‘தெறி’ விமர்சனம்

Theri-Movie-Stills விஜய்-சமந்தா-எமிஜாக்சன் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் பெரிய எதிர்பார்ப்புடன்  வெளியாகியுள்ளது.
தானுண்டு தன் வேலையுண்டு என கேரளாவில் பேக்கரி கடை நடத்தி வருகிறார் விஜய். குழந்தை நைனிகாவை வளர்த்து வரும் அவர் எந்த சண்டை, சச்சரவுக்கும் வம்பு தும்புக்கும் போகாமல் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து  வாழ்கிறார். நைனிகா அவரை பேபி.. பேபி என அழைக்கிறாள்.விஜய்க்கு  உதவியாளராக மொட்டை ராஜேந்திரன். நைனிகா படிக்கும் பள்ளியில் ஆசிரியையாக வரும் எமி ஜாக்சனுக்கு  நைனிகாவைப் பள்ளிக்கு கொண்டுவந்து விடும் விஜய் மீது ஒரு கண்.

ஒருநாள், எமி ஜாக்சனுக்கும் ரவுடி ஒருவனுக்கும் பிரச்சினை வருகிறது. ஒருமுறை நைனிகாவை எமி ஜாக்சன் ஸ்கூட்டியில் அழைத்துச் செல்லும்போது, அவள்மீது மோதி விபத்து ஏற்படுத்தி விடுகிறான் அந்த ரவுடி. இதில் இருவரும் சிறு காயத்துடன் தப்பிக்கிறார்கள்.

இதனால், அந்த ரவுடி மீது எமி ஜாக்சன் போலீசில் புகார் கொடுக்கிறார். ஆனால், போலீஸ் ஸ்டேஷனுக்கு வர விஜய் தயங்குகிறார். இதனால், ரவுடி மீதான புகாரையும் வாபஸ் பெற முடிவெடுக்கிறார்.
theri-4இருப்பினும் போலீஸ் அந்த ரவுடியை கைது செய்ய இவரை புகார் கொடுக்க சொல்லி வற்புறுத்தவே, அப்போது, அங்கு வரும் போலீஸ்காரர் ஒருவர் விஜய் மீது சந்தேகப்படுகிறார். அப்போது விஜய்யை அவரது பழைய பெயரைச் சொல்லி அழைக்கிறார். அப்போது விஜய் முகத்தில் ஏற்படும் உணர்வு மாற்றத்தைப் பார்த்து எமி ஜாக்சன் அவர் மீது சந்தேகப்படுகிறார்.  இணையதளத்தில்  தேடும்போது விஜய் பற்றிய பழைய உண்மைகள் வெளியே வருகிறது.

இதன்பிறகு, இரண்டு வருடங்களுக்கு முன்பு என்று பிளாஸ்பேக் எனப்படும் முன்கதை விரிகிறது. விஜய் சென்னையில்  துணை ஆணையாளராக ,உயர் போலீஸ் அதிகாரியாக இருக்கிறார். இவருக்கு உதவியாக நான் கடவுள் ராஜேந்திரன். அம்மா ராதிகா மீது பாசம் கொண்ட பையனாக இருக்கும் விஜய், அநீதி கண்டு பொங்கும் நேர்மையான அதிகாரியாக வலம் வருகிறார். இவருக்கும் டாக்டராக வரும் சமந்தாவுக்கும் முதல் சந்திப்பே மோதலில் ஆரம்பிக்க பின்னர், ஒரு புரிதலில் அவர்மீது காதல் கொள்கிறார்.

இந்நிலையில், தன்னுடைய பெண் இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போய்விட்டாள் என்று ஒரு பெரியவர் விஜய்யிடம் புகார் கொடுக்கிறார். விசாரிக்கும்போது, அந்த பெண் யாரோ ஒருவனால் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டிருப்பதை அறிகிறார். உயிருக்குப் போராடிய நிலையில் அவளை கண்டுபிடித்து ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார் விஜய். மரணம் நெருங்கும் தருவாயில் குற்றவாளி யார் என்பதை அந்த பெண் கடைசி வாக்குமூலமாக கொடுத்துவிட்டு இறந்துபோகிறாள்.

குற்றவாளி மிகப்பெரிய அரசியல்வாதியான மகேந்திரனின் மகன் அஸ்வின் என்பது தெரிகிறது.ஆனால் கைது செய்ய முடியவில்லை.ஆளையே காணோம் என்கிறார்கள். அந்த குற்றவாளி அஸ்வின் கிடைத்தானா?

விஜய்க்கும் அவரது குடும்பத்துக்கும்  அரசியல்வாதி மகேந்திரனால்அடுத்து என்ன பிரச்சினைகள் ஏற்பட்டன? ஏன் கேரளாவில் அவர் யாருக்கும் தெரியாமல் வாழ்ந்து வருகிறார்? விஜய்யுடன் இருக்கும் நைனிகா யார்? என்பதுபோன்ற பல கேள்விகளுக்கு இடைவேளைக்கு பிறகு தெறிக்கும் காட்சிகளுடன்  பதில்களை விவரித்திருக்கிறார்கள்.

முதல்பாதி முழுவதும் விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்தவே ஒவ்வொரு காட்சியையும் படமாக்கியிருக்கிறார் இயக்குநர் அட்லி.  படத்தின் ஆரம்பத்தில் லேசாக வளர்ந்த தாடி, பின்னால் ஜடை முடி என அவரது கெட்டப் ரசிகர்களை கவர்கிறது. அதன்பிறகு, போலீஸ் உடையில் வரும்போது அவரது கெட்டப் செம மிடுக்கு.

