சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் : ராஜேஷ்குமார்

rajeshkumar3க்ரைம் கதை மன்னன் எழுத்தாளர் ராஜேஷ்குமார் ,சுமார் 1500 நாவல்கள் எழுதியவர் இப்போது தான் திரையுலகிற்கு வந்துள்ளார்.

இப்போது ஐந்து படங்களில் பணிபுரிந்து வருகிறார்.
அவருடன் ஒரு சந்திப்பு!

உங்களுடைய அனுபவத்துக்கு  சினிமாவுக்குத் தாமதமாக வந்திருப்பதாக உணரவில்லையா?

எழுத்தாளர்களின் உலகம் வேறு. ஓர் எழுத்தாளர் திரையுலகில் நுழைந்தால்தான், பணி புரிந்தால்தான் அவனது பணி முழுமையடைகிறது என்று நினைக்கக் கூடாது.எழுத்தாளன் என்பவன் எழுதிக் கொண்டே இருக்கும் வரை உயிருடன் இருக்கிறான். ஊக்கத்துடன் இருக்கிறான். அந்த வகையில் நான் எழுதத் தொடங்கியதிலிருந்து இன்றுவரை தொடர்ந்து எழுதிக் கொண்டு இருக்கிறேன் ; தொடர்ந்து இயங்கிக் கொண்டு இருக்கிறேன்.  நான் கோவையில் இருக்கிறேன். எனவே முன்பெல்லாம் சினிமா பற்றிய ஆர்வம் இருந்தது.ஆனால் புரிதல் இல்லாமல் இருந்தது. இப்போதுதான் நண்பர்கள் கிடைத்துள்ளனர். தெரிந்தவர் புரிந்தவர் படங்களுக்கு மட்டுமே பணி புரிகிறேன்.

இப்போது பல எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வந்துள்ளது. பற்றி..?

இப்போது  எஸ்.ராமகிருஷ்ணன் ,சுபா, ஜெயமோகன், பட்டுக்கோட்டை பிரபாகர் போன்ற எழுத்தாளர் நண்பர்கள் வந்திருக்கிறார்கள்.  அதில் எனக்கு சந்தோஷம்தான். அவர்கள் எல்லாம் எனக்கு முன்னோடிகள். அவர்கள் எல்லாருமே சென்னையில் இருக்கிறார்கள். அது அவர்களுக்கு சாதகமாக வசதியாக சௌகரியமாக இருக்கிறது. நான் கோவையில் இருக்கிறேன். என்னால் சென்னையில் தங்க முடியாது. கோவையிலேயே செட்டிலாகி விட்டேன். கோவை, நிரந்தர எழுத்துப் பணி இதையெல்லாம் சினிமாவை நம்பி விட்டு விடமுடியாது. பல ஆண்டு காலமாக உழைத்து
படிப்படியாக முன்னேறி எனக்குக் கிடைத்துள்ள பெயரையும் வாசகர் உலகத்தையும் ஒதுக்கியோ தள்ளிவைத்தோவிட்டு என்னால் சென்னைக்கு வரமுடியாது.என் தேவை இருப்பவர்கள் கோவை வரட்டும் என்று நினைக்கிறேன்.
அப்படி கோவை வந்து சந்தித்துதான் சில படங்கள் எல்லாம் போய்க் கொண்டு இருக்கின்றன.

சினிமாவில் எழுத்தாளர்களுக்கு மரியாதை இருக்கிறதா?

சிலர் மதிக்கிறார்கள். எழுத்தாளர்களின் படைப்புகளை வாசித்தவர்கள் பலரும் மதிக்கிறார்கள்.ஆனால்  பலரும் எழுத்தாளர்களையும் கதை சொல்லிகளையும் ஒன்றாகப் பார்க்கிறார்கள் இருவரையும் ஒரே தராசில் தட்டில் வைத்துப் பார்க்கிறார்கள். எழுத்தாளர்கள் என்பவர்கள் சிறுகதை, நாவல், தொடர்கதை, கட்டுரை  என்று எழுதி வாசகர்களிடம் பிரபலமாகி தனக்கென ஓரிடத்தை சிரமப்பட்டு உருவாக்கிவைத்து இருப்பவர்கள் .சுஜாதா, லட்சுமி, இந்துமதி, நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்கள் எல்லாம் அப்படிப்பட்ட எழுத்தாளர்கள்.கதை சொல்லிகள் படித்தது, கேட்டது, படங்களில் பார்த்தது எல்லாமும் கலந்து மசாலாவாக்கி ஒரு படத்தின் கதையாகச் சொல்பவர்கள். அவர்கள் எழுத்தாளர்கள் அல்ல. ஒரு சிறுகதை கூட எழுதியிருக்க மாட்டார்கள். எழுதத் தெரியாது அப்படிப்பட்ட வர்களையும் எங்களையும் ஒரே தராசு தட்டில் வைத்துப்பார்ப்பதுதான் எனக்குப் புரியாதது மட்டுமல்ல வருத்தமானது கூட .

