‘போலீஸ் ஃபேமிலி’ திரைப்பட விமர்சனம்

ராஜா மலைச்சாமி,பருத்திவீரன் சரவணன், நிஷா துபே, காதல் சுகுமார், ராஜன் லியோன்,ரத்தினம், தாஸ் சாந்தகுமார் ,எம்.எஸ். செல்வா நடித்துள்ளனர்.
பாலு எம் இயக்கியுள்ளார். ஜெயா கே.தாஸ் இசை அமைத்துள்ளார். ஆன் த டேபிள் புரொடக்ஷன்ஸ் சார்பில் மலைச்சாமி ஏ எம் ராஜா தயாரித்துள்ளார்.

காவல் நிலையக் காவலர்களின் அத்துமீறல், அரசியல்வாதியின் செல்வாக்கு இரண்டுக்கும் இடையில் நடக்கும் அதிகார ஆணவப் போட்டி மற்றும் அதன் விளைவுகள் பற்றிய க்ரைம் கதை.

விசாரணைக்காகக் காவல் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்ட இளைஞர் ஒருவரைக் காவலர்கள் கடுமையாகத் தாக்கி விட அவர் சுயநினைவு இழக்கிறார். அவர் அரசியல் செல்வாக்குள்ள, பணபல முள்ள பருத்திவீரன் சரவணன் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்று தெரிந்ததும் இன்ஸ்பெக்டர் ராஜா மலைச்சாமி குழுவினர் அவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட்டு விடுகிறார்கள்.ஆனால் மறுநாள் அவரை யாரோ கொலை செய்து விடுகிறார்கள்.இதை அறிந்து கொண்ட அந்த இளைஞரின் தந்தை தனது அதிகார பலத்தைக் காட்டுகிறார். இந்த இரு வேறு மோதல்களின் முடிவு என்ன?

பழிக்குப் பழி என்ற வகையில் தன் மகனை கொலை செய்தவர்களைத் தீர்த்துக்கட்ட வெறியோடு புறப்படுகிறார் சரவணன்.சம்பந்தப்பட்ட காவலர்களின் குடும்பத்தில் உள்ளவர்களை வரிசையாகக் கொலை செய்ய ஆரம்பிக்கிறார்.ஆனாலும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க முடியாமல் காவல்துறை திணறுகிறது .உண்மையான குற்றவாளி யார்?கொலைக்கான காரணம் என்ன? என்று கண்டுபிடிக்க முயல்கிறது.அதே நேரம் சரவணனின் பழிக்குப் பழி நடவடிக்கைகளைத் தடுக்கவும் நினைக்கிறது.அந்த வகையில் உண்மை கண்டறியும் பயணம்தான் ‘போலீஸ் ஃபேமிலி’ படத்தின் மீதிக் கதை.

கதையின் நாயகனாக போலீஸ் இன்ஸ்பெக்டராக ராஜா மலைச்சாமி நடித்துள்ளார்.காவல்துறையின் நடவடிக்கைகளைத் தனது பாத்திரத்தின் மூலம் அப்பட்டமாக வெளிக்காட்டி உள்ளார்.தன் மகளுக்கு நேரும் கொடுமைகளைக் கண்டு தவித்துக் கதறும் காட்சிகளில் ஒரு தந்தையாக மிளிர்கிறார்.அவர் ஒரு புது முகமாக இருந்தாலும் அந்தப் பாத்திரத்தில் குறை சொல்ல முடியாமல் நடித்துள்ளார்.

இன்னொரு பக்கம் மகன் மீது அன்பும் பாசமும் கொண்ட குணச்சித்திரமாக சரவணன் நடித்துள்ளார். எதிர்மறைக் குணம் வெளிப்பட்டாலும் அவரது தந்தை குணம் வியக்க வைக்கிறது.அவரது அனுபவ நடிப்பு படத்திற்குப் பலம் சேர்த்துள்ளது.அவரது நடவடிக்கைகள் திரைக்கதையில் விறுவிறுப்பு கூட்டுகின்றன.
காதல் சுகுமார் சாதாரணமாக வந்து திரைக்கதையின் ஓட்டத்திற்கு உதவி உள்ளார்.

நிஷா துபே ஒரு வணிக ரீதியான கதாநாயகிக்குரிய இடத்தை நிரப்பியுள்ளார்.அந்த வகையில் அவரைக் குறை சொல்ல ஒன்றுமில்லை.

சுரேகா.ஆர், ரோஜன் லியோன், ரத்தினம், தாஸ் சாந்தகுமார், எம்.எஸ்.செல்வா என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களுக்குக் கொடுத்த வேலையைச் செய்துள்ளார்கள்.

இயக்குநருக்கு இணையாகப் பயணித்துள்ளது ஒளிப்பதிவாளர் ஜெயகுமார் தங்கவேலின் கேமரா.

ஜெயா கே.தாஸின் இசையில் பாடல்கள் , பின்னணி இசை இரண்டிலும் குறிப்பிட்டுச் செல்லும்படியான உச்சம் தொடவில்லை என்றாலும் திரைக்கதையின் பாதையில் உதவி இருக்கிறது.

எம்.எஸ்.செல்வாவின் படத்தொகுப்பு படத்தினை வேகத்தை தடை செய்யாமல் பயன்பட்டுள்ளது.

லாக்கப் மரணங்கள் நம் நாட்டில் சகஜமாகி வரும் இந்த வேளையில் அந்த ஒரு கருவை எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை சஸ்பென்ஸ் திரில்லர் வகையிலான படமாக உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் பாலு. எம்.பட்ஜெட் போதாமைகளைத் தாண்டி எதிர்பாராத திருப்பங்கள், யூகிக்க முடியாத காட்சிகள் என்று தன்னால் முடிந்த அளவிற்கு படத்தை நகர்த்திச் சென்றுள்ளார்.

படத்தில் சில குறைபாடுகள் தோன்றினாலும் தனக்கு வாய்த்த செலவுத் திட்டத்தில் தன்னாலான முயற்சிகளைச் செய்துள்ளார் இயக்குநர்.

மொத்தத்தில் இந்த ‘போலீஸ் ஃபேமிலி’ ,படம் பார்க்கும் ரசிகர்களுக்குத் திருப்தி அளிக்கும் வகையில் ஒரு பொழுதுபோக்குப் படம் எனலாம்.