’டான்’ விமர்சனம்

பெற்றோர் தங்கள் கனவைப் பிள்ளைகள் மீது திணிப்பது சகஜம்.அப்பா சமுத்திரகனி தன் மகனை என்ஜினியர் ஆக்க ஆசைப்படுகிறார். ஆனால், மகன் சிவகார்த்திகேயனுக்கு அதில் துளிக்கூட விருப்பம் இல்லை. மகனை என்ஜினியரிங் கல்லூரியில் கட்டாயப்படுத்திக் கொண்டுபோய் சேர்க்க, அங்கே படிக்காமல் மாணவர்கள் மத்தியில் ‘டான்’ ஆகிறார். கல்லூரியின் நன்னடத்தைக் கட்டுப்பாட்டுக் கமிட்டியின் தலைவராக இருக்கும் எஸ்.ஜே சூர்யாவுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் பனிப்போர் ஏற்படுகிறது. இதனால், சிவகார்த்திகேயன் என்ன மாதிரியான பிரச்சினைகளைச் சந்திக்கிறார், என்ஜினியராகி அப்பா சமுத்திரக்கனியின் கனவை நனவாக்கினாரா என்பதுதான் ’டான்’படத்து மீதிக்கதை.

முதல் பாதி காமெடி இரண்டாம் பாதி செண்டிமெண்ட் இதற்கு நடுவே சிவா,எஸ்.ஜே.சூர்யா இடையே நடக்கும் நீயா நானா மோதல் காதல், அப்பா மகன் செண்டிமெண்ட் என அனைத்தையும் சேர்த்து சுவாரஸ்யமான திரைக்கதையோடு முழுமையான பொழுதுபோக்கு படமாக கொடுக்க முயற்சித்திருக்கும் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி அதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

காதல், காமெடி, நடனம், ஸ்டண்ட் , சென்டிமெண்ட் என மீண்டும் ஜாலிப்பட்டாசாக வெடித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். பள்ளிச் காலத்தில் பிரியங்கா பின்னால் சுற்றுவது, கல்லூரியில் சேட்டைகள் என நம் பள்ளிக் கல்லூரி வாழ்க்கையை ஒருமுறை திரும்பிப் பார்க்க வைக்கிறார். அழகாக இருக்கிறார் பிரியங்கா மோகன்.

பேராசிரியராக எஸ்.ஜே சூர்யா நடிப்பில் வெளுத்து வாங்குகிறார். சமுத்திரக்கனியும் நடிப்பில் மிளிர்கிறார். ’என்னை ஒரு ஆசிரியர் மன்னிக்கலைன்னா இந்த இடத்துக்கு வந்திருக்க முடியாது’ என்று சிவகார்த்திகேயனிடம் பேசும் காட்சிகளில் நடிப்பில் ஆழப் பதிந்து விடுகிறார் எஸ்.ஜே. சூர்யா. பால சரவணன் தவிர விஜே விஜய், சிவாங்கி, ராமதாஸ் என துணைக் கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் பெரிதாக ஈர்க்கவில்லை.

இயக்குநர் சிபி சக்கரவர்த்திக்கு இது முதல் படம். காதல், காமெடி காட்சிகள் மட்டுமல்ல மாணவர்கள் ஆசிரியர்களை எப்படியெல்லாம் தொல்லை தாமுடியும் என்று காட்சிகளில் கொஞ்சம் ரசிக்க வைத்துள்ளார்.

படத்தில் பின்னணி இசையும் பாடல்களும்தான் திரைக்கதையை கொஞ்சம் துள்ளளோடு நகர்த்துகின்றன. சண்டைக்காட்சிகள் எல்லாமே ரசிக்க வைக்கின்றன.

படம் முழுக்க கல்லூரிக்குள்ளேயே எடுக்கப்பட்டிருப்பது கொஞ்சம் கண்களைச் சோர்வடைய வைக்கிறது.
ஒழுக்கம்தான் முதலில், படிப்பு அப்புறம்தான் என்று ஒரு பேராசிரியர் சொல்வதில் என்ன தவறு? அவரை ஏன் வில்லனாகக் காட்டவேண்டும்?

இறுதிக் காட்சிகளில் சென்டிமெண்ட் இருக்கவேண்டும் என்று திணிக்கப்பட்டதுபோல் உள்ளன காட்சிகள்.

கதை சொல்ல வரும் கருத்துகளுக்காகப் படத்தைப் பார்க்கலாம்.