’வாரண்ட்’ இணையத் தொடர் விமர்சனம்

பிரசாந்த் பாண்டியராஜ், பாலாஜி சக்திவேல், காளி வெங்கட் ,அருள்தாஸ் ,நம்ரிதா,அருள்ஜோதி, சாயாதேவி, ஹலோ கந்தசாமி, மீனா, கௌசல்யா, வையாபுரி நடித்துள்ளனர் .கதை திரைக்கதை பிரசாந்த் பாண்டியராஜ் மற்றும் விக்னேஷ் நடராஜன்.
இந்த இணையத் தொடரை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார்.ஒளிப்பதிவு – அசோக்குமார், இசை- சாம் சி எஸ், படத் தொகுப்பு- ராமர்.சிவன் பிக்சர்ஸ் மற்றும் எஸ் ஸ்டுடியோ சார்பில் தயாராகி உள்ளது. ஜீ 5 ஒரிஜினல் வெளியீடு.

ஏற்கெனவே காவல்துறையின் சொல்லப்படாத பக்கங்களை புரட்டி காட்டி ‘விலங்கு’ இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த பிரசாந்த் பாண்டியராஜ்,அதே வகைமையில் காவல்துறையின் இன்னொரு பக்கத்தை ’வாரண்ட்’ இணையத் தொடர் மூலம் வெளிச்சமிட்டுக் காட்டும் வகையில் ஒரு கதையை உருவாக்கி நாயகனாகவும் நடித்துள்ளார்.விக்னேஷ் நடராஜன் இத்தொடரை இயக்கி உள்ளார்.

பிரசாந்த் பாண்டியராஜ் அதாவது ந. கோட்டை கருப்பசாமி வீட்டுக்கு ஒரே பிள்ளை.அவரை அரசு வேலையில் பார்ப்பது என்பது குடும்பத்தின் கனவாக இருக்கிறது.தந்தையின் பெரிய கனவுகள் நிறைவேறாமல் போகவே ஒரு கட்டத்தில் அவர் காவல்துறையில் ஒரு வழியாக அவர் காவலராகிறார்.காவல்துறையின் கம்பீரம் பற்றிய கனவுகளோடு வேலையில் சேரும் அவர் அங்கே இருக்கும் சூழலை பார்த்து சற்று அதிர்கிறார். காணப்படுவது வேறு அறியப்படுவது வேறு என்று இருக்கிறது.அங்கே அமைந்துள்ள அமைப்பால் அவருக்கு புறக்கணிப்புகளும் அவமானங்களும் பரிசாகக் கிடைக்கின்றன. பெரிதும் வெறுப்புக்கு உள்ளாகும் அவர் தன்னை நிரூபிக்க முயற்சி செய்கிறார். அது ஒரு விபரீதத்தில் முடிகிறது.திருமணம் நிச்சயமாகி இருக்கும் நிலையில் லாக்கப் கொலை என்கிற பெரிய சிக்கலுக்குள் மாட்டிக் கொள்கிறார்.அதில் இருந்து அவர் மீண்டாரா என்பதை நோக்கிச் செல்வதே ‘வாரண்ட் இணையத் தொடர்.காவல் நிலையம் சென்று ஒரு மணி நேரம் உற்றுக் கவனித்தாலே குற்றவாளிகளுக்கும் காவல்துறைகளுக்கும் உள்ள உறவு புலப்படும் .இந்த அமைப்பில் காவல்துறை எந்த அளவிற்கு மோசமாக மாறி உள்ளது என்பது தெரியும். அநியாயக்காரர்களில் கூடாரமாக காவல் நிலையங்கள் புலப்படும். ஆனாலும் அங்கேயும்  ஈரமுள்ள மனிதர்கள் மனிதநேயம் உள்ள காவலர்கள் கேலிக்குள்ளாக்கப்படும் அவலத்தையும் அறியலாம்.கொடூரமான காவலர்களால் லாக்கப் மரணங்கள் நடைபெறும் அதே இந்த தேசத்தில் தான் அதன் சாட்சியங்களாக உள்ள நேர்மையான காவலர்களும் இருக்கிறார்கள்.நேர்மையானவர்களுக்கு நேரும் மன அழுத்தம் சாதாரணமானதல்ல. இப்படி போலீஸ்காரர்களின் அகவுலகத்தையும் இந்தத் தொடர் வெளிப்படுத்துகிறது .காவல்துறையினர் வலியவர்களுக்கு சலாம் போடுவதையும்
ஏழைகளை எளியவர்களை உதாசீனப்படுத்தி நடத்துவதையும் அவர்கள் குற்றங்களை முடிப்பதற்கு செய்யும் ஜோடனைகளையும் இந்த தொடர் ரத்தமும் சதையுமாக அப்பட்டமாக வெளிப்படுத்துகிறது.

