‘கோப்ரா ‘ விமர்சனம்

மூன்றாண்டுகளுக்குப் பிறகு விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள படம் ‘கோப்ரா’. இயக்குநர் அஜய் ஞானமுத்து ‘டிமான்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களுக்குப் பிறகு இயக்கியுள்ள மூன்றாவது படம். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ சார்பில் லலித்குமார் தயாரித்துள்ளார். ரெட் ஜெயண்ட் மூவிஸ் சார்பில் உதயநிதி வெளியிட்டுள்ளார்.

எப்போதும் நடிகர் விக்ரம் நடிக்கும் போது நடிப்பாற்றலை வெளிப்படுத்துவதோடு அல்லாமல் தனது தோற்ற மாற்றத்திற்கும் கடுமையாக உழைப்பவர். அப்படி இரண்டு வகையிலும்  அவர் பெரிய அளவில் சிரத்தை எடுத்து உழைத்துள்ள படம் என்கிற எதிர்பார்ப்புடன் வெளிவந்துள்ள ‘கோப்ரா ‘ படம் எப்படி உள்ளது?

கொலைகள் செய்யும் சர்வதேச கொலைகாரனுக்கும் அவனைத் தேடும் இன்டர்போல் அதிகாரிக்கும் நடக்கும் முட்டல் மோதல் யுத்தமே இந்த `கோப்ரா’.

சர்வதேச அளவில் இறங்கி மாட்டிக்கொள்ளாமல் கொலைகள் செய்கிறார் கணிதத்தில் குட்டி ராமானுஜனாக உள்ள கணக்கு வாத்தியார் விக்ரம் .
ஸ்காட்லாந்தில் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரைக் கொன்றதும், அந்த வழக்கைக் கையில் எடுக்கிறார் இன்டர்போல் அதிகாரியான இர்ஃபான் பதான். அதற்கும் இந்தியாவில் நடந்த ஒரு கொலைக்கும் ஒற்றுமை இருப்பதை அறிந்து இங்கே வந்து இறங்குகிறார். அவருக்கு உதவியாகக் கணிதம், கிரிமினாலாஜி என ஆராய்ச்சிப் படிப்பில் இருக்கும் மாணவி ஒருவரும் கைகொடுக்க, ‘கோப்ரா’ என அடைமொழி சூட்டப்பட்ட அந்த ஜீனியஸ் ‘மதியழகனை’ இவர்கள் நெருங்கினார்களா,இல்லையா என்பதே கதை.


விக்ரம் இதில் பல தோற்றங்களில் வருகிறார்.சில  வெறும் மாறுவேடமாகத் தெரிந்தாலும், தனது உடல்மொழி மூலம் அதை நம்ப வைக்கிறார். குறிப்பாக அந்த விசாரணைக் காட்சி, மற்றுமொரு ‘அந்நியன்’ பாணி நடிப்பு விருந்து.
 விக்ரமின் தனித்துவமான நடிப்பு அதற்கு வேறொரு பரிமாணத்தைக் கொடுத்திருக்கிறது.கதிர்வேலன், மதியழகன் என்கிற இரட்டையர் பாத்திரங்களில் விக்ரம் தனது மாறுபட்ட நடிப்பைக் காட்டிப் பாத்திர வித்தியாசத்தை உணர்த்துகிறார்.

ஶ்ரீநிதி ஷெட்டி, மீனாட்சி கோவிந்தராஜன், மிருணாளினி ரவி என மூன்று முக்கிய பெண் கதாபாத்திரங்கள். ஆனால், மீனாட்சி மற்றும் மிருணாளினியின் பாத்திரங்கள் கதையோடு ஒன்றிய அளவிற்கு ஶ்ரீநிதியின் பாத்திரம் ஒட்டவில்லை.
நாயகனுடன் ஒப்பிடும்போது வில்லன் ரோஷன் மேத்யூவுக்குக் குறைவான காட்சிகள்தான் என்றாலும் தான் வரும் காட்சிகளில் தூள் கிளப்புகிறார். சற்று மிகைநடிப்பு தெரிந்தாலும் அந்தப் பாத்திரத்துக்கான நியாயம் செய்திருக்கிறார். ஆனால், பார்க்கும் அனைவரையும் ஜாலியாக கொலைகள் செய்யும் அவர்,பாத்திரத்தில் உள்ளடக்கம் என்ன என்பது புரியவில்லை.
  கிரிக்கெட்டர் இர்ஃபான் பதான், இன்டர்போல் அதிகாரியாக வருகிறார் .கிரிக்கெட் வீரரா இவர் என நம்ப முடியவில்லை.ஒரு தேர்ந்த நடிகரைப் போல அனுபவம் உள்ள நடிப்பை வழங்கி உள்ளார்.நெல்லையப்பன் என்கிற பத்திரிகையாளராக கே.எஸ். ரவிக்குமார் நடித்துள்ளார். ஆனந்தராஜ், ரோபோ சங்கர், ஜான் விஜய் போன்றோரும் உண்டு.

இன்டர்வெல் ட்விஸ்ட் ஆச்சர்யம் என்றாலும், இரண்டாம் பாதியில் அந்த விசாரணை காட்சி தவிர்த்து நீண்ட நெடிய ஃப்ளாஷ்பேக் ஒன்றும் ஓடுகிறது.

 நிறைய ட்விஸ்ட்களை முடிச்சுகளாக ஆங்காங்கே வைத்துவிட்டு, எல்லாவற்றையும் ஒரே ஃப்ளாஷ்பேக்கில் ‘நான்-லீனியராக’ அவிழ்ப்பது படத்தின் தெளிவிற்கு பின்னடைவாக உள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஏற்கெனவே பிரபலமான ‘தும்பி துள்ளல்’, ‘அதிரா’பாடல்கள் ரசிக்க வைக்கின்றன.
பின்னணி இசையில்  இசைப்புயலின் ராஜ்ஜியம்தான்.
ஹரீஷ் கண்ணனின் ஒளிப்பதிவு பனிப்பிரதேசங்களின் அழகையும், மழை சண்டைக் காட்சியில் அதன் பதைபதைப்பையும் அதற்குரிய அழகியலுடன் காட்சிப்படுத்தியிருக்கிறது.ஒளிப்பதிவாளரின் அபாரமான உழைப்பு காட்சிகளில் தெரிகிறது. படத்தின் நீளத்தைச் சற்று மட்டுப்படுத்தியிருந்தால் படத்தின் வீரியம் மேலும் கூடி இருக்கும்.

ஒரு நடிகராக தனது உழைப்பைக் காட்டிய இடத்தில் விக்ரம் மேலும் சில படிகள் ஏறியுள்ளார் என்பதில் சந்தேகமே இல்லை.

விக்ரம் தோற்றம் மாற்றத்திற்காகவும் நடிப்புக்காகவும்
மட்டுமே இந்தப் படத்தைப் பார்க்கலாம்.