‘ஃபைண்டர்’ விமர்சனம்

வெட்டு, குத்து, ரத்தம், வன்முறையுடன் ரவுடி ,தாதா, பொறுக்கிகளின் கதைகள் தான் படமாகி வருகின்றன. அல்லது அரதப்பழசான காதல் கதை வரும்.இப்படிப்பட்ட செக்கு மாட்டு சிந்தனைகளின் நடுவே சற்று வித்தியாசமான கதைக்களத்துடன் வந்துள்ள படம் தான்’ ஃபைன்டர்’.

பீட்டர் குடும்பம் வறுமையில் தத்தளிக்கிறது. அவனது குடும்ப வறுமையைப் பயன்படுத்திக் கொள்கிறது ஒரு கும்பல்.செய்யாத குற்றத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறும் அதற்கு பண உதவி கிடைக்கும் என்றும் பீட்டரிடம் சொல்லப்படுகிறது. விரைவில் திரும்ப வந்து விடலாம் என்று கூறியதை நம்பி அவனும் சிறைக்குச் செல்கிறான்.சொன்ன சொல்லைக் காப்பாற்ற வில்லை. அவனை அம்போ என்று விட்டுவிடுகிறார்கள்.பெரிய பண உதவியும் செய்யவில்லை.இப்படி அவன் எட்டு ஆண்டுகள் சிறையில் இருக்கிறான்.பீட்டரின் மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

இப்படி நிரபராதிகள் தண்டனை அனுபவிப்பதைப் பற்றி ஆராய்ச்சி செய்து அவர்களுக்கு உதவுகிற ஃபைண்டர் என்கிற புலனாய்வுக் குழுவிடம் இந்த விவகாரம் செல்கிறது. பிறகு நடந்தது என்ன? வழக்கில் பீட்டர் சிக்கியது எப்படி? உண்மையில் கொலை செய்தவர்கள் யார்? காரணம் என்ன? என்றெல்லாம் ஆராயும் முயற்சியில் இறங்குகிறது வினோத் தலைமையிலான புலனாய்வுக் குழு.தேடலின் பாதையின் வழியே நடந்தவை எல்லாம் அதிர்ச்சிகரமான எதிர்பாராத சம்பவங்கள் என இருக்கின்றன.பீட்டரை வினோத்தால் சிறையிலிருந்து விடுவிக்க முடிந்ததா இல்லையா? என்பதே கதை செல்லும் பாதை.

பீட்டராக சார்லி நடித்துள்ளார்.அந்தப் பாத்திரம் அவரது அளவுக்கு ஏற்ற சட்டை. அப்பாவியான குடும்பத் தலைவனாக, சூழ்நிலைக் ‘கைதி’யாக ஏமாற்றத்தின், துரோகத்தின் மன அழுத்த வலியை தனது நடிப்பில் சரியாகக் காட்டியுள்ளார்.

படத்தை இயக்கியிருக்கிற வினோத் ராஜேந்திரன்,வினோத் என்கிற பாத்திரத்தில் பிரைவேட்  டிடெக்டிவாக வருகிறார். குற்றப் பின்னணியைக் கண்டறிவதில் அது சார்ந்த நடவடிக்கைகளில் அவரது நடிப்பு இயல்பாக வெளிப்பட்டுள்ளது.அவருக்கு துணையாக வரும் தாரணி தோற்றத்திலும் நடிப்பிலும் அழகு அளவு .

நிழல்கள் ரவி சீனியர் வழக்கறிஞராக நீதிமன்ற வாத விவாதங்களில் கம்பீரம் காட்டியுள்ளார்.
சென்றாயன் அந்த திருட்டு முழிக்கு ஏற்ற பாத்திரத்தில் வருகிறார்.சார்லியின் மகளாக பிரணா, வில்லனாக நாசர் என பிற பாத்திரங்களை ஏற்றிருப்போரின் பங்களிப்பு நிறைவு.

சூர்ய பிரசாத்தின் பின்னணி இசை மிதமான ரகம். பாபு ஆண்டனியின் ஒளிப்பதிவு காட்சிகளுக்குப் பலம் கூட்டி உள்ளது.

திருப்பங்கள், நடிப்புத் தருணங்கள், ஏற்ற ஒளிப்பதிவு இசை என்று இருந்தாலும் ஆங்காங்கே அர்த்தமுள்ள வசனங்களும் படத்திற்கு அழகு கூட்டி உள்ளன.படத்திற்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளதிலிருந்து படத்தின் மீதான நம்பகத்தன்மையும் கூடியுள்ளது.

முன்பின் காலத்தொடர்புகள் பற்றிய காட்சிகள் இருந்தாலும் குழப்பம் இல்லாமல் படத்தைத் தொகுத்துள்ளார்
படத்தொகுப்பாளர்தமிழ்க் குமரன்.

அடுத்தது என்ன அடுத்தது என்ன என்று எதிர்பார்க்கிற வைக்கிற படத்தின் பாதை, அந்தத் திருப்பங்கள் படத்திற்குப் பெரிய பலமாக அமைந்துள்ளது.
வெகுஜன திரை கலைஞர்கள் செல்லும் பாதையில் இருந்து விலகி தனித்துவம் உள்ள ஒரு இயக்குநராக மிளிர்ந்து முகம் காட்டுகிறார் இயக்குநர் வினோத் ராஜேந்திரன்.அவரது திறமைக்கு உயரங்கள் செல்வார்.

மொத்தத்தில் ஃபைண்டர், அனைவரையும் கவரும் ஒரு திரில்லர் படம்.