பீட்ஸா’ என்கிற அந்நிய சுவையில் காறி உமிழும் ‘காக்கா முட்டை’

kakkamuttaலொயோலா கல்லூரியில் தமது முதுகலை ஊடகக்கலைகள் துறை தொடங்கி 10 ஆவது ஆண்டு ஆரம்பமாகும் வேளையில்- காக்கா முட்டை படக்குழுவுக்கு பாராட்டுவிழா எடுத்தனர்.

அவ்விழாவில்  வரவேற்புரையில் முனைவர் மா.ஞானபாரதி கூறியதாவது :

”இந்நிகழ்வுக்கு சிறப்பு சேர்க்கும் விதமாக-
இவ்வாண்டின் ஆகச்சிறந்த திரைப்படமாக-
உலகத் திரைப்படங்களுக்கு இணையாக வைத்துக் கொண்டாடப்படும்-
‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் பாராட்டு விழாவையும் இணைத்துக் கொண்டு
கொண்டாடுவதில் எமது துறை மிகவும் பெருமை கொள்கிறது.
பொதுவாகவே வெகுமக்களுக்கான திரைப்படத் தயாரிப்பில் தனிப்பாதை அமைத்து இயங்கும் தென்னிந்தியத் திரைச்சூழலில்- தமிழில் மாற்றுத் திரைப்படங்களுக்கான முயற்சிகளில் இறங்கி பெருமை கொண்ட பலரும்- சர்வதேச அளவிலும், தேசிய அளவிலும் புகழ்பெற்ற மாற்றுத் திரைப்படப் படைப்பாளிகளோடு இணைத்துப் பேசப்பட்டவர்களே தவிர-
தனித்துப் பேசப்பட்டவர்கள் இல்லை.
அவர்களின் படைப்புகளும் அப்படித்தான்.
‘காக்கா முட்டை’ திரைப்படமும் அப்படத்தின் இயக்குநர் மணிகண்டனும் இன்று உலக அரங்கில் தனித்து நிற்கிறார்கள்.
உலகமயமாக்கலின் உச்சகட்ட விளைவுகளில் ஒன்றாக மிகச்சில வாரங்களுக்கு முன்பாக இந்திய சந்தையிலிருந்து மேகி நூடுல்ஸ் திரும்பப்பெற்றுக்கொள்ளப்பட்ட நிகழ்வு நடந்த நாட்களில்தான்-
அந்நிகழ்வுக்கு சாட்சியாகவும் பொருத்தமாகவும் ‘காக்கா முட்டை’ வெளியாகி ‘பீட்ஸா’ என்னும் மற்றொரு அந்நிய சுவைமீது எச்சில் உமிழ்ந்திருக்கிறது.
’நூடுல்ஸ்’ ‘பீட்ஸா’ என்பதெல்லாம் இந்த நுகர்வு கலாச்சாரத்தின் குறியீட்டுப் பெயர்கள்தான்.
மற்றபடி இவ்வகை ‘பீட்ஸா’க்கள் ‘கார்’களாகவும், அடுக்குமாடிக் குடியிருப்புகளாகவும் வெவ்வேறு உருவங்களில் கனவுகளாக மாறி-

இந்தியாவில்- தமிழ் மண்ணில் வாழும்- ‘காக்கா முட்டைகள்’ போன்ற கோடானு கோடி விளிம்புநிலை மக்களை அலைக்கழித்துக்கொண்டிருக்கின்றன.நடிகர்களின் பெயர்கள் இருக்கட்டும்- படத்தில்கதாபாத்திரங்களின் பெயரே சூட்டப்படாத- இதோ நமக்கு எதிரில் அமர்ந்திருக்கும் இந்த நட்சத்திரங்கள்-இன்று நம் அத்தனை பேரின் உள்ளங்களையும் வென்றிருக்கிறார்கள்.இதற்கு முன் தமிழ்த் திரைச்சூழல் பார்த்திராத ஒன்று இது.