தன்னுடைய பங்குக்கு முடிந்தவரை ஸ்டைலாக நடித்து ரசிகர்களை திருப்திப் படுத்தியிருக்கிறார் விஜய். குறிப்பாக, ‘ஜித்து ஜில்லாடி’ பாடலில் அவரது அனாயாசமான  நடனம்  ரசிகர்களுக்கு  நல்ல விருந்தாக இருக்கும். மேலும், விஜய், சூவிங்கத்தை கையில்வைத்து ஸ்டைலாக தட்டி வாயில் போடும் காட்சிகள் எல்லாம் ரசிகர்களுக்கு பிடிக்கும். அதேபோல், ஆக்ஷன் காட்சிகளையும் விஜய்க்கே உரித்தான ஸ்டைலில் படமாக்கி ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்.

இந்தப் படத்தில் குறிப்பிடும்படியான நபர் மீனா மகள் குழந்தை நைனிகா. படம் முழுக்க வந்து  நைனிகா குழந்தைத் தனமாக பேசிக் கொஞ்சிக் கொஞ்சிக் கவர்கிறாள்.  அந்தச் சுட்டியிடம்  நடிப்பை அழகாக வாங்கியிருக்கிறார் இயக்குநர். விஜய்யோடு, நைனிகா சேர்ந்து செய்யும் பாசப்பொழிவுகள்,குறும்புகள் எல்லாம் ரசிக்க வைக்கின்றன..

பார்முலா கதையாகத் தோன்றி னாலும் விஜய்க்கு ஏற்ற சட்டையாக தைத்து கொடுத்து இருக்கிறார் அட்லி.விஜய் பல்வேறு தோற்றங்களில் வந்தாலும் அவருக்கே உரிய நடிப்பை அழகாக வாங்கி வெற்றி பெற்றுள்ளார் அட்லி .

எமி ஜாக்சன் வித்தியாசமான தோற்றத்தில்வந்து ரசிக்க வைத்திருக்கிறார். ஏன் இவருக்கு இவ்வளவு சிறிய பாத்திரம் என்று யோசிக்கும் போது ஆரம்பத்தில் ஒருசில காட்சிகள் வந்தாலும், பிற்பாதியில் அவருடைய கதாபாத்திரத்திற்கு நிறைவை கொடுத்திருக்கிறார் அட்லி. ராதிகா சரத்குமார் காமெடி அம்மாவாக வந்து ரசிக்க வைத்திருக்கிறார். இன்னமும் குழந்தை மாதிரியான நடிப்பு தன்னிடம் இருக்கிறது என்பதை இந்த படத்தில் நிரூபித்திருக்கிறார்.பிரபு உயர் போலீசு அதிகாரியாக வருகிறார்.

மொட்டை ராஜேந்திரன் விஜய் கூடவே வந்து கலகலப்பு பகுதியைக் கவனித்துக் கொள்கிறார்.விஜய்க்கு சமமாக அவருடைய கதாபாத்திரத்தையும் அழகாக உருவாக்கியிருக்கிறார் அட்லி.

வில்லன் கதாபாத்திரத்தில் வரும் இயக்குநர் மகேந்திரன் நல்ல வில்லன் வரவு.அரசியல்வாதி வானமாமலையாக வந்துஅலட்டிக் கொள்ளாமலேயே  அள்ளுகிறார். மிகவும் எதார்த்தமாக நடித்திருக்கிறார். இவர் ஒவ்வொரு முறையும் வசனங்கள் பேசும்போது வெளிப்படும் உடல்மொழி ரசிக்க வைக்கிறது.  வில்லனாக வந்தாலும்  ஆழமாக எல்லார்  மனதில் பதிகிறார்.

சமந்தா அழகு பதுமையாக காட்சி தருகிறார். இவருடைய சின்ன சின்ன முகபாவனைகள்கூட ரசிக்க வைக்கின்றன.

நாட்டில் நடந்த  உண்மை நிகழ்வுகளை தைரியமாக கையிலெடுத்து அதில் எந்த தவறும் நேர்ந்திடாதவாறு நேர்த்தியாக படமாக்கியிருக்கிறார். அதேபோல், வசனங்களும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்திருக்கிறது.

தன் கனவு என்ன என்று சமந்தா கூறும் இடம் இதம். பெண்பார்க்கப் போன இடத்தில்  குடும்பம் எப்படி இருக்க வேண்டும்  என்றும் , மாமனார் சம்மதத்துடன்தான் தன் திருமணம் என்ற  விஜய் கூறுவதும் மனதைத் தொடும் இடங்கள்.

சலிப்பு தட்டாத திரைக்கதை, ஆங்காங்கே அளவான அழகான வசனங்கள் என அட்லி நம்மை இட்லி போல எளிதாகவே கவர்ந்து விடுகிறார்.
ஜி.வி.பிரகாஷ் தன்னுடைய 50-வது படத்தை சரியாக அமைத்துக்கொண்டார் எனலாம். பாடல்கள் போலவே பின்னணி இசையிலும் அசத்தியிருக்கிறார். ஜார்ஜ் சி.வில்லியம்சின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்கபலம்.

 

இன்றைய சூழலில்  தன்னை மறைத்து  மறைந்து ஒரு ஆள் வாழ முடியுமா என்பவை போன்ற சில கேள்விகளைத் தவிர்த்தால் படத்தை ரசிக்கலாம் .படத்தில்கதையும் தொழில்நுட்பமும் கைகுலுக்கும் இடங்கள் பலவுள்ளன .அவை சபாஷ் போட வைக்கின்றன.

மொத்தத்தில் ‘தெறி’ ஒரு முழுமையான கமர்ஷியல் படம்.