நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை : தனுஷ்

danush-shஅண்மையில் தனுஷ் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு தனுஷ் அளித்த பதில்களும் இதோ:

கதாநாயகிகளுக்கு சிபாரிசு செய்வீர்களா?

ஒரு கதாநாயகன், இந்த கதைக்கு இந்த கதாநாயகி பொருத்தமாக இருப்பார் என்று தயாரிப்பாளர்-இயக்குநரிடம் யோசனை சொல்வது சரியா, தவறா? நீங்கள் அப்படி சிபாரிசு செய்தது உண்டா? என்கிறீர்கள்.
என்னைப் பொறுத்தவரை, நான் எந்த கதாநாயகிக்கும் சிபாரிசு செய்வதில்லை. அதை இயக்குநர் முடிவுக்கே விட்டு விடுகிறேன். கதாநாயகிகள் விஷயத்தில், நான் தலையிடுவதில்லை. எந்த யோசனையும் சொல்வதில்லை. ஒரு சில படங்களில், என் ஜோடியாக நடிக்கும் கதாநாயகி யார்? என்பதை படப்பிடிப்பு தளத்துக்கு போனபின்தான் தெரிந்து கொண்டிருக்கிறேன். ‘மரியான்’ படத்தில் அப்படித்தான் நடந்தது. படப்பிடிப்பு தளத்துக்குப் போன பிறகுதான் அந்த படத்தின் கதாநாயகி பார்வதி என்று எனக்கு தெரிய வந்தது.

 உங்கள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் நீங்கள் மீண்டும் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா?

அதற்கு ஐஸ்வர்யா எனக்காக கதை எழுத வேண்டும். அந்த கதை எனக்கு பிடித்திருந்தால், நடித்தாலும் நடிக்கலாம்.

 அவருடைய  இயக்கத்தில் நடிக்க ஏன் தயக்கம்?

ஐஸ்வர்யா டைரக்ஷனில் நான் நடித்தால், இரண்டு பேருமே வீட்டில் இருக்க முடியாது. யாராவது ஒருவர் வீட்டில் இருந்தால்தான் குழந்தைகளை கவனிக்க முடியும். வேறு ஒன்றுமில்லை.

இந்தி படங்களில் நடிப்பது அதிக சம்பளத்துக்காகவா, பெரிய அளவில் பிரபலமாகவா?

இரண்டுமே கிடையாது. தமிழ் படங்களை விட, இந்தி படங்களுக்கு குறைந்த சம்பளம்தான் வாங்குகிறேன். சினிமாவுக்கு இன-மொழி பேதம் கிடையாது. அந்த வகையில், இன்னொரு மொழியில் நடித்தோம் என்ற திருப்திக்காகவே இந்தி படங்களில் நடிக்கிறேன். நான் நடித்து வெளிவந்த இரண்டு இந்தி படங்களுக்குமே அங்கே நல்ல வரவேற்பு கொடுத்தார்கள். இந்தி பட உலகை சேர்ந்தவர் கள் என்னிடம் அன்பாகவே நடந்து கொண்டார்கள்.’’

இவ்வாறு தனுஷ் கூறினார்.