சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி!

tr44இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைவரும்,  இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அரசியல், சினிமா, தியேட்டர் ஸ்டிரைக் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பற்றி தனக்கே உரி்ததான பாணியில் பேசினார்.

அப்போது அவர் பேசும்போது, “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் துரோகம் இழைத்ததால்தான் முந்தைய மத்திய அரசான காங்கிரஸ் அரசை நான் எதிர்த்தேன். அப்படிப்பட்ட காங்கிரஸ் கட்சியை மட்டுமல்ல அக்கட்சியுடன் கூட்டணி வைத்ததற்காக தி.மு.க.வையும் எதிர்த்தேன். நாடாளுமன்றத் தேர்தலில் அவர்களை  எதிர்த்துப் பிரச்சாரம் செய்தேன்.

காங்கிரஸ் ஆட்சி போலிருக்காது என்று நினைத்துதான் பாரதீய ஜனதாவை ஆதரித்தேன். ஆனால் பிரதமர் மோடி என்னை மிகவும் ஏமாற்றி விட்டார். பண மதிப்பு  இழப்பு வந்தபோதுகூட அதிலுள்ள குறைகளை விட்டுவிட்டு நிறைகளைக் கூறினேன். ஆனால் இப்போது இந்திய நாடு மிகவும் மோசமான நிலைமைக்கு வந்துள்ளது.

நாட்டில் யார், யாரோ எவ்வளவோ துறையில் ஆராய்ச்சி செய்து பி.எச்.டி., பட்டம் வாங்கியிருப்பார்கள். ஆனால் மக்கள் தலையில் எப்படி வரி விதிப்பது என்று ஆராய்ச்சி செய்து நமது பிரதமர்  மோடி பி.எச்.டி. வாங்கி விட்டார். இந்த ஜி.எஸ்.டி வரி மக்களைப் பாதிக்கும்; சினிமாவைச் சீரழிக்கும்.

மத்திய அரசே…

வடக்கை வாழ வைக்கவும் தெற்கைத் தீர்த்துக் கட்டவும் நினைக்காதே.

சினிமாவுக்கு வரி விதித்து பிராந்திய மொழிப் படங்களை ஒடுக்க நினைக்காதே.

தென்னகத்தை நசுக்காதே.

திரை உலகத்தைப் பொசுக்காதே.

நூறு ரூபாய் தாண்டினால் மத்திய அரசு 28 சதவிகிதம் வரி விதிக்குமாம். மாநில அரசு கேளிக்கை வரி 30 சதவிகிதம் விதிக்குமாம். இதர வரிகள் சேர்த்தால் 64 சதவிகிதம் அரசுக்கே கட்டிவிட்டால் மீதி இருப்பது என்ன…?

இந்தக் கொடுமையை எதிர்த்து திரையுலகம் தாமதமாகவே குரல் கொடுப்பது ஏன்..?
ஆனால் நான்  முன்பே  இயக்குநர் பேரரசுவின் நூல் வெளியீட்டு விழாவில் எதிர்த்துப் பேசினேன். முதலில் துணிவாக கமல்ஹாசன் குரல் கொடுத்தார். அவருக்கும், எனக்கும்  நிறைய முரண்பாடுகள் இருக்கலாம், ஆனாலும், அவரது துணிவைப் பாராட்டுகிறேன்.

ஆனால் ரஜினி இந்த நேரத்தில் மெளனம் சாதிப்பது ஏன்..? தயாரிப்பாளர் சங்கப் பொறுப்பிலிருந்த டி.சிவா சொன்னார், ரஜினி மோடிக்கு நெருக்கம்.. ஏதாவது செய்து விடுவார் என்று. ஆனால் ரஜினி எதுவுமே செய்யவில்லை. வாயே திறக்கவில்லை. தன்னை வாழ வைத்த தாய் சினிமா என்கிறார் ரஜினி. தன்னைப் பெற்று வாழ வைத்த சினிமாவையே காப்பாற்ற முன் வராத ரஜினியா தமிழகத்தைக் காப்பாற்றப் போகிறார்..?” என்று கேள்வியுடன் முடித்தார் டி.ராஜேந்தர்.