக உள்ளது.வண்ண வண்ண சட்டைகள் போட்டு காட்சிகளில் வருகிறார்.விமலின் பாட்டியாக கே ஆர் விஜயா வருகிறார்..விமல் வீட்டு வேலைக்காரராக வரும் கிரேன் மனோகர் பாத்திரம் எல்லை மீறிப் பேசுகிறது. ஸ்ரேயா நிறுவனத்தில் ஸ்ரேயாவுக்கு எதிராக சதி வேலை செய்பவராக தேவ் ஹில் வில்லத்தனம் காட்டி உள்ளார்.ஸ்ரேயாவின் தோழியாக புன்னகை போல் கீதா வருகிறார் அடிக்கடி தொலைபேசியில் பேசியபடி அவரது பாத்திரம் செல்கிறது.

ஒளிப்பதிவாளர் ஆர்.பி.குருதேவ் லண்டன் மாநகரத்தையும், தமிழக மண்ணின் கிராமத்தையும் அழகாகவும், பாடல் காட்சிகளை வண்ணமயமாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறார்.அம்ரிஷ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.பின்னணி இசையும் பாதகம் இல்லை.
 படத்தொகுப்பாளர் தினேஷ் பொன்ராஜ், இயக்குநர் விரும்பிய படி படத்தொகுப்பு செய்துள்ளார்.எனவே அவரது தனித்துவம் காட்டவில்லை.
 எழுதி இயக்கியிருக்கும் ஆர்.மாதேஷ், ஆணவமும் ஆவேச குணமும் கொண்ட ஒரு பெண்ணின் பாத்திரத்தையும் அப் பெண்ணின் மனதில் உருவாகும் காதலையும் சொல்ல முயற்சி செய்து இருக்கிறார்.இது சார்ந்த அழுத்தமான காட்சிகள் இல்லாததால் படம் பெரிதாகக் கவராமல் கடந்து போய் விடுகிறது.தேய் வழக்காக வரும் நகைச்சுவைக் காட்சிகள் அலுப்பூட்டுகின்றன.குறிப்பாக கிரேன் மனோகர் விமலிடம் நடந்து கொள்ளும் விதம் பாத்திர மீறல்.
லண்டன் ,கிராமம் என்கிற இரு தளங்களிலும் கதையை ஓடவிட்டு வணிகரீதியான படமாகக் கொடுக்க முயற்சி செய்துள்ளார்.
மொத்தத்தில், ஜென் சீ காலத்தில் ஒரு சவாலே சமாளி கதையாக உருவாகி இருப்பது தான் சண்டக்காரி‘ .பல கேள்விகளைத் தவிர்த்து விட்டு இந்தப் படத்தைப் பார்த்து வைக்கலாம்.  ஆக சண்டக்காரி’ சுமார் ரகம்.