‘ஜிப்ஸி’ விமர்சனம்

 மத அரசியல் என்ற மாயைக்குள் சிக்காமல், மனிதத்துடன் வாழ வேண்டும், என்பதைச்சொல்லும் படம்தான்  ‘ஜிப்ஸி’ .

குழந்தையிலேயே அப்பா, அம்மாவை இழக்கும் ஜீவாவை, நாடோடி ஒருவர் எடுத்து வளர்க்கிறார். அவருடன் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தேசாந்திரியாகத் திரியும்  ஜீவா, நடனம் ஆடும் குதிரையை வைத்து பிழைத்து வருகிறார்.    பிழைப்புக்காக தமிழகத்திற்கு வரும் ஜீவாவுக்கு, முஸ்லீம் பெண்ணான நாயகி நடாஷா சிங் மீது  காதல் வருகிறது. அவருக்கும் ஜீவா மீது   ஈர்ப்பு ஏற்படுகிறது. இதற்கிடையே, நடாஷாவுக்கு திருமண ஏற்பாடு நடக்க, அவர் ஜீவாவுடன் சென்றுவிடுகிறார். இருவரும் வட இந்தியாவின் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் நிலையில், அங்கு முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடைபெறும் கலவரத்தில் சிக்கிப் பிரிந்துவிடுகிறார்கள். ஜீவா சிறைக்கு செல்கிறார். நடாஷா நிறைமாத கர்ப்பிணியாக கலவர பூமியில் நடந்த கொடூர சம்பவங்களை நேரில் பார்த்த அதிர்ச்சியோடு மாயமாகிறார்., இறுதியில் ஜீவாவும், நடாஷாவும் சேர்ந்தார்களா இல்லையா, என்பதே க்ளைமாக்ஸ்.

இந்தியாவில் மதத்தை வைத்து நடத்தப்படும் வன்முறைகளை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியிருக்கும் ராஜு முருகன், பாமர மக்களுக்கும் புரியும்படி  சொல்லியிருக்கிறார்.

ஜிப்ஸி என்ற நாடோடியின் வேடத்திற்கு ஜீவா கச்சிதமாக பொருந்துகிறார். ஆங்கிலம் கலந்த அவருடைய பேச்சும், குதிரையுடன் அவர் ஆடும் நடனும் ரசிக்க வைக்கிறது. காதலுக்காக ஏங்குபவர் அதை வெளிக்காட்டாமல் இருப்பதும், கலவரத்தில் தனது குதிரையை தீயிட்டுக் கொளுத்தும் போது பதறும் போதும், நடிப்பில் அசத்துகிறார்.

நாயகி நடஷா சிங் அதிகம் பேசாமல் நடித்தாலும், அவரது கண்கள் அனைத்தையும் பேசி விடுகின்றன. கலவர பூமியில் ஆயுதங்களுடன் தன்னைச் சுற்றி நிற்பவர்களிடம், அவர் கையெடுத்து கும்பிடும் போது, அவரது கண்களில் தேங்கும் கண்ணீர், நமது நெஞ்சை பதற வைக்கிறது.

மதத்தின் மீது ஈடுபாட்டுடன் இருக்கும் நாயகியின் தந்தை வேடத்தில் நடித்திருக்கும் லால் ஜோஸ், மூலம் மதத்தை விட மனிதம் தான் உயர்ந்தது, என்பதை இயக்குநர் புரிய வைத்திருக்கிறார்.

மதத்தால் மக்களை முட்டாளாக்கி அப்பாவி மக்களைக் கொன்று குவித்து அரசியல் செய்யும் மத அரசியல்வாதிகள், அதே இந்துக்களை சாதியை காரணம் காட்டி எப்படி புறக்கணிக்கிறார்கள், என்பதை சோனு குமாரின் கதாப்பாத்திரம் அழுத்தமாக பதிவு செய்கிறது. ”இந்து என்று சொல்லி தான், முஸ்லீம்களை கொல்லச் சொன்னார்கள், ஆனால், நான் கோவிலுக்குள் நுழைந்த போது தீட்டுப்பட்டுவிடும், என்று சொல்லி எனது கைகளை வெட்டி விட்டார்கள்” என்று சோனு குமார் பேசும் வசனம், மதத்தின் பெயரால் முட்டாளாக்கப்படுபவர்களுக்கு ஒரு பாடம்.

சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்கள் சுமார்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் எஸ்.கே, இந்தியாவின் அழகோடு, இந்தியாவின் அவலங்களையும் கச்சிதமாக படமாக்கியிருக்கிறார். படத்தின் முதல் பாதியில் சில சவசவ காட்சிகளுக்கு  கத்திரி போட்டிருக்கலாம்.

 இயக்குநர் ராஜுமுருகன் கருத்து செல்பவராகவே படம் முழுக்க எட்டிப் பார்க்கிறார். குக்கூ,  ஜோக்கர் படங்களை தொடர்ந்து இப்படத்திலும் அவர் சித்தாந்தவாதி ஆகவே பாத்திரங்களில் வெளிப்படுகிறார்.
  கதாநாயகன் பயணம் கதாநாயகி சந்திப்பு, பிரிவு, சேரத் துடிப்பது என்பவை  இந்தப் படத்து இயக்குநர் ராஜுமுருகனின்  சகோதரர் சரவணன் இயக்கிய மெகந்தி சர்க்கஸில் உள்ள அதே நிறம், தொனி இதிலும்  இருப்பது ஒரு குறையாக இருக்கிறது. அதே வண்ணங்களும் பயணங்களும் காட்சிகளும் நிறைய தொடர்பு கொண்டிருப்பது ஒரு பலவீனம்.  


சமூகத்திற்கான கருத்துள்ள படத்தை கொடுக்க நினைத்திருக்கும் இயக்குநர் ராஜு முருகன், சென்சாரின் தீவிரமான எடிட்டிகின் மூலம், தான் சொல்ல வந்ததை முழுமையாக சொல்ல முடியாமல் தவித்திருப்பது படத்தின் பல இடங்களில் தெரிகிறது.

எல்லாமும் கடந்து மனிதத்தை தாண்டி புனிதம் இல்லை, என்பதை மக்களுக்குப் புரிய வைத்திருக்கும் இயக்குநரைப் பாராட்டலாம்.