‘தக்ஸ் ‘விமர்சனம்

ஒரு பிரபலமான நடன இயக்குநராக முத்திரை பதித்து வந்த பிருந்தா தனது
‘ஏ சினாமிகா’ என்ற
முதல் படத்திலேயே இயக்குநராக அறிமுகமாகி வெற்றிபெற்றார். தனது இரண்டாவது படைப்பாக குமரி மாவட்டத்தின் தக்ஸ் என்ற பன்மொழித் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.  

ஹிருது ஹாரூன், பாபி சிம்ஹா, ஆர்கே சுரேஷ், அனஸ்வர ராஜன், சரத் ​​அப்பானி, பி.எல்.தேனப்பன் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.  சாம் சி.எஸ் இசை,பிரவீன் ஆண்டனி எடிட்டிங் எனப் பணியாற்றி உள்ளனர்.

படத்தின் கதை என்ன?

சிறைப் பின்னணியிலான கதை என்றாலே பரபரப்புக்குப் பஞ்சம் இருக்காது. இதுவும் அப்படிப்பட்ட வகை கதை தான்.குமரி மாவட்டத்தில் 2005ஆம் ஆண்டு நடக்கும் கதையாக தக்ஸ் படம் உருவாகியுள்ளது. நாயகன் ஹிருது ஹாரூன் ஒரு கொலை , கொள்ளை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதி. சிறையில் அடைக்கப்படுகிற அவர் அங்குள்ள சிறைவாசிகளுடன் சேர்ந்து சிறையில் இருந்து தப்பிக்க முயல்கிறார். இறுதியில் திட்டமிட்டபடி தப்பித்தார்களா அல்லது மாட்டிக் கொண்டார்களா என்பதே தக்ஸ் படத்தின் கதை. 

பூவுக்குள் ஒரு பூகம்பம் போல ஒரு பெண் இயக்குநர்தான் இந்தப் படத்தை இயக்கினாரா என்று சொல்லும் அளவிற்கு பிருந்தா மாஸ்டர் இந்தப் படத்தை இயக்கி உள்ளார்.

படம் ஆரம்பித்தது முதல் முடியும் வரை பாபர த்ரில்லர் கதையாகச் செல்கிறது.  முற்றிலும் வித்தியாசமான திரைக்கதை அமைத்துச் சிறப்பாக இயக்கியுள்ளார் பிருந்தா மாஸ்டர்.  

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்ற விறுவிறுப்பு பார்ப்பவர்களுக்கு ஏற்படுகிறது.  ஹிருது ஹாரூன் ஒரு இளம் வயது வாலிபனாகக் பொறி பறக்கும் கண்களுடன், ஆக்சன் காட்சிகளில் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக ஆட்டோவில் ஒருவரைத் துரத்தி அடிக்கும் காட்சியில் கைதட்டல்களை அள்ளுகிறார். போலீஸ் அதிகாரியாக ஆர்கே சுரேஷ் வழக்கம் போல அசத்தியுள்ளார். ஒரு சிறை அதிகாரியாகவே வாழ்ந்துள்ளார்.

மறுபுறம் பாபி சிம்ஹா, முனீஸ் காந்த் ஆகியோரின் கதாபாத்திரங்கள் பொருத்தமாக அமைந்துள்ளன.

ஒளிப்பதிவாளர் மற்றும் இசையமைப்பாளர் சாம் சிஎஸ் படத்துக்கு கூடுதல் பலம்.  ஆக்சன் படங்கள் என்றாலே சாம் சிஎஸ் தான் என்று சொல்லும் அளவிற்கு சிறப்பாகவே இசையமைத்துள்ளார்.  இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் இந்த கதையில் தேவையில்லாத காட்சிகளும் இல்லை. சலிப்பூட்டாமலும் இருப்பது மேலும் பலம் சேர்க்கிறது.  படம் ஆரம்பம் முதல் முடியும் வரை ரசிகர்களை பரபரப்பாகவே வைத்துள்ளனர். ஆக்ஷன் ரசிகர்களுக்குப் பிடிக்கும்.