ஆனாலும் சினிமாவில் எழுத்தாளர்களை மதிக்கும் காலம் வரும் என்று நம்புகிறேன்.

ஹாலிவுட்டில் எல்லாம் கதாசிரியர்கள் தனியாக இருக்கிறார்களே?

அங்கு எல்லாவற்றுக்கும் படித்து அதற்கான முறையான கல்வித் தகுதியுடன்தான் வருகிறார்கள். அங்கு கதை. திரைக்கதை எழுதுவதற்கும் பயிற்சிகள் படிப்புகள் உண்டு.

அங்கு பத்திரிகைகளில் பிரசுரமானவை நூல் வடிவில் வந்தவை பலவும் படமாக எடுக்கப் படுகின்றன. எத்தனையோ நாவல்கள் ,காமிக்ஸ் புத்தகங்கள் சினிமாக்களாக உருவாகியுள்ளன.

தான் வந்தபிறகுதான் எழுத்தாளர்கள் காணாமல் போய் விட்டராக பாக்யராஜ் கூறிவுள்ளாரே?

அவருக்கு கதை எழுதவும் தெரியும். திரைக்கதை எழுதவும் இயக்கவும் தெரியும் ஆனால் அவருக்குப் பின்னால் வந்தவர்கள் எழுதத் தெரியாதவர்களும் கதை திரைக்கதை வசனம் இயக்கம் என்று ஒரே நபரே போட ஆரம்பித்து விட்டார்கள். ஹாலிவுட்டில் என்றால் இது பலர் செய்யும் பணி.

‘சண்டமாருதம்’ பட அனுபவம் எப்படி இருந்தது?

‘சண்டமாருதம்’ எனக்கு நல்ல அனுபவம்தான். நாயகன் சரந்குமாரும் இயக்குநர் ஏ.வெங்கடேஷும் எனக்கு சுதந்திரமும் கொடுத்தார்கள். ஊக்கமும் கொடுத்தார்கள். மரியாதையும் கொடுத்தார்கள்.கதை எழுதுவது வேறு திரைக்கதை எழுதுவது வேறு .இரண்டுக்குமான வேறுபாட்டைப் புரிந்து கொண்டேன். திரைக்கதை எழுதுவதன் ரகசியம் சூட்சுமம் பிடிபட்டு விட்டது. ‘சண்டமாருதம்’ வெற்றிப்படமானது மகிழ்ச்சி. அந்த வகையில் எனக்கு நல்ல நுழைவாயில் போல அமைந்துள்ளது.


திரையுலகில் யார் உங்களுக்கு நண்பர்கள்?

சில படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு சென்னைக்கு வந்திருக்கிறேன். இயக்குநர் பாக்யராஜைச் சந்தித்து இருக்கிறேன். என் வீட்டுத் திருமணத்துக்கும் வந்திருக்கிறார் அப்போது நீங்கள் ஏன் கோவையில் இருக்கீறீர்கள்? சென்னை வந்து விடுங்கள் என்று கூறினார். அழைத்தார்.இங்கிருந்தால் ஒன்றும் செய்ய முடியாது சென்னை வாங்க என்றார்.

ஒரு முறை சிவகுமாரை கோவை ரயில்நிலையத்தில் பார்த்தேன். நம்முடன் பேசுவாரா பழக்கமில்லையே என்று நினைத்தேன். அவரோ ராஜேஷ்குமார் என்று அழைத்துப் பேசினார். சகஜமாகப் பேசினார் நீங்கள் சினிமாவுக்கு வரவேண்டும் என்றார்.

சத்யராஜ் நான் படித்த கோவை அரசுகலைக் கல்லூரியில்தான் படித்தார் நான் பி. எஸ்ஸி படித்தேன். அவர் பி.ஏ. படித்தார் உயரமான அவர், பைக்கில் கம்பீரமாக வருவார். அப்போது முதல் தெரியும் ,ஆனால் பழக்கமில்லை .

பார்த்திபன் என்னிடம் சினிமாவுக்கு ஏற்ற மாதிரி கதை இருந்தால் கொடுக்கும்படிக் கேட்டார். கொடுத்துள்ளேன்.

சென்னைக்கு வருவது பற்றி எனக்கும் தாமதமாகவே புரிந்தது எழுத்துப்பணி அதிகமாக இருந்ததால் அதைப்பற்றி நினைக்கவே இல்லை.

இப்போது   சினிமாவில் பணிபுரிபவை ,எழுதுபவை?