இந்த காக்கா முட்டைகளுக்கு அம்மாவாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா தமிழ்த்திரையுலகில் ஒரு நவீன கதாநாயாகியாக வலம் வருபவர்.

பாட்டி சாந்திமணியின் நடிகையாகும் கனவு அவருடைய எழுபதாண்டு வயதில் நிறைவேறியிருக்கிறது.
இன்னும் எழுத்தாளர் ஜோ மல்லூரியின் ரசம் மணக்கும் பழரச வேடம், சேரி இளைஞர்களின் பால்மாறும் பாத்திரங்கள் என- நம்மையும் நம் சூழலையும் பகடி செய்யும் பாத்திரங்களைக் கொண்ட இப்படம்-ஒரு அழுத்தமான கருத்தைப் பேசுகிறது. இந்திய, புராதன குடிமைச்சமூகத்துக்கு எதிரான- விளிம்புநிலை மக்களின்- வரைமுறைகளுக்குள் அடங்காத வாழ்வைப் பற்றிய கருத்து அது.

பொதுவாக கருத்தை சத்தமாகச் சொல்வதுதான் நமது நூற்றாண்டுகால தமிழ்த்திரைப்படங்களின் வழக்கம்.அந்த சத்தத்தின் காரணமாகவே அவ்வகைக் கருத்து சார்ந்த படங்கள் பெரும்பாலும் மக்கள் ஆதரவைப் பெற்றதில்லை.

ஆனால் ‘காக்கா முட்டை’

போகிறபோக்கில் பேச்சு வாக்கில் சத்தமில்லாமல் பல்வேறு கருத்துக்களை சொல்லிச் செல்கிறது.
அதனாலேயோ என்னவோ இப்படம் இத்தனை பெரிய மக்கள் ஆதரவையும் பெற்றிருக்கிறது.
இதற்கு முன் தமிழ்த் திரைச்சூழல் பார்த்திராத இன்னுமொன்று இது.தமிழின் பல்வேறு புகழ்பெற்ற நடிகர்கள், இயக்குநர்கள் பின்னாளில் தயாரிப்பாளர்களாகப் பரிணமித்திருக்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அனைவருமே ஒன்று தங்களையோ அல்லது தங்களைப் போன்றவர்களையோ வைத்து- அதற்கு முன் அவர்கள் என்னமாதிரி படைப்புகளைப் படைத்தார்களோ அதேவகையிலான படைப்புகளையே கொடுத்திருக்கிறார்கள்.

படைப்பு எல்லாம் அப்புறம்-  என்ன போட்டோம்- எவ்வளவு இலாபம் என்பதுதான் அவர்களுடைய தயாரிப்புகளின் நோக்கம்.ஆனால் இயக்குநர் வெற்றிமாறனும், நடிகர் தனுஷும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படம் ‘தமிழ்ச் சூழலின் எளிய மனிதர்களின் வாழ்வில் இயங்கும் முரண் இயக்கத்தை உலக அரங்கிற்குக் கொண்டு சென்று காட்சிப்படுத்தியிருக்கிறது.
இதற்குமுன் தமிழ்த் திரைச்சூழல் எப்போதுமே பார்த்திராத மூன்றாவது நிகழ்வு இது.

இப்படி தமிழ்த் திரைச்சூழல் பார்த்திராத பல்வேறு அம்சங்களை சாத்தியப்படுத்தியிருக்கும் ‘காக்கா முட்டை’ திரைப்படத்தின் கலைஞர்கள் – காக்கா முட்டைகள் ரமேஷ் மற்றும் விக்னேஷ், காக்கா முட்டைகளின் அம்மா ஐஸ்வர்யா அனைவரையும் இவ்வரங்கில் பங்கேற்க வைத்திருக்கும் மகிழ்ச்சியை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன் ”என்று நிகழ்ச்சி அறிமுகத்தில் முனைவர் மா.ஞானபாரதி பாராட்டிக்கூறினார்.