‘பலே வெள்ளையத்தேவா’ விமர்சனம்

bvtதன்னுடைய கம்பெனி புரொடக்ஷன்ஸ் சார்பில் கிராமராஜன் சசிகுமார் நடித்து தயாரித்துள்ள படம். அவருடன் தான்யா, கோவைசரளா,ரோகிணி, சங்கிலிமுருகன் நடித்துள்ளனர்.இயக்கம் சோலை பிரகாஷ்.

வேலை இல்லாத வெற்று வாலிபர் சசிகுமார் . போஸ்ட் மாஸ்டரான தன் அம்மா ரோகிணிக்கு மாற்றல் உத்தரவு வரவே  அம்மாவும் மகனும் மதுரைக்குப் பக்கம் வழுதூருக்கு வருகிறார்கள். அங்கேயிருக்கும் ‘செல்பி’ காத்தாயி என்னும்  பெண்மணிதான் கோவை சரளா. அவரது கணவர் சங்கிலி முருகன் . அவர்களது வீட்டில் சசி குடும்பத்தினர் குடியேறுகிறார்கள்.

ரோகிணியின் அப்பா  ஒரு டிவி பைத்தியம்.வரும்போதே டிஷ் ஆண்ட்டனாவை கொண்டு வருகிறார்.  அதே ஊரில்  வளவன், கேபிள் டிவி நடத்துகிறார். அந்த ஊரில் யார் டிஷ் ஆண்ட்டனா வைத்தாலும் அவர்களை மிரட்டி டிஷ்ஷை எடுக்க வைத்துவிட்டு தன்னிடம் கேபிள் கனெக்ஷன் வாங்க வைத்துவிடுவார். இவருக்கு அந்த ஊர்ப் பஞ்சாயத்து தலைவரும் ஆதரவு .

அதே ஊரில் வசிக்கும் கறிக்கடை பாயான பாலாசிங்கின் மகள் தான்யா. இவரைப் பார்த்தவுடன் வழக்கமான நாயகர்கள் போலவே சசிகுமாரும் காதல் கொள்கிறார் . தான்யா முதலில் மறுத்து, பின்பு காதலுக்குப் பச்சைக்கொடி காட்டுகிறார்..

இந்த நேரத்தில் டிஷ் ஆண்ட்டனா விஷயத்திற்காக ஊர்த் தலைவர் ரோகிணியை தனது வீட்டிற்கு அழைத்து,  அவமானப்படுத்தி அனுப்பி வைத்ததுடன்  ரோகிணி வீட்டிற்கும் வந்து  டிஷ் ஆண்ட்டனாவை தூக்கிச் செல்கிறார்கள் அவரது ஆட்கள் .

வெகுண்டெழும் தாய் ரோகிணி மகன் சசிகுமாரிடம் அவர்களை அடிக்கச் சொல்கிறார். தாய் சொல்லைத்தட்டாத சசிகுமாரும் அவர்களைப் பின்னிப் பெடலெடுக்கிறார். இது போலீஸ் கேஸாகி சிறைக்குச் செல்கிறார் சசி. இதனால் அவரது அரசு வேலைக் கனவும் கலைகிறது.

சிறையிலிலிருந்து வெளியே வரும் சசிகுமார் இனிமேல் வளவனை ஒரு  வழி செய்கிறேன்  என்று  சவால் விடுகிறார். அப்படியென்ன செய்து சாதிக்கிறார் ? தான்யா, சசிகுமாரின் காதல் என்னாகிறது என்பதே மீதிக்கதை..!

ஒரு சாதாரண டிஷ் ஆண்ட்டனா, கேபிள் டிவி மோதலையே மையமாக வைத்து கதையை நகர்த்தியிருக்கிறார் இயக்குநர். இதனால் படத்தில் பரபரப்பு குறைவாக  உள்ளது.

நல்ல கிராமத்துப்பின்புலம் இருக்கும் போது இந்தச் சின்னக் கதையை இன்னமும் அழகாக எடுத்திருக்கலாம்..

 

படத்தில் அனைத்து பாத்திரங்களுமே விளையாட்டுத்தனமாக இருப்பது ஏனோ?முக்கியமாக கோவை சரளா  ஒரு பொறுப்பான பாட்டியாக இருக்க வேண்டியவரை பழைமைவாதி போல காட்டியிருக்கிறார் இயக்குநர். அவர் நடிப்பில் சின்ன ஆச்சி தான். . அதற்காக இப்படிப் பக்கம், பக்கமாக இவ்வளவு நீளமான வசனங்களைக் கொடுத்துப் பேச வைக்கத்தான் வேண்டுமா? சலிப்பூட்டச்செய்து விடுகிறார்கள்.

சங்கிலிமுருகனை சகட்டுமேனிக்கு அனைவருமே ‘டேய்’ போட்டுத்தான் பேசுகிறார்கள். இது என்ன மாதிரியான கலாச்சாரம்?

தான்யாவை காதலில் விழ வைக்க பெண் சாமியாரிடம் சசிகுமாரை அழைத்துப் போகிறார் கோவை சரளா. அந்த சாமியார்  சொல்லும் யோசனை அநாகரிக ரகம். எப்படித்தான் இயக்குநர் இப்படியெல்லாம் யோசிக்கிறார்?

இதைவிட பெரிய கொடுமை..  தான்யாவின் அம்மா புகைப்படத்தை வைத்து இயக்குநர் செய்திருக்கும் காமெடி.சசிகுமார் முழுமையாக கதை, திரைக்கதையை கேட்டுத்தான் இந்தப் படத்தில் நடிக்க வந்தாரா? அவருக்கான அளவு சட்டையா இது? அளவு மாறியுள்ளது போல உள்ளது.

அவ்வளவு நேரமும் மகளின் காதலுக்கு எதிர்ப்பாக இருக்கும் அம்மா, திடீரென்று எப்படி கணவரை எதிர்த்து  மகளின் காதலுக்கு எப்படி துணை போகிறார்..? பாலாசிங் ஏன் இப்படி எதற்கெடுத்தாலும் அரிவாளுடன் சண்டைக்கு வருகிறார்..? இப்படிப்பல கேள்விகள் அலையடிக்கின்றன.

சசிகுமாரிடம் இன்னமும் எதிர்பார்த்தோம். அவரது குறைந்த பட்ச உத்திரவாத தரம் இதில் காணப்படவில்லையே ஏன்?வளவன் கோஷ்டியினரை சசிகுமார் பொளந்து கட்டும் அந்தக் காட்சியில் சண்டை பயிற்சியும், படத் தொகுப்பும்  பிரமாதம்.

ரோகிணியும் , நாயகி தான்யாவும் அளவான நடிப்பு. .

 

ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு அற்புதம். அத்தனை அழகாக அந்தக் கிராமத்தை ப் படம் பிடித்திருக்கிறார். ..

தர்புகா சிவாவின் இசையில் பாடல்கள் மிதமாக இருக்கின்றன.

‘பலே வெள்ளையத்தேவா’ வில் வீரமுண்டு ஈரமில்லை.