‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடர் விமர்சனம்

வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக், நான் கடவுள் ராஜேந்திரன் ,விவேக் பிரசன்னா ,சம்பத் ராம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

சவிர் சுதாகர் இயக்கியுள்ளார். இசை பரத், படத்தொகுப்பு பவித்ரன், கலை இயக்கம் தமிழ்.

எஸ் எஸ் குழுமத்தின் சார்பில் சிங்காரவேலன் தயாரித்துள்ளார். ஜீ 5 வெளியிடுகிறது.

ஊரகப் பகுதிகளில் கிரிக்கெட் விளையாடும் இளைஞர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டு இருக்கும் இணையத் தொடர் தான் இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்று கதை தொடங்குகிறது.அந்த ஊரில் கிரிக்கெட் மேட்ச்சை டிவியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் வாதங்கள் பிரதிவாதங்கள் எல்லாமே கிரிக்கெட் பற்றியே நடக்கிறது. டிவியை பார்த்துக் கொண்டு ‘அவர் ஒழுங்காக ஆடவில்லை இவர் நன்றாக ஆடுகிறார்’ என்றெல்லாம் விமர்சனம் செய்து கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அப்படி இருக்கும் போது அந்த ஊர் கடைக்காரரான விவேக் பிரசன்னா நாம் நேர் நிலையாகப் சிந்திப்போம் நமது அணியே வெற்றி பெறும் என்று அவர்களை அடக்கிச் சமாளிக்கிறார்.அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் தாக்கம் கிராமங்களிலும் இருக்கிறது.

அந்த ஊரில் இருந்து வைபவ் முருகேசன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் என்று இளைஞர்கள் கிரிக்கெட் ஆர்வத்தில் அணிசேர்த்து ஆடுகிறார்கள் . அவர்களின் மம்மட்டியான் ஸ்டார்ஸ் என்கிற அணி நன்றாக விளையாடி வெற்றி பெறுகிறார்கள். அந்த ஊர் அழகி லாவண்யா அன்பழகன் மீது வைபவுக்கு மையல் உண்டு என்பது தனிக்கதை.

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவராக இருக்கும் மொட்டை ராஜேந்திரனின் 70 வது பிறந்த நாளை முன்னிட்டு பெரிய கிரிக்கெட் போட்டி நடக்கிறது. அதன் இறுதிப் போட்டியில் வெல்லும் பணத்தை வைத்துக் கொண்டு சென்னை வந்து டோனி ஆடும் கிரிக்கெட் போட்டியை நேரில் காணும் கனவுடன் இருக்கிறார்கள் அந்த மூன்று இளைஞர்கள்.கால் இறுதி அரையிறுதி வரை செல்கிறார்கள்.ஆனால் ராஜேந்திரன் திடீரென்று இறந்து விடுகிறார் .அதனால் கிரிக்கெட் போட்டி நடக்காமல் அவர்கள் கனவு பலிக்காமல் போகிறது .அதனால் விவேக் பிரசன்னாவிடம் கடன் வாங்கிக் கொண்டு கிரிக்கெட் போட்டியைக் காண்பதற்குச் சென்னை வருகிறார்கள். விவேக் பிரசன்னாவை அழைத்துக் கொண்டு செல்வதாகக் கூறியவர்கள் அவரை கழற்றிவிட்டு லாவண்யாவை அழைத்துச் செல்கிறார்கள்.

சென்னை வந்தவர்கள் ஒரு நண்பனின் அறையில் ஒட்டிக் கொள்கிறார்கள்.இங்கு வந்தால்தான் தெரிகிறது அவர்கள் வாங்கியது போலி டிக்கட் என்று .பிறகு எப்படியாவது சிரமப்பட்டு ஆட்டத்தைப் பார்த்து விட வேண்டும் என்று ஆன்லைனில் எல்லாம் வேண்டுகோள் விடுத்து பணம் சேர்க்கிறார்கள்.எப்படியும் நேரடியாக டோனி ஆடும் கடைசிப் போட்டியைப் பார்த்து விட வேண்டும் என்று என்று சென்னையில் தங்கி இருக்கிறார்கள். கிரிக்கெட் பார்க்க சென்னை வந்தவர்களுக்குப் பல சம்பவங்கள் நடக்கின்றன.அதற்குப் பிறகு டிக்கெட் போட்டி சார்ந்த சூதாட்டத்தில் ஈடுபடுகிறார்கள் .பணம் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் ஓரிடத்தில் காத்திருக்கும் போது கிரிக்கெட் ஆட வரும் தோனியின் பஸ் வருகிறது. அதில் ஜன்னல் வழியே டோனியைப் பார்த்து அவர்கள் பரவசம் அடைகிறார்கள். அத்துடன் திருப்தி அடைந்து விடுகிறார்கள்.தாங்கள் வைத்திருந்த டிக்கெட்டை நல்ல விலைக்கு விற்று விடுகிறார்கள்.பணம் சம்பாதித்தாலும் அவர்களது மனம் மாறுகிறது .யார் மீதும் மிகையுணர்ச்சி கொண்டு பைத்தியமாக இருக்கக் கூடாது என்கிற தெளிவு அவர்களுக்கு ஏற்படுகிறது.தோனிக்கு நாம் ஃபாலோயர்களாக இருப்போம் .ஆனால் பைத்தியமாக இருக்கக் கூடாது என்கிற தெளிவோடு ஊருக்குக் கிளம்புகிறார்கள். எனவேஅவர்களது மனமாற்றம் என்பது நல்ல கருத்தாக இருக்கிறது.

