ஒரே குடும்பத்திலிருந்து, இணைந்து நடிக்கும் மூன்று தலைமுறை நடிகர்கள் !


ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த  நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும். தமிழ் சினிமாவின் மூத்த நடிகர் விஜயகுமார், அவரது மகன் அருண் விஜய் மற்றும் அவரது பேரன் ஆர்ணவ் விஜய் ஆகிய மூவரும் இணைந்து பிரபல நடிகர் சூர்யாவின்  2D Entertainment தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார்கள்.

இது குறித்து படத்தின் இயக்குநர் சரவ் சண்முகம்  கூறியதாவது…

“மிக சமீபத்தில் தான் அருண் விஜய் , ஆர்ணவ் விஜய்க்கு தந்தையாக நடிப்பது குறித்து பெருமையாக பகிர்ந்திருந்தேன் .இப்போது இதை சொன்னால் மிகவும் வழக்கமான ஒரு செய்தியாகிவிடக்கூடும். ஆனால் தமிழ் சினிமாவில் பல சாதனைகள் படைத்திருக்கும் மூத்த நடிகர் விஜய குமார் அவர்கள் எங்கள் படத்தில் இணைந்திருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதிலும் ஒரே குடும்பத்தில் இருந்து மூன்று தலைமுறை நடிகர்கள் எங்கள் படத்தில் மூலம் இணைவது பெரும் மகிழ்ச்சியாக உள்ளது. இப்படத்தில் பங்குபெற சம்மதித்ததற்கு, மூத்த நடிகர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அருண் விஜய் போன்று விஜய் குமார் அவர்களுக்கு கதை சொல்வது அத்தனை எளிதாக இல்லை. அவரது கதாப்பாத்திரம் குறித்தும் படத்தில் அதற்குரிய முக்கியத்துவம் குறித்தும் அவருக்கு விளக்கி கூறினேன். இது குடும்ப படம் என்பதாலும் உணர்வுபூர்வமான நிறைய சம்பவங்கள் அவரது கதாப்பத்திரத்தை சுற்றி நடப்பதாலும், படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். படம் மிக அழகாக உருவாகி வருகிறது.”

குழந்தைகளின் உலகை மையமாக வைத்து உருவாகும், இன்னும் தலைப்பிடப்படாத இப்படம் நடிகர் அருண் விஜய் அவர்களின் 32 வது படமாகும். இப்படம் முழுக்க ஊட்டியில் படமாக்கப்படுகிறது

சூர்யாவின் 2D Entertainment நிறுவனம் தயாரிக்கிறது. ராஜசேகர் கற்பூர சுந்தரபாண்டியன், RB Films யின் S.R.ரமேஷ் பாபு உடன் இணைந்து இணை தயாரிப்பு செய்கிறார். சரவ் சண்முகம் இப்படத்தை இயக்குகிறார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்ய நிவாஸ் K பிரசன்னா இசையமைக்கிறார். மேகா படத்தொகுப்பு செய்ய, தயாரிப்பு வடிவமைப்பை  மைக்கேல் செய்கிறார். உடை வடிவமைப்பை வினோதினி பாண்டியன் மேற்கொள்கிறார்.