வெள்ளந்தியான முகம், முற்றாத குரல் ,வெகுளித்தனமான தோற்றம் கொண்ட
பிரசாந்த் பாண்டியராஜ், அந்தக் கோட்டை கருப்புசாமி பாத்திரத்தில் மிகச் சரியாகப் பொருந்தி இருக்கிறார்.வீரம் கோபம் பயம் பதற்றம் தவிப்பு என்று பல்வேறு பாவனைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகிடைத்து அதனைச் சரியாகவே பயன்படுத்தியுள்ளார்.நாயகிகளாக நடித்திருக்கும் நர்மிதா.எம்.வி, அருள்ஜோதி, சாயா தேவி ஆகியோருக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், திரைக்கதை ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள். இந்த மூவரில் சாயா தேவியின் கதாபாத்திரம், சற்று அழுத்தம் கொண்டது.

பிரசாந்த் பாண்டியராஜின் தந்தையாக வரும் பாலாஜி சக்திவேல், அம்மாவாக வரும் கெளசல்யா, போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அருள்தாஸ், காவலராக நடித்திருக்கும் ஹலோ கந்தசாமி,மற்றும் சப்-இன்ஸ்பெக்டர், காவலர்கள் கதாபாத்திரத்தில் நடித்த அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களுக்கு தங்கள் பங்களிப்பைக் குறையின்றிச் செய்துள்ளார்கள்.

அசோக் குமாரின் ஒளிப்பதிவு காவல் நிலையம் மற்றும் காவலர்களை இயல்பாக காட்சிப்படுத்தியுள்ளது,நாமும் அந்த போலீஸ் ஸ்டேஷனில் இருக்கும் உணர்வைத் தருகிறது.

சாம்.சிஎஸ்-ன் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு ஈடுகொடுத்து, ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் வேகத்தைக் கூட்டி விறுவிறுப்பை ஏற்றி உள்ளது.

திரைக்கதையைத் தொய்வில்லாமல் பரபரப்பாக நகர்த்துவதற்கு ஆர்.ராமரின் படத்தொகுப்பு உதவியிருக்கிறது.

இந்தத் தொடரில் இடம் பெறும் குடும்பம் மற்றும் காதல் காட்சிகள் திரைக்கதையில் தொய்வு போல் உணர வைக்கும் நேரத்தில் எல்லாம் காவல்துறையில் பணியழுத்தச்சுமை மன அழுத்தம் மூலம் பாதிக்கப்படும் காவலர்களின் மன இயல்புகளைக் காட்டும் காட்சிகள் அதை ஈடு செய்கின்றன.

காவல்துறை பணியும், சூழலும், அமைப்பின் இயல்பும் கனிந்த மனத்தையும் கல் நெஞ்சம் ஆக்கும் கொடுமையையும் இந்த கதையில் அழகாக எடுத்துக் கூறியுள்ளார்கள். யார் மீது அதிகாரம் செலுத்துவது அதற்கு முன் தன் மனசாட்சி முன் நின்று ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும் என்ற கருத்தையும் கூறியுள்ளது இந்தத் தொடர்.உச்சகட்ட காட்சியில் காவல்துறை நோக்கி எழுப்பப்படும் கேள்விகள் கூர்மையானவை நேர்மையானவை அதிகார வர்க்கத்தின் நெஞ்சில் ஆணி போல் அறைபவை.காவல் நிலையத்தில் மரணம் என்ற ஒரு சம்பவத்தை வைத்துக் கொண்டு சுவாரசியமாக திரைக்கதை நெய்து சுமார் நான்கரை மணி நேரம் பார்வையாளர்களின் முழுக் கவனத்தையும் ஈர்த்துவிடும் இயக்குநர் விக்னேஷ் நடராஜன், ஒவ்வொரு அத்தியாயத்தையும்
சுவாரஸ்யமாக நகர்த்தி சென்றிருப்பதோடு, உணர்வுப்பூர்வமாகவும் காட்சிகளை வடிவமைத்து தொடரை இயக்கியிருக்கிறார். குறிப்பாக அருள்தாஸ் தான் ஒரு  பெரிய நெருக்கடியில் இருந்து மீண்ட கதையைக் கூறும் காட்சி சுவாரசியமானது மட்டுமல்ல பதை பதைக்க வைக்கக் கூடியதுநெருக்கடியான தருணங்களில் கதைக்குள் குறுக்கிடும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்தும் பரபரப்புகள் திரைக்கதை ஆசிரியரின் சாமர்த்தியம் கூறுபவை.

படத்தில் ஆங்காங்கே ஒலிக்கும் கெட்ட வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டும் . இணையத் தொடர்களுக்கு உள்ள சுதந்திரத்தை எத்தனையோ புரட்சிகரமான கருத்துக்களை கூறுவதற்கு ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். குடும்பத்தோடு பார்க்கும் ஒன்றாக மாறுவதால் எதார்த்தம் என்கிற பெயரில் கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுவது முற்றிலுமாக தடுக்கப்பட வேண்டும்.அந்த மூட நம்பிக்கையில் இருந்து படைப்பாளிகள் வெளியே வர வேண்டும்.இந்தப் போக்கு தொடர்ந்தால் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவை இழக்க வேண்டிவரும்.குடும்பத்தினர் குறிப்பாகப் பெண்கள் இணையத் தொடர் பார்ப்பதைத் தவிர்த்து விடுவார்கள்.

மொத்தத்தில், ‘வாரண்ட்’ அனைவரையும் ஈர்க்கும்படியான,ஓர் இணையத் தொடர் அனுபவம்.

ரேட்டிங் 4/5