யாருக்கும் பைத்தியமாக இருக்கக் கூடாது என்று சொல்கிற கருத்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு மட்டுமல்ல திரைப்பட ரசிகர்களுக்கும் பொருந்தும் .பிம்பக் கட்டமைப்பு செய்யும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் ரசிகர்களாக இருந்து பைத்தியமாக அலையக்கூடாது என்கிற சிந்தனை வரவேற்கத்தக்கது.சென்னைப் பயணத்திற்கு பிறகு அவர்கள் என்ன ஆனார்கள் என்பதுதான் இந்த ‘மம்மட்டியான் ஸ்டார்ஸ்’ இணையத் தொடரின் மீதிக் கதை.

ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டிய கதையை இணையதளத் தொடராக எடுக்கும்போது அந்தக் கதை நீட்டப்பட்டிருப்பதை உணர முடிகிறது.அந்த இழுபட்ட நீளத்தை உணர முடிகிறது. பொதுவாக இணையத் தொடர்களில் காணப்படும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் விழும் செயற்கையான திருப்ப முடிச்சு இதில் காணப்படவில்லை தொடர்ச்சியான கதையாகவே தோன்றுகிறது.

எனவே அந்த சஸ்பென்ஸ் முடிச்சு தளர்வாக உள்ளது. அத்துடன்  வைபவ் முருகேசன், லாவண்யா அன்பழகன், வெங்கட் பாலமுரளி , ஜெகபர் சாதிக் என ,நடித்துள்ள நடிகர்கள் அனைவருமே கதை மாந்தர்களாகவே தோன்றுகிறார்கள். அனைவரும் புதுமுகங்களாக இருப்பதால் அந்த மண்ணின் மைந்தர்களாக நிஜ பாத்திரங்களாகவே தெரிகிறார்கள்.

அந்த நான்கு பேரைச் சுற்றி பிரதானமாக கதை நிகழ்கிறது ,நகர்கிறது. அவர்கள் துடிப்புள்ள இளைஞர்களாக 20 வயதுக்குள் இருப்பது கதைக்கு ஜீவனை கொடுக்கிறது. கிரிக்கெட் ஆர்வமுள்ள துடிப்புள்ள இளைஞர்களைக் கொண்ட கதையாக இருப்பதால் தொடரில் இளமை கொடிகட்டிப் பறக்கிறது.

பொதுவாக வணிகத் திரைப்படங்களில் காணப்படும் காதல், பாசம், நட்பு,பகைமை ,பொறாமை போன்ற அனைத்து உணர்வுகளையும் கலந்து இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்கள்.அதற்கான காட்சிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

கிராமத்திலிருந்து நகரத்தை நோக்கிய பயணத்தில் இந்தக் கதையில் அந்த இரு வேறு நிலக்காட்சிகளும் புதிய நிறத்தைக் கொடுத்துள்ளன.அந்த வகையில் சிறப்பாக ஒளிப் பதிவு செய்துள்ளார்கள் ஒளிப்பதிவாளர்கள் ராஜ்குமார் மற்றும் அவினாஷ். இருவரும் கிரிக்கெட் போட்டிகளை உயிர்ப்புடன் படமாக்கி உள்ளனர்.

இணையத் தொடராக இருந்தாலும் திரைப்படத்தைப் போலவே நல்ல பாடல்களும் ஒலிக்கின்றன; பின்னணி இசையும் குறையில்லை.
அவ்வகையில் இசையமைத்துள்ளார் இசையமைப்பாளர்பரத்.

மிதமான பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இந்தத் தொடர் விளையாட்டு ரசிகர்களுக்குப் பிடிக்கும்.