இளையராஜாவின் மெய் சிலிர்க்கும் இசையில் ‘களத்தூர் கிராமம்’

Ilayaraja_GDAஇசைஞானி இளையராஜாவின் மெய் சிலிர்க்கும் இசையில் உருவாகி இருக்கிறது ‘களத்தூர் கிராமம்’

ஒரு திரைப்படத்தின் கதைக்கு உயிர் கொடுப்பது இசை தான் என்பதை ஒவ்வொரு இளையராஜாவின் படம் மூலமாகவும் அனைவரும் உணர்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைய இருக்கும் திரைப்படம், இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் ‘களத்தூர் கிராமம்’. இந்த படத்தை ‘ஏ ஆர் மூவி பாரடைஸ்’ சார்பில் ஆவுடைத்தாய் ராமமூர்த்தி தயாரித்து இருக்கிறார்.

kalathur2இயக்குநர் சரண் கே அத்வைதன் இயக்கி இருக்கும் இந்த களத்தூர் கிராமம் திரைப்படத்தில் கிஷோர் குமார் மற்றும் யக்னா ஷெட்டி (அறிமுகம்) முன்னணி கதாபாத்திரங்களிலும், சுலீல் குமார், மிதுன் குமார், ரஜினி மகாதேவய்யா, அஜய் ரத்னம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஒளிப்பதிவாளர் புஷ்பராஜ் சந்தோஷ், படத்தொகுப்பாளர் சுரேஷ் உர்ஸ், பாடலாசிரியர்கள் இசைஞானி இளையராஜா – கண்மணி சுப்பு, ஸ்டண்ட் மாஸ்டர்ஸ் மகேஷ் மற்றும் ஓம் பிரகாஷ் என பல திறமையான தொழில் நுட்ப கலைஞர்கள் இந்த ‘களத்தூர் கிராமம்’ படத்தில் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.

“ஒரு கிராமத்திற்குள் காலடி எடுத்து வைத்தாலே, நம் உள்ளங்களில் ராஜா சாரின் பாடல்கள் தானாக ஒலிக்க ஆரம்பித்து விடும். அப்படி தான், இந்த களத்தூர் கிராமத்தின் கதையை நான் எழுத ஆரம்பித்த அடுத்த கணமே, ராஜா சாரின் இசை தான் எங்கள் கதைக்கு மிக சரியாக இருக்கும் என்பதை முடிவு செய்துவிட்டேன். கதையை முழுவதுமாக கேட்டு, அது பிடித்த பின்பு தான் இளையராஜா சார் எங்கள் படத்திற்கு இசையமைக்க சம்மதம் தெரிவித்தார். படத்தின் பிண்ணனி இசை மற்றும் இரண்டு பாடல்களை களத்தூர் கிராமம் படத்திற்காக உருவாக்கி இருக்கிறார் ராஜா சார். படத்தொகுப்பிற்கு முக்கியத்துவம் தருகின்ற கதையம்சத்தை கொண்டது எங்கள் களத்தூர் கிராமம் திரைப்படம். அந்த வகையில், தன்னுடைய முழு ஒத்துழைப்பையும் எங்களுக்கு அளித்து, அற்புதமான படத்தொகுப்பை ஆற்றி இருக்கும் எங்கள் படத்தொகுப்பாளர் சுரேஷ் உர்ஸ் சார் அவர்களுக்கு, எங்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம்.

போலீசாருக்கும், களத்தூர் கிராம மக்களுக்கும் இடையே நிலவும் பிரச்சனை தான் எங்கள் படத்தின் கதை கரு. படத்தின் கதாநாயகன் கிஷோர், இளைஞர் வேடம் மற்றும் முதியவர் வேடம் என இரண்டு வேடங்களில் நடித்து இருக்கிறார். 1980 ஆம் ஆண்டுகளில் நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகி இருக்கும் எங்கள் ‘களத்தூர் கிராமம்’ திரைப்படம் நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களின் உள்ளங்களையும் கவரும்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இயக்குநர் சரண் கே அத்வைதன்.