‘கத்துக்குட்டி’ விமர்சனம்

kathukkutti2விவசாய விளை நிலங்கள் விலைபோகும் கொடுமைக்கு எதிரான படம்.

தஞ்சை மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வரும் பட்டதாரியான நரேன், தன்னுடைய நண்பர் சூரியுடன் இணைந்து குடித்துவிட்டு ஜாலியாக ஊர் சுற்றி வருகிறார். இப்படி பொறுப்பில்லாமல் இருந்தாலும், விவசாயிகள் மீதும் விவசாய நிலங்கள் மீதும் அதிக அக்கறையுடனும் இருந்து வருகிறார். மேலும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டு வருகிறார்.

இதேபோல், அதே ஊரில் வசிக்கும் சிருஷ்டி டாங்கே ,அவரது தந்தை இருவரும் விவசாய நிலங்களையும், விவசாய மக்களையும் காக்க வேண்டும் என்ற நோக்கில் இருக்கிறார்கள்.

நரேனின் அப்பா ஜெயராஜ், அரசியல் கட்சி ஒன்றில் முக்கிய பொறுப்பில் இருந்து வருகிறார். நாற்பது ஆண்டுகளாக கட்சியில் இருக்கும் இவருக்கு எம்.எல்.ஏ. சீட்டு கொடுக்காமல் இருக்கிறார்கள்.
ஜெயராஜுக்கு மகன் இருப்பதாகவும் அவருக்கு சீட் கொடுங்கள் என்றும்  சிலர் கேட்க ,கட்சி தலைமையும் கொடுக்க சம்மதிக்கிறது.

பொறுப்பில்லாமல் ஊர் சுற்றி வரும் நரேன், பொறுப்பாக மாறி இந்த தேர்தலில் ஜெயித்தாரா? ஊர் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

முதல் முறையாக கிராம பின்னணியில் நரேன், நடித்திருக்கிறார். கிராமத்து இளைஞனாக மனதில் பதிகிறார். கிராமத்து மீதும் விவசாயிகள் மீதும் அக்கறைக் கொண்ட இவரது நடிப்பு அருமை. நீண்ட இடைவேளைக்குப் பிறகு இவரது நடிப்புக்கு தீனி போடும் விதமாக இந்த படம் அமைந்திருக்கிறது.

எறும்புக்கு இரக்கப்பட்டுச் சீனி போடும்  கிராமத்து பெண்ணாக பாவாடை தாவணியில் ரசிகர்களை கவர்கிறார் சிருஷ்டி டாங்கே.  கொடுத்த கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்.

நாயகனுக்கு நண்பனாக ஜிஞ்சர் பாத்திரத்தில் நடித்திருக்கிறார் சூரி. இவருடைய காமெடி படத்திற்கு மிகவும் பெரும் பலமாக அமைந்திருக்கிறது. நாட்டில் குடிக்குச் சோரம் போகும் கொடுமைகளை சூரி, மற்றும் நண்பர்களை வைத்து சிரிக்கச் சிரிக்க சூடு கொடுத்துள்ளார் இயக்குநர்.

போகிறபோக்கில் அத்தனை சமூகப்பிரச்சினைகளையும் தொட்டுவிட்டு போயிருக்கிறார் இயக்குநர்.குறிப்பாக மீத்தேன் திட்டத்திற்கு எதிரான கருத்துக்கள் நெற்றியடி.

விவசாயிகளின் வலியும், வேதனையும் பிரதிபலிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டிருக்கிறது. இதை உணர்ந்து அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

அருள்தேவ் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். சந்தோஷ் ஸ்ரீராம்மின் ஒளிப்பதிவு படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. கிராமத்து அழகை நம் கண்முன் நிறுத்தியிருக்கிறார்.
தஞ்சை மண் சார்ந்த வாழ்க்கையை மக்கள் மொழியை அழகாகப் பதிவு செய்துள்ளார் இயக்குநர்.

பிரச்சார நெடி எதுவும் இல்லாமல் ஆவணத்தன்மை எட்டிப் பார்க்காதபடி கவனமாக கமர்ஷியல் படமாக எடுத்துள்ளார். அந்த ‘குடி’ப் பெருமை பேசும் பாட்டை மட்டும் தவிர்த்திருக்கலாம்.

சினிமா பொழுதுபோக்கு ஊடகமல்ல பழுதுநீக்கும் ஊடகம் என்று நிரூபிக்கும்படி படம் எடுத்து இருக்கிற இயக்குநர் இரா.சரவணனைப் பாராட்டலாம்.