இப்போது ஐந்து திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி வருகிறேன். நியூட்ரினோ பிரச்சினையை மையமாக்கி உருவாகிவரும் ‘2000 சதுரஅடி சொர்க்கம்’ என்கிற படம், ஈரம்’ ,’வல்லினம்’ படங்களின் இயக்குநர் அறிவழகன் இயக்கும் புதிய படம், செம்மரக் கடத்தல் கொலைகளை மையப்படுத்தி உருவாகும் ‘தூக்குமரப் பூக்கள்’, ‘கதம்கதம்’ இயக்கி தயாரித்த பாபு தூயவனின் புதியபடம்,  ‘வெல்வெட் குற்றங்கள்’ நாவலின் கதை அடிப்படையிலான பிரபுதேவா இயக்கவுள்ள  படம் என ஐந்து படங்களுக்கு கதை திரைக்கதை வசனம் எழுதுகிறேன்.

ஒரு வகையில் கதை எழுதுவதைவிட திரைக்கதை எழுதுவது எளிதுதான்  ‘சண்ட மாருதம்’ படத்தில் இயக்குநர் ஏ.வெங்கடேஷிடம் இணைந்து  பணிபுரிந்ததில் திரைக்கதை எழுதுவது எனக்கு பிடிபட்டு விட்டது.

இனி உங்களை சினிமாவில் அதிகம் பார்க்கலாமா?

உங்கள் நாவலைப் படித்தால் சினிமாபார்ப்பது போல இருக்கிறது என்பார்கள்.

நிறைய நல்ல கதைகள் இருக்கின்றன. எவ்வளவோ பரபரப்பான விஞ்ஞான கதைகளும் இருக்கின்றன.  ஆனால் அதை எல்லாம் விட்டுவிட்டு அரைத்த மாவையே அரைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

நிறைய பேர்  கோவை வந்து என்னை வந்து சந்திக்கிறார்கள். பிரபல இயக்குநர்களிடம் உதவியாளனாக இருந்தேன் என்கிறார்கள். ஆனால் தயாரிப்பாளர் யார் ?அவர் படம் எடுத்து முடிப்பாரா என்று என்னால் கணிக்க முடியவில்லை. இந்த விஷயத்தில் எனக்கு அனுபவம் போதாது.

ஹாலிவுட்டில் ஜேம்ஸ்பாண்ட், ஹாரிபாட்டர், படங்கள் எல்லாம் நாவல்களிலிருந்து உருவானவைதான். இங்கு 10 படங்களில் 9 கதைகள் ஒரே மாதிரி இருக்கின்றன. ரசிகர்களை ஏமாற்றி வருகிறார்கள். கதை விவாதங்களில் அரதப்பழசான செண்டிமெண்ட் காட்சிகளையே  கூறுவார்கள். இவை பழசு என்றால் இது மாதிரி செண்டிமெண்ட் காட்சி எத்தனை முறை வந்தாலும் பார்ப்பார்கள். ரசிப்பார்கள் என்பார்கள் இப்படி க்கூறி ரசிகர்களை ஏமாற்றுகிறார்கள்.

இப்போது பத்திரிகைகளில் எழுதி வருபவை?

சூரியகதிரில்  ‘என்னை நான் சந்தித்தேன்.’ என்கிற என் சுயசரிதை வருகிறது. ராஜகோபால் என்கிற நான் எப்படி ராஜேஷ்குமார் ஆனேன் என்கிற வாழ்க்கைக் கதை அது.தினமலர் வாரமலரில் ‘தேவை ஒரு தேவதை’ தொடர் வருகிறது. அவள் விகடனில் ‘நள்ளிரவு வானவில்’ தொடர் வருகிறது.

திரையுலகின் கசப்பான அனுபவங்களைத் தொடராக எழுதியுள்ளீர்களே.?

நான் ஏமாந்த அனுபவங்களைத்தான் எழுதியுள்ளேன். யார் பெயரையும் குறிப்பிட வில்லை. அதில் நான் யாரையும் திட்டவில்லைஅது அவர்களுக்குப் புரியும். அவை எனக்கும் பாடமாக அமைந்தவை.
நான் யாரையும் திட்டவில்லை நான் ஏமாந்த அனுபவங்களைத்தான் சொல்லியிருக்கிறேன். ’24 கேரட் துரோகம்’ தொடரைப் பற்றி  ஏகப்பட்ட விமர்சனங்கள் வருகின்றன. நான் அது பற்றி கவலைப்படவில்லை.

உண்மையைச் சொல்கிறேன். எனக்கென்ன பயம்.? யாரையும் குறை சொல்லவில்லை.

இன்றைய திரையுலகப் போக்கு பற்றி..?

எந்தத்துறையிலும் இப்படி இருக்க மாட்டார்கள். தங்கள் துறையைப் பற்றி தவறாகப் பேச மாட்டார்கள். சினிமாவில் மட்டும்தான் தவறாகப் பேசுகிறார்கள். இது தவறான போக்கு. ஒரு படம் ஓடவில்லை என்றால் ஒடலையாமே மொக்கையாமே ஊத்திக்கிட்டதாமே என்று சுலபமாக பேசுவார்கள். ஓடினால் பாராட்ட மாட்டார்கள்.

சந்திப்பு:ஆதித்யன்