‘பட்டாம் பூச்சி’ விமர்சனம்

ஹென்றி ஷாரியார் என்கிற மரண தண்டனைக் கைதி பட்டாம்பூச்சி என்ற பெயரில் தன் நாவலில் பிரபலமடைந்தார்.அந்த நினைவில் இந்தப்படத்திற்குப் பட்டாம்பூச்சி என்று பெயரிட்டுள்ளார்கள் போலிருக்கிறது.

செய்யாத கொலைக்காக தூக்கு தண்டனை பெற்று சிறையில் இருக்கும் ஜெய், தன்னை தூக்கிலிடுவதற்கு முன்பு, தொடர் கொலைகள் செய்த பட்டாம் பூச்சி என்ற சைக்கோ கொலையாளி நான் தான் என்ற உண்மையை சொல்கிறார். அவர் எதற்காகத் தொடர் கொலைகள் செய்தார், எப்படிச் செய்தார் போன்ற தகவல்களைச் சேகரித்து அந்த வழக்கை 30 நாட்களுக்குள் முடிக்க முடிவு செய்யும் காவல்துறை அந்த பொறுப்பை இன்ஸ்பெக்டர் சுந்தர்.சி-யிடம் ஒப்படைக்கிறது.

விசாரணையை மேற்கொள்ளும் சுந்தர்.சி-யிடம் உண்மையைச் சொல்ல சில நிபந்தனைகளைப் போடும் ஜெய், அதையே தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி தனது புத்திசாலித்தனத்தால் தன்னை நிரபராதி என்று நிரூபித்து விடுதலையாகி விடுகிறார். ஜெய் தான் சைக்கோ கொலையாளி என்பது தெரிந்தும் சட்ட ரீதியாக அவரை எதுவும் செய்ய முடியாத நிலையில் இருக்கும் சுந்தர்.சி, விடுதலையான ஜெய்யின் தொடர் கொலைகளை தடுத்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக்கதை.

ஆரம்பத்தில் வேகமாக நகர்வதோடு, சில இடங்களில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி சுவாரஸ்யமாக நகரும் படம், சில நிமிடங்களுக்கு பிறகு நம் நம்பிக்கையை பொய்யாக்கி விடுகிறது. கதை நொண்டி அடிக்க ஆரம்பித்து விடுகிறது.

சுந்தர்.சி போலீஸ் இன்ஸ்பெக்டராக வழக்கமான பாணியில் நடித்திருக்கிறார். காதல் காட்சிகளில் சுமாராக நடித்திருந்தாலும் ஆக்‌ஷன் காட்சிகளில் கலக்குகிறார். என்னதான் சுந்தர்.சி நாயகனாக நடித்தாலும் அவருடைய பாத்திரம் சில இடங்களில் பலவீனமாக இருக்கிறது.

வில்லனாக நடித்திருக்கும் ஜெய், நடிப்பில் வில்லத்தனத்தை காட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால் அது எடுபடவில்லை.

நாயகியாக நடித்திருக்கும் ஹனி ரோஸ், படத்தின் இறுதிக்காட்சியில் மட்டும் வருகிறார். அதிலும் சில இடங்களில் அவர் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் தேவையில்லாதது.

இமான் அண்ணாச்சியின் பாத்திரமும், அவர் கொலை செய்யப்படும் காட்சியும் மிகப்பெரிய லாஜிக் மீறல்.

நவநீத் சுந்தரின் இசையும், கிருஷ்ணசுவாமியின் ஒளிப்பதிவும் படத்திற்கு ஏற்ப பயணித்திருக்கின்றன. சுருக்கமாகவும், வேகமாகவும் சொல்ல வேண்டிய கதையை நீட்டி, பல இடங்களில் சலிப்படைய செய்திருக்கிறார் படத்தொகுப்பாளர் பென்னி ஆலிவர்.

எதிர்பாராத திருப்புமுனைகளும், மிரட்டும் சஸ்பென்ஸ் த்ரில்லர் காட்சிகளும் இல்லாத ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக இப்படத்தை இயக்கியிருக்கும் இயக்குநர் பத்ரி, ஜெய் மற்றும் சுந்தர்.சி இருவருக்கும் இடையே நடக்கும் மோதலை வைத்துக்கொண்டு சைக்கோ த்ரில்லர் படத்தையே சராசரி மசாலாப் படமாக கொடுத்திருக்கிறார்.

இதைப் பீரியட் படமாக எடுத்த இயக்குநர் பத்ரியின் இந்த புத்திசாலித்தனம் திரைக்கதை அமைப்பில் இருந்திருந்தால் படம் ரசிக்கும்படி இருந்திருக்கும்.