‘ தனுசு ராசி நேயர்களே’ விமர்சனம்

 அஸ்ட்ராலஜி மேல் நம்பிக்கை உள்ள நாயகனுக்கும் அஸ்ட்ரானமி மேல் ஆர்வமுள்ள  நாயகிக்கும் காதல் .அதாவது செவ்வாய் தோஷம் பார்க்கும் நாயகனுக்கும் செவ்வாய் கிரகத்துக்கு செல்ல நினைக்கும் நாயகிக்கும் இடையில் நிகழும் காதல் அதன் போக்கு முடிவு பற்றிய கதைதான் தனுசு ராசி நேயர்களே. இயக்குநர் சஞ்சய் பாரதி


 ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை உள்ளவர் அர்ஜுன்(ஹரிஷ் கல்யாண்). வீட்டை விட்டுவெளியே வரக் கூட நல்ல நேரம் பார்க்கும் ரகம். அவரின் ஜோதிட குரு பாண்டியராஜன். கன்னி ராசி பெண் அதுவும் வேறு மாநிலத்தை சேர்ந்தவரைத் திருமணம் செய்தால் உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என்று பாண்டியராஜன் அர்ஜுனிடம் கூறுகிறார்.

அர்ஜுன் கன்னி ராசி பெண்ணைத் தேடி அலைகிறார். அப்பொழுது அவர் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. கன்னி ராசி பெண் கிடைக்காமல் அல்லாடுகிறார் அர்ஜுன்.  நாயகனின் அம்மா(ரேணுகா), மாமா (முனிஸ்காந்த்) ஆகியோர் எவ்வளவோ சொல்லியும் அர்ஜுனுக்கு ராசி தான் முக்கியமாகத் தெரிகிறது. அப்படி ஒரு  கன்னி ராசி பெண் வருகிறாள்.ஆனால் அவளோ இதையெல்லாம் நம்பாதவள். செவ்வாய் கிரகத்துக்கு செல்ல நினைக்கும் பெண்.இப்படி துருவ முரண்பாடு கொண்ட காதல் என்னானது என்பதே படம்.

பளிச்சென்ற ஒளிப்பதிவு, போரடிக்காத அளவான பாடல்கள் ,கவர்ச்சியான நாயகி சார்ந்த காட்சிகள்,மித வேகத்தில் செல்லும் கதை என ஒரு முழு வணிக படத்திற்கான அனைத்து அம்சங்களும் இதில் உள்ளன. மொத்தத்தில் இந்த தனுசு ராசி நேயர்களே படம் சகல ராசிக்காரர்களுக்கும் பொழுதைப் போக்கும் . அப்படி கமர்சியலாக இயக்கியுள்ளார் புதுமுக இயக்குநர் சஞ்சய் பாரதி இளமை ததும்பும் இப்படம் மசாலா விரும்பிகளுக்குப்பிடிக்கும்.