’ரூம் பாய்’ திரைப்பட விமர்சனம்

நிகில், ஹர்ஷா, இமான் அண்ணாச்சி ,பிர்லா போஸ், காத்து கருப்பு கலை, கற்பகம், கவிதா விஜயன், சமீர் ,அருண் ராஜா, பிரபாகர், கேரளா பெஹமின், நிதிமரோலி நடித்துள்ளனர்.கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் ஜெகன் ராயன்.இவர் தமிழ்நாடு அரசு திரைப்படக் கல்லூரியில் பயின்றவர்.

ஒளிப்பதிவு :சி பாரதி ராஜன், இசை: வேலன் சகாதேவன், படத்தொகுப்பு: டிவி மீனாட்சி சுந்தர், நடனம்: தினா .

ஏசிஎம் சினிமா சார்பில் சூரியகலா சந்திரமூர்த்தி தயாரித்துள்ளார்.

தனது தங்கையை நாசமாக்கியவர்களையும் தனது குடும்பத்தில் குழப்பம் உண்டாக்கி தாய் தந்தையை இழக்க செய்தவர்களையும் நாயகன் ஒரு ரூம்பாயாக நுழைந்து பழைய சதிகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட கொடியவர்களை அழிப்பதே’ ரூம் பாய்’ படத்தின் கதை.

இந்த கதை திருப்பத்தூர் மாவட்டப் பகுதிகளிலும் ஏலகிரியிலும் நடக்கிறது.ஒரு கூர்நோக்கு இல்லத்தில் இருந்து வெளியேறிய நாயகன் சஞ்சயின் பயணமே  கதையாக விரிகிறது.அவன்  ஒரு புதிய ஹோட்டலில் ரூம் பாயாக வேலைக்குச் சேர்கிறான். அங்கே சேர்ந்ததும்தான் அங்கே நிகழும் பல கொடூரங்கள் தெரிய வருகின்றன . அங்கே நடக்கும் பாலியல் அத்துமீறல்களையும் அநியாயங்களையும் கண்டு சம்பந்தப்பட்டவர்களைப் பழிவாங்க நினைக்கிறான்.அப்படிச் செல்லும் பாதையில் பல அதிர்ச்சிகரமான உண்மைகள் தெரிய வருகின்றன.
அவனுக்குத் தெரியாத தனது குடும்ப வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டு நிராதரவாகத் தான்  நிற்கும் நிலைக்குக் காரணமானவர்களை அறிகிறான். அவர்களை அவன் எப்படிப் பழி வாங்குகிறான் என்பதுதான் ரூம் பாய் கதை செல்லும் பாதை.

இதில் நாயகனாக சஞ்சய் பாத்திரத்தில் சி.நிகில் நடித்துள்ளார். அறிமுகமாக இருந்தாலும் துடிப்பான நடிப்பில் கவர்கிறார். நாயகி நிஷாவாக வரும்  ஹர்ஷாவுக்குப் பெரிதாக வேலையில்லை. சன்னி பன்னி ஹோட்டல் அதிபராக இமான் அண்ணாச்சி வந்து அப்போதைக்கு சிரிப்பு மூட்டுகிறார் . பிர்லாபோஸ் நாயகனின் தந்தையாக சந்துரு பாத்திரத்தில் வருகிறார். நாயகனின் நண்பனாக காத்து கருப்பு கலை, பிச்சாண்டி பாத்திரத்தில் வந்து சிரிக்க வைக்கப் படாதபாடுபடுகிறார். சுமதியாக வரும் இன்ஸ்டா புகழ் கற்பகம்,இனியாவாக வரும் கவிதா விஜயன் இருவரும் தங்கள் பாத்திரங்களில் முடிந்த அளவிற்கு நடித்துள்ளனர். படத்தில் பிரதான வில்லனாக அருண் ராஜா வருகிறார். அவரை விட இன்பத்துரை பாத்திரத்தில் நடித்திருக்கின்ற பிரபாகர் சைலன்ட் கில்லர்  ஆக வில்லனாக வருகிறார். இன்பத்துரையின் கீழ் வேலை பார்க்கும் நபராக வந்து குடித்துக் கொண்டே கதை கேட்பவர் நடிப்பில் தனித்து தெரிகிறார்.ஷாலினி பாத்திரத்தில் கேரளா பெஹமின் நடித்துள்ளார் . நிறைய பாத்திரங்கள் இருப்பதால் எந்தப் பாத்திரமும் முழுதாக மனதினை நிறைக்காமல் செல்கின்றன .

படத்தில் ஹோட்டல் மேனேஜர் ஜேம்ஸ், சஞ்சயின் அப்பா, அம்மா, பவித்ராவின் அம்மா, ஹோட்டல் முதலாளி, சஞ்சயின் தங்கை ஷாலினி ,இன்பத்துரை இப்படி நிறைய கொலைகள் நடக்கின்றன. சந்தேகம் கள்ளக்காதல் என்று படம் முழுக்க எதிர்மறை மாதிரியான பாத்திரங்கள் தான் ஆக்கிரமித்துள்ளன. படத்தின் கதை பெரும் பகுதிக்கான காட்சிகள் வீட்டில் உள்ளே, ஹோட்டல் உள்ளே என்று நடக்கின்றன. வெளிப்புறக் காட்சிகள் குறைவு .அவ்வகையில் அதற்கு ஏற்றபடி ஒளிப்பதிவு செய்துள்ளார் பாரதி ராஜன். மேலும் வேலன் சகாதேவன் இசையில் நல்ல பாடல் கூட அடையாளம் தெரியாமல் கடந்து செல்கின்றன. குறிப்பாகத் தந்தையின் பெருமை பற்றிப் பேசும் பாடல் கவனிக்க வைக்கிறது.

ஏழைகளின் ஊட்டி  போன்ற ஏலகிரியின் பின்புலத்தில் நிறைய காட்சிகள் வருகின்றன. சில காட்சிகளில்
ஏலகிரியைச் சுற்றிப் பார்க்கிற அனுபவம் கிடைக்கிறது.

குடும்பம் பாசம் காதல் நகைச்சுவை அனைத்தும் கலந்த கலவையாக உருவாக்கி இருக்கிறார்கள் ஒரு மிதமான பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும் என்று அதற்குரிய காட்சிகளாக எடுத்து இருக்கிறார்கள். எனவே தொழில்நுட்ப அசத்தல்கள் இல்லாததால் பெரிதாகக் காட்சிகள் மனதை ஈர்க்கவில்லை. மொத்தத்தில் கமர்சியல் மசாலா படமாக உருவாகி இருக்கிறது.ஆக ஒரு ஜனதா சாப்பாடு போட்டிருக்கிறார்திரைப்படக் கல்லூரி மாணவரான இயக்குநர் ஜெகன் ராயன். மொத்தத்தில் இது ஒரு மிதமான பொழுதுபோக்குப்படம்.